Saturday, October 30, 2010

வணங்காமுடி பதில்கள் (31-10-2010)






இத்தனை ஊழல்களுக்கு நடுவிலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன வணங்காமுடியாரே? - மகேஷ், கடலூர்.

ஊழல் அரசியல்வாதிகளை முற்றாக விளையாட்டிலிருந்து ஒழித்துவிட்டால் முதலிடம் தொலைவில் இல்லை.

முன்னர் இதுபோன்ற ஒரு வினாவுக்கு விடை அளித்துள்ளதையும் காண்க!

மதுரையில் அழகிரியின் செல்வாக்கு தற்போது எவ்வாறு உள்ளது? - கோமளவல்லி, பெங்களூரு.
எப்போதும்போலதான் உள்ளது; குறையவில்லை.

தேர்தல் வெற்றி தோல்விதான் செல்வாக்கை நிரூபிக்கும்.


என்ன தான் நாடு முன்னேறினாலும் ஏழை மக்கள் மென்மேலும் ஏழைகளாகத்தானே போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை மாற வழியே இல்லையா? - ஷபீர், நாகர்கோவில்.

நாம் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையில் இதுதான் நடக்கும். கொள்கை மாற வேண்டும்.


ஈராக் போரில் மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது பற்றி? - காஸிம், பல்லாவரம்.உண்மைகள் உறங்கா!

"கோட்டையிலே ஒரு ஆலமரம், அதில்
கூடுகட்டும் ஒரு மாடப்புறா" என்று கண்ணதாசன் பாட்டு எழுதியிருக்கிறார்.

மாடப்புறா மரங்களில் கூடுகட்டுமா?
- வசீகரன், பட்டுக்கோட்டை.
கவிஞர்கள் சொல்வதற்கெல்லாம் விடை தேடாதீர்கள்.

‘கவிதையை அனுபவிக்க வேண்டும்;  ஆராயக்கூடாது’ என எங்கேயோ படித்துள்ளேன்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய அப்பாடலில் அனைத்து மாடப்புறாக்களும் வந்து ஆலமரத்தில் கூடு கட்டுவதாகக் கூறவில்லை. மாடத்தில் வாழும் ஒரு புறா ஆலமரத்தில் கூடுகட்ட வருவது சிறப்புச் செய்தியாகும் -- 'நாடோடி' 'மன்னனாவது' போல. அப்பாடலில் குறிப்பிடப்பட்ட புறா ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் குறியீடாக இருக்கலாம்.

திரைப்படப் பாடல்களில் இதுபோல அடிக்கடி நிகழும்.

கண்ணதாசன் யாருக்கும் வெட்கமில்லை திரைப்படத்தில்,"மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்; நீ சொன்னால் காவியம்" என்று தொடங்கும்  பாடலில்,

"அப்பன் தவறு பிள்ளைக்குத் தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை; அத்தனை பேரையும் படைத்தானே - அந்தச்
சிவனுக்கும் வெட்கமில்லை"

என்று எழுதியிருந்தார்.. பாடல் படத்திலும் வந்து விட்டது. படைப்பவன் பிரம்மனல்லவா? அழிப்பவன் தானே சிவன் என ஒரு வினா எழுந்தது.

கவிஞர் முத்துலிங்கம், கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் "மாஞ்சோலைக் கிளிதானோ" என்ற பாடலில் "வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ" என எழுதினார். தென்னந்தோப்பு என்பதைப்போல்  வேப்பந்தோப்பு எனக் கூறுவது கிடையாது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது,

“தென்னை மரக்கிளை மீதில் - அங்கோர்
செவ்வாய்ப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி - அது
“ஜிவ்”வென்று விண்ணிடை யூசலிட்டேகும்”

என்று பாரதி எழுதியிருக்கிறாரே; தென்னை மரத்தில் ஏது கிளை?” என்றார்.

இப்படி நிறையச் சொல்லலாம். அதற்கு வ மு விடைப்பகுதியில் இடம் போதாது.

அடுத்த தேர்தலில் பாமக எந்த கூட்டணியில் சேரும், வணங்காமுடியாரே? - அன்புமனி பித்தன், விழுப்புரம்.
ராமதாஸ் இங்கும் அங்கும் அலைமோதுகிறார். இருவாரங்களுக்கு முன் அவரே சொன்னதுபோல, "போயஸ்தோட்டத்துக்கும் கோபாலபுரத்துக்கும் மாறிமாறிப் போகிறார்".

இன்றைய வானிலை அறிக்கைப்படி காற்று கருணாநிதியின் பக்கம் வீசுகிறது.

நாளை ?

"தெலுங்கானாவை எதிர்த்து செயல்பட்டால் கொல்வேன்" என்ற விஜயசாந்தி விடுதலை; "தமிழனைச் சுட்டால் சிங்களவனைக் கொல்வேன்" என்ற சீமானுக்குச் சிறை; என்னய்யா அநியாயம்? - தமிழ்நேசன், தமிழகம்.

விஜயசாந்தி ஆந்திர மாநிலத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

சீமான் தமிழகத்தில் சிறையில் உள்ளார்.

விஜயசாந்தி வழக்கின் தன்மை வேறு.

விஜயசாந்தி மீது தே பா சட்டம் பாயவில்லை.

சீமான் மீது பாய்ந்துள்ளது. அவர் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் முன்னர் ஒரு முறைச் சிறையில் இருந்ததையும் கணக்கில் கொண்டு இவ்வழக்கு என நினைக்கிறேன்.



ஒரு புறம் அம்பானி உலகின் மிக காஸ்ட்லியான வீட்டிற்குக் குடி போகும் அதே இந்தியாவில் தான் பசி கொடுமையில் வாடுபவர்களும் அதிகம். ஏன் இந்த முரண்பாடு - அருணா, திருச்சி.இந்த முரண்பாடு இந்தியாவில் மட்டும் இல்லை; உலகில் பல நாடுகளிலும்  உள்ளதுதான்.

இந்தியர்கள் பசிக்கொடுமையால் வாடும்போது ஏன் இத்தனை பெரிய ஜனாதிபதி மாளிகை, மாநிலங்கள் தோறும் ஏன் பெரிய ஆளுநர் மாளிகை, அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஏன் கப்பல் போன்ற வெளிநாட்டுக் கார்கள் என நீங்கள் வினவியிருந்தால்  பொருள் உண்டு.

முரண்பாட்டுக்குக் காரணம் அரசின் செயல்பாடுகளே!

நாட்டின் வளங்களை முறையாகப் பயன்படுத்தித் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்காமை; முறையாக உணவுப் பங்கீடு செய்யாமை  போன்றவயும் பசிக்கொடுமைக்குக் காரணங்களாகலாம்.

அம்பானி பணக்காரர் பட்டியலில்  இந்தியாவின் நம்பர் ஒன்' உலகின் நம்பர் ஃபோர். அவர் வணிகம் செய்து வளமாக வாழ்கிறார். அரசுக்கு வரிகளும் செலுத்துகிறார்; ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார். அவர் உலகின் மிக காஸ்ட்லியான வீட்டிற்குக் குடி போவதில் மற்றவர்கள் கருத்துச் சொல்வது தேவையற்றது.


முஸ்லிம்களால் அரசியலில் பிரகாசிக்க அல்லது நிலைத்து நிற்க முடியாமைக்கு காரணம் அரசியல் அறிவின்மையா அல்லது சமுதாய ஒற்றுமையின்மையா? - ஃபைஸல், ரியாத்.மத்திய அரசின் முன்னாள் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத், முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் ஜாகிர் உசேன், ஃபக்ருதீன் அலி அகமது, இப்போது குடியரசுத் துணைத்தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரி, பீகாரின் முதல்வராக இருந்த அப்துல் கபூர், மராட்டிய மாநில முதல்வராக இருந்த அந்துலே, கேரளகேசரி முகமது கோயா, கர்நாடகத்தைச் சேர்ந்த ஜாபர்ஷரீஃப், பாண்டிச்சேரி ஃபாரூக் மரைக்காயர், காஷ்மீரில் ஷேக் அப்துல்லா, ஃபாரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முப்தி முகமது செயது, குலாம்நபி ஆசாத், சர்க்காரியா கமிஷனால் குற்றம் சாட்டப்படாத, தமிழகத்தில் ஊழல் கறை படியாத  ஒரே அமைச்சர் எனப் புகழ்பெற்ற சாதிக்பாட்சா, லிபர்ஹான் கமிசன் அறிக்கை விவாதத்தில் ஆணித்தரமாக தன் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் என அரசியலில் பிரகாசித்துப் பெரும் பதவிகளை அலங்கரித்த/ அலங்கரித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களை உங்களுக்குத் தெரியாதா?


என் கேள்விக்கு எப்போது பதிலளிப்பீர்கள் வணங்காமுடியாரே? - வணங்காமுடி பித்தன், சேலையூர்.வினா என்னவென்றே தெரியாதபோது விடை எப்போது என எப்படிச் சொல்ல முடியும் பித்தா?

இதுவே உங்கள் வினா எனில் விடை "இதோ!"
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010103011571/vanagamudi-answers-31-10-2010

No comments: