Sunday, October 3, 2010

வணங்காமுடி பதில்கள் (03-10-2010)





ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2006 ஐ வெற்றிகரமாகத் தன் நாட்டில் நடத்தியப் பின்னர் இப்போது உலகக்கோப்பை கால்பந்து 2022 ஐ தன் நாட்டில் நடத்த கத்தார் என்ற மிகச் சிறிய வளைகுடா நாடு நடத்த முயற்சி செய்து வருவதாக அறிந்தேன். இது போன்ற பெரிய போட்டிகள் நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்காதது ஏன்? - சாதிக் பாட்சா, சிதம்பரம்

இப்போது நடக்கும் காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் உள்ள குழப்பம் ஓர் உதாரணம்.

பாபர் மசூதி ஒன்றும் புனிதத்தலம் கிடையாதுதானே. இந்திய முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டி அவர்கள் விட்டுக் கொடுத்தால் என்னவாம்? - ஜோதி, குத்தாலம்
பாபர்மசூதி புனிதத் தலமா இல்லையா என்பதை முஸ்லிம்கள் முடிவு செய்து கொள்வார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் வழிபாட்டுத்தலம் புனிதம்தான்.

"முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, பால்தாக்கரே, நரேந்திரமோடி ஸ்டைலில் உருவாகும் இழப்பா?

விட்டுக்கொடுப்பதா அல்லது போராடி மீட்பதா என்பது வழக்கில் தொடர்புடையவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

நமது தளத்தில் "ரஸ்ஸல் எழுதிய அலசலி"ல் சொல்லியுள்ளபடி, முஸ்லிகளுக்கு விட்டுக்கொடுத்து இந்துக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தலாமே?


சில நேரம் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறுவது கிடையாது. நான் என்ன காமடி பீஸா.....? :) :) - சிம்ரன், ஆதங்கபுறம்.

வினாக்கள் வரும் வரிசை, வினாவின் தரம், வினா எழுப்பும் பிரச்சனை போன்றவற்றின் அடிப்படையிலேயே விடைகள் அளிக்கப்படுகின்றன.

உங்கள் பெயரும் ஊர்ப்பெயரும் உண்மையானவைதாமா?

என்னைக் காமெடி பீஸ் ஆக்குவதற்காகத் தரப்பட்டவையா?


ப.சிதம்பரம் கிளப்பி விட்டிருக்கும் 'காவித் தீவிரவாதம்' பிரச்னை பற்றி வணங்காமுடியாரின் கருத்து? - சேதுபதி, நீடாமங்கலம்."கிளப்பி விட்டிருக்கும்" என்ற உங்களின் சொற்கள் சிதம்பரத்தின் கூற்று மெய்யில்லை என்ற பொருளைத் தருகிறது.

தீவிரவாதிகளையும் அவர்களின் திட்டங்களையும் செயல்களையும் அறியும் இடத்தில் இருக்கும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஊடகங்களும் அவற்றை வெளிப்படுத்தியுள்ளனவே?

அயோத்தியில் இருந்த பாபரி மசூதியின் வழக்கு 1942இல் தொடங்கியது என்றும் முடிவாக 68 ஆண்டுகள் கழித்து வரலாற்றுப் புகழ் பெறப்போகும் தீர்ப்பு 2010இல் வரவிருக்கிறது என்று என் இஸ்லாமிய நண்பர் கூறுகிறார். முதல் வழக்கு 1942இல் போடப்பட்டதா? - மெய்யப்பன், காரைக்குடி
அயோத்தியில் மசூதி கட்டப்பட்ட காலம் முதல் அவ்விடத்தில் இரு மதத்தினரும் வழிபட்டுவந்தனர் என்பதாக பிரிட்டிஷாரின் சில ஆவணங்கள் கூறுகின்றன.

1885ஆம் ஆண்டில் ரகுபர்தாஸ் எனும் பூசாரி மசூதியின் வெளிப்புறத்தில் ராம் மந்திர் கட்டுவதற்கு நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் ஃபைஜாபாத் மாவட்ட நீதிபதி பூசாரியின் மனுவைத் தள்ளுபடி செய்து, கீழே கண்டபடி உத்தரவிட்டார்:--

I visited the land in dispute yesterday in the presence of all parties. I found that the Masjid built by Emperor Babur stands on the border of Ayodhya, that is to say, to the west and south it is clear of habitations. It is most unfortunate that a Masjid should have been built on land specially held sacred by the Hindus, but as that event occurred 356 years ago, it is too late now to agree with the grievances.

(Court verdict by Col. F.E.A. Chamier, District Judge, Faizabad (1886)

கெட்டுப்போகக் கூடிய கிட்டங்கியில் உள்ள உணவு தானியங்களை ஏழைகளுக்கு தர மாட்டேன் என சரத்பவார் கூறுவது ஏன்?- அருள், தமாம்.
"ஏழைகளிலும் பரம ஏழைகளாக உள்ளவர்களுக்கு ''அந்தோதயா அன்ன யோஜனா'' (A A Y) திட்டத்தின் கீழ் அரசு கிலோ பதினாறு ரூபாய் விலையில் கொள்முதல் செய்யும் கோதுமையை கிலோ இரண்டு ரூபாய்க்குக் கொடுப்பதால் இலவசமாகக் கொடுக்க முடியாது" என சரத்பவார் கூறுகிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் அதில் தலித்துகள் பூசை செய்ய முடியுமா? - முருக பூபதி, தஞ்சாவூர்

ராமாயணம் படித்துள்ளீர்களா?

சம்பூகன் கதை தெரியுமா?

முதலில் உள்ளூர்க் கோயில்களில் அந்த உரிமையைப் பெற முயலுங்கள்.


தமிழ்களுக்கென்று வரலாறு கிடையாதுன்னு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மதன் தன்னுடைய ஹாய் மதன் பகுதியில் கூறியிருந்தது குறித்து உங்கள் கருத்து? - அழகப்பன், மலேசியா.சில ஆண்டுகளுக்கு முன் சொன்ன கருத்தைச் செம்மொழி மாநாட்டுக்குப் பின் மாற்றியிருப்பார்.


வரதட்சணை வாங்குவது குற்றமில்லை என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதானா? - காதர், குவைத்.வரதட்சணைக்கு எதிரான சட்டம் அமுலில் இருக்கும் நாட்டில் மாண்புமிகு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் ஏ.பி.பட்நாயக் அடங்கிய பெஞ்ச் வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு வியப்பளிப்பதால் வினா எழுப்பியுள்ளீர்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு வரதட்சணைச் சாவு வழக்கில், அப்பெண்ணின் மரணம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால்தான் நிகழ்ந்தது என அரசுத்தரப்பு தக்க சான்றுகளுடன் நிறுவாததால், அப்பெண்னின் மாமியாரையும் மைத்துனனையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கும்போது, "வரதட்சணை கொண்டுவா" என்று சொல்வதால் மட்டும் யாரையும் தண்டிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

வரதட்சணைக் கொடுமை எனப் பதிவாகும் வழக்குகளில் 90 விழுக்காடும் மாமியாரையும் நாத்தனாரையும் பழிவாங்கவும் கணவனை மிரட்டவுமே போடப்படுகின்றன எனச் சில ஆய்வுகள் கூறுகின்றன.

இப்புகார்களால் கண்ணியமான குடும்பத் தலைவர்கள் பெண்காவலர்களால் இழிவு படுத்தப்படுவதும் மாளிர் காவல் நிலையங்களில் கட்டைப்பஞ்சாயத்து நடப்பதுமே அதிகம்.

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source ; http://www.inneram.com/2010100310989/vanagamudi-answers-03-10-2010

No comments: