"என் தேசத்தை; அதன் மீதான ஆக்ரமிப்பை; அது குற்றப் பின்னணி உடையவர்களாலும் யுத்த வெறியர்களாலும் ஆளப்படும் அவலத்தை; அமெரிக்காவின் அப்பட்டமான சுயநல வெறியை; சுரண்டலை வெளிஉலகுக்குத் தெரிவிக்க அனைத்து உபாயங்களையும் நிச்சயம் மேற்கொள்வேன்" என்கிறார் அந்தப் பெண். உலகின் மிக தைரியமான பெண் என்றும் பாராட்டப்படுகிறார் அவர்.
உலகின் சக்தி வாய்ந்த 100 பேரில் ஒருவராக, கடந்த மே மாதம் டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்திருந்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் பெயர் மலலாய் ஜோயா. ஆஃப்கனிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். "எனது நாடு, அதன் முன்னேற்றம் குறித்து பெரும்கனவுகளைச் சுமந்தலைகிறேன்" என்கிறார்.
லோயா ஜிர்கா எனப்படும் ஆப்கன் மக்களவைக்கு 2007 ஆம் ஆண்டு, தன்னுடைய 28 வயதில் தேர்தல் வெற்றி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் மிக இளவயது நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ஆக இருந்த ஜோயாவை, அவருடைய மூன்று நிமிட உரையை எதிர்கொள்ள முடியாத ஆஃப்கன் நாடாளுமன்றம் பதவிபறிப்பு செய்து அவரை வீட்டுக்கு அனுப்பியது. ஆனால் ஜோயாவின் பயணம் அதிலிருந்து தான் தொடங்கிற்று எனலாம்.
பன்மைச் சமுதாயங்களும் மனித உரிமைகளும் என்கிற தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் கலந்துகொள்ள கனடாவின் மாண்ட்ரியல் நகரிலுள்ள மெக் -கில் பல்கலைக்கழகத்திற்கு கடந்த செப்டம்பரில் ஜோயா வந்திருந்தார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சட்டநிபுணர்கள், அரச தந்திரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று உயர்நிலையில் உள்ள பலரும் கலந்துகொண்ட கருத்தரங்கு அது.
மாண்ட்ரியல் கருத்தரங்கில் இவருடைய உரையைக் கேட்ட ஒட்டாவா பல்கலை பேராசிரியர் டெனிஸ் ரான்கோர்ட் இப்படி எழுதுகிறார்: "இவருடைய உரை ஒரு கூரிய ஆயுதமாகச் செயற்பட்டு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நேச நாடுகளின் போர்ப்பிரச்சார கடின வலையை சுக்குநூறாகக் கிழித்தெறிந்துவிட்டது. நம்முடைய எம்.பிக்கள் இவரிடம் பாடம் படிக்கவேண்டும்"
ஒபாமா சமாதானத்துக்கான நோபல் பரிசு வாங்கிய சமயம், ஜோயாவை முன்னிறுத்தி பிரபல மனித உரிமை ஆர்வலர் நோம் ச்சோம்ஸ்கி இப்படி குறிப்பிட்டார்: "நோபல் கமிட்டிக்கு என்ன நேர்ந்துவிட்டது, ஜோயா போன்ற எளிய வாய்ப்புகள் இருந்தும் கூட ...."
"எங்கள் விடுதலை வேட்கை நூறாண்டுகளைக் கடந்தது. கண்ணியமும் நீதமும் நிரம்பியது. ஆனால் அது மிக நீண்டதொரு பெரும் போராட்டம். சிறுதுளிகள் சேர்ந்தே பெருவெள்ளமாகும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன். எங்கள் மக்கள் மட்டும் நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் ஒன்றுபட்டு விடுவார்களேயானால் அது காட்டாற்று வெள்ளமாகிவிடும். யாராலும் தடுத்துநிறுத்த முடியாது" என்கிறார் ஜோயா.
"சிறுசிறு இனவாதப் பிரச்னைகளாலும், குழுச்சண்டைகளாலும் சிதறுண்டுப் போகாமல், நாட்டுநலன் நாடி பொதுஎதிரிக்கு எதிராக ஆஃப்கனியர் ஒன்று திரளவேண்டும்"
"தாலிபன்களையும்,அல்-காய்தாவையும் காரணம் காட்டி அமெரிக்கா சுரண்டலை மேற்கொள்கிறது. உண்மையில் தீவிரவாதத்திற்கெதிரான போர், தீவிரவாத வளர்ச்சிக்கே வித்திட்டது" என்கிறார் ஜோயா.
உள்நாட்டில் பலத்த ஆதரவையும் அரசியல் எதிர்ப்பையும் கணிசமான அளவு சம்பாதித்து வைத்திருக்கும் ஜோயா, ஒருசமயம் முஜாஹிதீன்களைப் பற்றி குறிப்பிட்டதும் சர்ச்சையை உண்டாக்கியது: "இரண்டு விதமான முஜாஹிதீன்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் நாட்டு விடுதலை என்கிற இலக்கு நோக்கி மனப்பூர்வமாகப் பாடுபட்டனர். அவர்களை மதிக்கிறேன். ஆனால் மற்றொரு தரப்பினர் பதவிச் சண்டைக்காக சொந்த நாட்டின் 60,000 மக்களை கொன்று குவித்தவர்கள்......". உடனடியாக கம்யூனிஸ்ட் முத்திரை இவர்மீது குத்தப்பட்டது. இவருடைய தந்தையோ முஜாஹிதீன்களுடன் சேர்ந்து சோவியத் ரஷ்யாவின் ஆக்ரமிப்பை எதிர்த்துப் போரிட்டு ஒருகாலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"மெளனம் ஒருபோதும் வாய்ப்பாகாது" என்கிற ஜோயாவிடம் "பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது "நீங்கள் (பன்னாட்டு அரசுகள், சமூகம், அமைப்புகள்) எங்களுக்குச் செய்ய முடிகிற மிகப் பெரிய உதவி, அமெரிக்காவின் பின்னால் போகாமல் இருப்பதுதான்"
"நேட்டோ படைகளுடன் சேர உங்கள் நாட்டுப் படைகளை அனுப்பாதீர்கள்" என்று உடனடியாக விடையிறுக்கிறார்.ஸ்வீடன் முதலான நாடுகளுக்கு இதே கருத்தை வலியுறுத்தி சுற்றுப்பயணமும் ஜோயா மேற்கொண்டிருந்தார்.
நான்கு முறைக்கும் மேல் தன் மீது நடத்தப்பட்ட மரணத்தாக்குதல்களிலிருந்து தப்பியிருக்கும் ஜோயா, பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார். "உங்கள் பயணத்தில் நீங்கள் கண்டது என்ன?" என்று கேட்டால், "மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையே இருக்கும் தூரம்தான், அது கடக்க இயலாததாக மாறிவருகிறது" என்று பதிலளிக்கிறார்.
ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின் கருத்தரங்கு ஒன்றிற்காக ஜோயா இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.
- இப்னு ஹம்துன், சவூதி.
1 comment:
இடிந்த தேசத்திலிருந்து மட்டுமல்ல இடித்தழிக்கப்பட் என் தேசத்திலிருந்தும் அவலக்குரல்கள் நவீன உலகத்தால் சுயநலன்களுக்காக அமுக்கப்ட்டு விட்டது.
Post a Comment