Monday, October 18, 2010

க்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 1

ஹலோ அன்பர்களே!

முன்னர் கூறியிருந்தபடி, இவ்வாரத்திலிருந்து க்ராஃபிக்ஸ் குறித்து சிறிது சிறிதாக நாம் பயிலப்போகிறோம். இப்பயிற்சி நெறியில் அடோபின் இல்லஸ்ட்ரேட்டர்(Illustrator) மற்றும் ஃபோட்டோஷாப்(Photoshop) ஆகிய இரு வரைகலை மென்பொருள்களைப் பயன்படுத்துவதைப் பட விளக்கங்களுடன் காண்போம்.
 ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்கு எழும் சந்தேகங்களைத் தயக்கமின்றி எழுதுங்கள். சந்தேகங்கள் இல்லாமல் ஒவ்வொரு பாடத்தையும் தெளிவாக செய்முறையுடன் விளங்கி, அடுத்தடுத்தப் பாடத்துக்குச் சென்றால் நீங்களும் இத்துறையில் ஜமாய்க்கலாம் என்பதை மறக்க வேண்டாம்.

முதல் பாடத்தினுள் நுழையுமுன், Adobe Photoshop மற்றும் Adobe Illustrator பற்றிச் சில அடிப்படை விஷயங்களை இங்கு காண்போம். Adobe Photoshop படங்கள் சார்ந்த ஒரு மென்பொருளாகும். அதே சமயம் Adobe Illustrator கோடுகளை அடிப்படையாகக் கொண்ட மென்பொருளாகும்.

உதாரணத்திற்குக் கீழ்கண்ட படங்களைப் பாருங்கள்...
Adobe Photoshop
 Adobe Illustrator
Adobe Photoshop மற்றும் Adobe Illustrator முறையே 7 மற்றும் எட்டாவது பதிப்புகள்(Versions) அதற்கு முந்தைய பதிப்புகளை விட, பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும் பல சிறப்பான செயலிகளைத் தன்னகத்தே கொண்டதாகவும் விளங்குகின்றன.

கணினி இயங்குதளம்(operating system) Windows வரிசையில் Windows 98 மற்றும் XP யைத் தொடர்ந்து தற்போது Windows 7 பயன்பாட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று பிரபலமாகத் திகழ்வதை அறிவீர்கள். ஆனால் அதன் இடைப்பட்ட வெர்ஷன்களான 2000, vista போன்றவற்றால் பயன்பாட்டாளர்களுக்கு எளிமை(User Friendly)யாக திகழ முடியவில்லை.

windows 7 பிரபலமாக இருக்கும் இக்காலத்திலும் XP மட்டுமல்லாமல் Windows 98 ஐ கூட உபயோகித்துக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுபோன்றே, Adobe நிறுவனத்தின் Creative Suite 5 (CS5) பதிப்பு வெளியாகியுள்ள இந்தக் காலத்திலும் பழைய 7 பதிப்புகளையே விரும்பி உபயோகிப்பவர்கள் உள்ளனர்.

1. தங்களுடையப் பணிகளுக்குப் பழைய பதிப்பு போதுமானது.
2. புதியப் பதிப்பின் அதிக விலை
3. புதிய பதிப்பினை இலகுவாகப் பயன்படுத்த இயலுமா என்ற சந்தேகம்
4. தாம் பயன்படுத்தும் கணினிகளில் புதுவகை பதிப்புகளை இன்ஸ்டால் செய்ய முடியாத நிலை.

போன்ற ஒரு சில காரணங்களே அவ்வாறு புதிய பதிப்புகளுக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களாகும்.

இந்நிலையில் நாம் எந்தப் பதிப்பைப் படிப்பதற்குத் தேர்வு செய்வது என்றொரு சிறு குழப்பம் ஏற்படும். அதிகம் குழம்ப வேண்டிய தேவையில்லை. "காலம் கண் போன்றது!". வேகமாக நகரும் காலத்தில் உட்கார்ந்திருக்கும் நமக்குக் காலத்தின் முக்கியத்துவம் குறித்து நன்றாகத் தெரியும்.
மிகப் பழைய பதிப்புகள் எப்போதுமே வேகத்துக்கு ஈடுகொடுக்காது. புதிய பதிப்புகளைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு, ஆளாளுக்குக் கூறக்கூடிய காரணங்களைப் புறம் தள்ளிவிட்டு ஒவ்வொரு நொடியும் விலைமதிக்க முடியாதது என்று முடிவுக்கு வந்துவிட்டால் பழைய கணினிகள் குப்பைக்குப் போகும். புது கணினி வந்தால் வேலை (இலக்கு) நேரம் குறைவாகிவிடும். அது போன்றே, மென்பொருட்களில் புது பதிப்புகள் மூலம் வியக்கத்தக்க வேலைகளை முன்பைவிட மிக எளிதில் செய்து முடிக்க இயலும்.

வேகம், அதிக வசதி, எளிமை இவற்றை அடிப்படையாகக் கொண்டால், க்ராஃபிக்ஸ் கற்றலுக்கு Creative Suite 4 (CS4) -ஐ நாம் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம். Creative Suite 5 (CS5) ஐ விட, 4 எளிமையாக இருக்கும் காரணத்தால், Creative Suite 4 (CS4) ஐ நாம் கற்பதற்குத் தேர்வு செய்துள்ளோம்.
கணினி  ->  கண்ட்ரோல் பேனல் -> அப்ளிகேஷன்  -> இன்ஸ்டால் செய்தல் -> அதை திறத்தல் போன்ற கணினியின் அடிப்படை பாடங்களுக்குச் செல்லாமல்(கணினியை உபயோகிக்கத் தெரியாதவர்களுக்கு, கணினி என்றால் என்ன? என்ற அடிப்படையிலிருந்தே எளிமையான மற்றொரு தொடரைக் கொடுக்கலாம். எத்தனை பேருக்கு அது தேவை என்பது தெரியும்பட்சத்தில்.....), அவரவர் கணினியில் creative suite 4 இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதாகக் கருதி, நேரடியாக (இன்ஸ்டால் செய்துள்ள) போட்டோ ஷாப்பிலும் இல்லஸ்ட்ரேட்டரிலும் நுழைகின்றேன்.

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விஷயங்களில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் எழுந்தால் jothi@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற முகவரிக்கு எழுதுங்கள்)

Adobe Photo Shop ஐ திறந்தால் கீழ்கண்டவாறு முகப்புப் பக்கம் கிடைக்கும்.
படத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட பகுதி மெனு பார் (Menu Bar) எனப்படும். மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட பகுதி டூல் பார் (Tool Bar) எனப்படும். பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட பகுதி பேலட்  (Pallets) எனப்படும்.
Adobe Illustrator ஐ திறந்தால் கீழ்கண்டவாறு முகப்புப் பக்கம் கிடைக்கும்.
படத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட பகுதி மெனு பார் (Menu Bar) எனப்படும். மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட பகுதி டூல் பார் (Tool Bar) எனப்படும். பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட பகுதி பேலட்  (Pallets) எனப்படும்.
அடிப்படையில் Tool - Menu - Pallets ஆகியவைகள் ஒரே மாதிரியானவையே. அடுத்தடுத்த பாடங்களில் இவற்றின் உபயோகங்களை விளக்கப்படத்துடன் ஒவ்வொன்றாகக் காணலாம்.

துவங்கி விட்டோம்! எது ஒன்றையும் துவங்குவது என்பது எளிது. முறையாகவும் சீராகவும் அதனைத் தொடர்ந்து வெற்றிகரமாக முடிப்பது என்பது சற்று சிரமமானதே. க்ராஃபிக்ஸ் முழுக்க படத்தையும் வரிகளையும் அடிப்படையாகக் கொண்டவையாதலால், அனைத்தும் பட விளக்கங்களுடனே நாம் கற்க இருக்கிறோம். எனவே நாம் கற்கிறோம் என்ற எண்ணமே வராத வகையில் இலகுவாகவே பாடங்கள் இருக்கும். இருப்பினும் எந்த ஒரு பாடத்தையும் வெற்றிகரமாக பயில்தல் என்பது, பொறுமையாக நாம் எடுக்கும் பயிற்சியிலேயே அடங்கியுள்ளது.

சிறுவயதில் கராத்தே வகுப்புக்குச் செல்வோம். தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சியும் 20 நிமிடங்கள் கராத்தே பாடங்களும் இருக்கும். நானும் சிறு வயதில் அவ்வாறு ஒரு கராத்தே வகுப்புக்குச் சென்றிருக்கிறேன். எங்கள் குழுவில் வந்திணைந்த ஒருவருக்கு ஆரம்பத்தில் செய்யும் நீண்ட நேர உடற்பயிற்சி போரடித்தது. நேரடியாக மாஸ்டரிடம் சென்று, "மாஸ்டர், மாஸ்டர் எனக்கு சண்டைப் பயிற்சியை மட்டும் சொல்லிக்கொடுங்களேன்" என்றார். சிரித்த எனக்கு இரண்டு அடி விழுந்தது. கேட்டவருக்கு அடி விழவில்லை; சீட்டு கிழிந்தது!

கவலை வேண்டாம், ஆன்லைனில் யாருடைய உதவியும் இன்றி இப்பாடத்தைப் பயில இருக்கும் நமக்கு, இடையில் அவசரப்பட்டால் அடி விழவோ, சீட்டு கிழியவோ வாய்ப்பில்லை. எந்த ஒன்றைப் படிக்க வேண்டும் என்றாலும் அதற்கு உரிய பயிற்சிகளும் பொறுமையும் வேண்டும் என்பதைச் சொல்லவே இதனைக் குறிப்பிட்டேன். ஆரம்ப விளக்கப் பாடங்கள் சற்று பொறுமையைச் சோதித்தாலும், அவசரம் காட்டாமல் நிதானமாகச் செல்வோம். நாளை நீங்களும் க்ராபிக்ஸ் துறை வல்லுனர் தான்!

விரைவில் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்...Source : http://inneram.com/2010101311158/graphics-training-part-1

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails