Thursday, October 14, 2010

மனம் மகிழுங்கள்-18

நூருத்தீன் 

வெயிலும் மழையும் போல இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. மாறி மாறி வரும். சில நேரங்களில் வானிலை அறிக்கை தவறாகி விடுவிதைப் போல் இவை சற்றுத் தாமதமாக மாறலாம்; ஆனால் மாறும்! எனவே துன்பம் என்பது என்ன; அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்; மகிழ்வை எப்படித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று சில விஷயங்களைக் கூறுகிறார்கள்.
நிச வாழ்க்கையில் எல்லாம் இன்ப மயமும் இல்லை; துன்ப மயமும் இல்லை. அனைத்தும் சரியாக அமைந்து வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது, அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாரா இடர் வரும். பிரிவு, உயிரிழப்பு, தொழில் நட்டம்! குறைந்தபட்சம் காலில் ஆணியாவது குத்திவிடும்! அப்படி நிகழும் இடர் பேரிழப்பாயிருந்தால், "எல்லாம் போச்சு! இனி வாழ்க்கையில் என்ன இருக்கு?" என்று விரக்தியின் விளிம்பிற்கே சென்று விடுவோம். ஆனால், அடுத்து சில நாளோ, மாதமோ, வருடமோ கழிந்தபின் அதிலிருந்து மீண்டு எழுந்து வரத்தான் செய்வோம்; வாழ்க்கை மாறத்தான் செய்யும்.

பெருந்துயர் என்று அன்று நினைத்ததைக் கடந்து வந்து இன்று திரும்பிப் பார்க்கும்போது அந்தத் துயரின் வீரியம் இன்று இருக்காது; கவனித்திருக்கிறீர்களா? சிலசமயம் அதை நினைத்து அசைபோட்டுச் சிரிப்பதும் நடக்கும்.

ஏன்? எப்படி? மனசு தான். வேறென்ன?

வாழ்க்கையின் இடைஞ்சலான தருணங்களில் மனம் முழுதாய் நிதானத்தைக் கடைபிடிப்பதில்லை. நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் பிரச்சனையை அதன் அளவைவிட அதிகமாய் உருவகித்துக் கொள்கிறது. ஆங்கிலத்தில் out of proportion என்பார்கள். எனவே அத்தகையவர்களுக்கு எதிர்காலமே கேள்விக் குறியாகி, தென்படுவதெல்லாம் பிரச்சனை, பிரச்சனை, மேலும் பிரச்சனை!
இது படு அபத்தம் என்கிறார் ஓர் உளவியலாளர்.
"என்னது, அபத்தமா? அவரவருக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்" என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் அவர் உதாரணத்துடன் விளக்குகிறார்.

அலுவலோ எதுவோ ஒரு வார காலத்திற்குப் பயணம் செல்லவேண்டியிருக்கிறது. அதற்கு ஒருவர் மூன்று பெட்டிகளில் துணிமணிகள், ஒரு பெரிய பெட்டி நிறைய சோப்பு, பேஸ்ட், பல் துலக்க ஒரு டஜன் ப்ரஷ், என்று எடுத்துக் கொண்டால் என்ன சொல்வோம்? குடும்ப சமேதராய் பயணமா என்றால் இல்லை.

"அப்படியானால் அது முட்டாள்தனம்," என்பது எளிய பதில்.

அதேதான் மனதிற்கும்! அடுத்த இருபத்தைந்து வருடத்திற்கான கவலைகளை மனதில் சுமந்து கொண்டு திரிந்தால் மனம் என்னவாகும்? அந்த மனதை நினைத்து நாம் பரிதாபப்பட வேண்டாம்? ஒருநாளைக்கு இருப்பதே இருபத்து நாலு மணிநேரம் எனும்போது, இன்றைய பொழுதிற்கும் வேண்டுமானால் கொஞ்சமாய் நாளைய பொழுதிற்கும் யோசித்தால், கவலைப்பட்டால் போதாது? அதை நாம் செய்வதில்லை.

படவேண்டிய கவலையை அளவு பிரித்துச் சிறிதாக்கிக் கொண்டால் மனம் அதற்குத் தீர்வு காண்பது எளிது. இன்று இன்றையப் பிரச்சனையைத் தீர்ப்போம், மற்றதை நாளை பார்ப்போம் என்று நினைத்தாலே பிரச்சனை பாதிக்குமேல் குறைந்துவிடும்.

அடுத்த முறை ஒரு பிரச்சனை தோன்றினால் முக்கியமாய் ஒரு கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம் - "இது தலைபோகும் பிரச்சனையா?"

எத்தனை முறை நம் அனுபவத்தில் தலைபோகும் பிரச்சனையைச் சந்தித்திருப்போம்? ஆனால் மனது மட்டும் ஒவ்வொரு முறையும் "தலையே போச்சு" என்றுதான் கன்னத்தில கைவைத்துக் கொள்கிறது!

"சுவாசிக்கத் தேவையான காற்று இருக்கிறதா?", "இன்று உண்பதற்குப் போதிய உணவு இருக்கிறதா?" என்பதற்கு நாம் "ஆம்" சொல்லிவிட்டால் அதிலேயே பிரச்சனை தீர்ந்து விடுகிறது. உலக உருண்டையில் இன்னும் சில பகுதிகள் உள்ளன. அங்கும் சில மனிதர்கள் வாழ்கிறார்கள். நாம் தினமும் உண்ணும் வகைவகையான உணவை யாராவது அவர்களுக்கு ஃபோட்டோவில் காண்பித்தால்தான் உண்டு! அத்தகைய அபாக்கியம் நமக்கு இல்லாத நிலையில் மற்றவையெல்லாம் அடுத்தக் கட்டப் பிரச்சனைகளே. அவை தீர்க்கத் தகுந்தவை, மறக்கத் தகுந்தவை, புறந்தள்ளக் கூடியவை என்ற வகையறாக்களில் அடங்கிவிடும். எனவே நாம் ஏன் மன மகிழ்வைப் புறந்தள்ளி வாழ வேண்டும்?

நம்முடைய அவசியத் தேவைகளை மீறிய சில்லறைப் பிரச்சனைகளுக்கெல்லாம் மனதை வருத்தி இன்பத்தைத் தொலைக்கக் கூடாது.

உற்சாக சீலர் ஒருவரை அவரின் நண்பர் தொலைபேசியில் அழைத்தார். "எல்லாம் முடிந்தது; என் தொழிலில் போட்ட என்னுடைய பணம் அத்தனையும் காலி. நான் இப்போ போண்டி, திவால்."

இவர் கேட்டார்: "உன்னால் பார்க்க முடிகிறதா?"

"நல்லாத் தெரியுது."

"நடக்க முடிகிறதா?"

"முடிகிறது."

"உன்னால் கேட்க முடிகிறது என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். இல்லையென்றால் எனக்கு போன் செய்திருக்க மாட்டாய்."

"ஆம்."

"பிறகென்ன? உன்னிடம் எல்லாம் பாக்கி இருக்கிறது. நீ தொலைத்தது வெறும் பணத்தை."

புரிகிறதோ? அதுதான் சூட்சுமம். எந்த நிலையிலும் தொலைந்தது என்னவென்பதைச் சரியாக அவதானித்துவிட்டால் மனம் மகிழ்வைத் தொலைக்காது.

இதையே சற்று மாற்றியும் சொல்லாம். "நமக்கு நடக்கவே கூடாது, அப்படி நடந்தால் நம் வாழ்க்கை முடிந்தது" என்று நாம் நம்பும் பிரச்சனை என்ன என்பதை ஒவ்வொருவரும் கேட்டு அதற்குரிய நியாயமான பதிலை மனதிலிருந்து பெற வேண்டும். அந்தப் பதிலுடன் அவரவருடைய பிரச்சனைகளை ஒப்பிட்டுக் கொண்டால் பிரச்சனையின் சரியான பரிமாணம் புலப்படும். யதார்த்த வாழ்க்கையில் நாள்தோறும் நாம் எதிர்கொள்வன பிரச்சனைகள் என்பதைவிட அசௌகரியங்களே! சிறியது முதல் பெரிய அளவிலான அசௌகரியங்கள். அதைத்தான் மனமானது மாய்ந்து மாய்ந்து உருப்பெருக்கி வருந்தி மகிழ்வைத் தொலைக்கிறது.

மனவியலாளர்கள் சில டிப்ஸ் அளிக்கிறார்கள். நாமும் முயன்று பார்க்கலாம். உடம்பில் அலர்ஜி, அரிப்பு எதுவும் ஏற்படாது என்பது உத்தரவாதம்!


*  "என்னை நானே மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறேனோ?" என்று உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு விஷயத்திற்காக ஒருவாரமாய்த் தூக்கமின்றி நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை உங்களின் நண்பர் சட்டையே பண்ணாமல், மெது பக்கோடா தின்று காபி குடித்துக் கொண்டிருப்பார்.

* ஏதோ உலகில் உள்ளவர்கள் அனைவரும் நம்மையே கவனித்துக் கொண்டிருப்பதைப் போலவும் நம்மைப் பற்றிப் புறம் பேசவே காத்திருப்பதைப் போலவும் சிலர் நினைத்துக் கொண்டு வாழ்க்கையைப் படுசீரியஸாக ஆக்கிக் கொள்வதும் உண்டு. பக்கத்து வீட்டில் தேவையின்றி எட்டிப்பார்ப்பது, மூக்கை நுழைப்பது மனித இயல்பாக இருக்கலாம். ஆனால் அதற்காக? அவரவருக்கும் வாழ்க்கை படுபிஸியாக நகர்ந்து கொண்டிருக்க, மற்றவர்கள் குந்தவைத்து உட்கார்ந்து ஏதோ சினிமா பார்ப்பதுபோல் நம் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து வருந்தி மகிழ்வைத் தொலைத்தல் கூடாது.



* எந்தச் சிக்கலான பிரச்சனையானாலும் "இந்த நிகழ்வினால் நான் படித்த பாடம் என்ன?" என்று சுய ஆய்வு செய்து கொள்ளுதல் நல்லது. அது நமக்கு பாடம் கற்க உதவும். பக்குவம் வளரும். உற்சாக மனிதர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் அனுபவம் பெற்றுத் தங்களுடைய மகிழ்வான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் செயலிலும் நடையிலும் உற்சாகம்! முகத்தில் எப்பொழுதும் சிரிப்பு. "எப்படியும் சமாளித்துவிடலாம், ஜெயித்து விடலாம்," என்பது அவர்களது ஆழ்மன நம்பிக்கை வாசகம்.

* எந்தத் தீவிரமான பிரச்சனையானாலும் "அடுத்த ஐந்து நிமிடத்திற்கு என்னால் அமைதியாய், சாந்தமாய் இருக்க முடியுமா?" என்று கேட்டுக் கொள்ளுங்கள். அப்படி அடுத்த ஐந்து நிமிடங்களைக் கடந்துவிட்டால், அடுத்த ஐந்து நிர்ணயித்துக் கொள்ளவும். இப்படி சில ஐந்துகளைக் கடந்ததுமே அந்தப் பிரச்சனை ‘ஒரு மேட்டரே இல்லை’ என்பீர்கள்.

* தொடர்ந்து ஆக்கபூர்வ வேலைகளில் மும்முரமாய் இருக்கப் பழகிக் கொள்வது மன ஆரோக்கியம் வளர்க்கும் வழியாகும். தன்னிரக்கம், அதிகமான மன உளைச்சல் இவையெல்லாம் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான சிந்தனையின் பின் விளைவுகள் என்பதால் அதற்கெல்லாம் மனதிற்கு அவகாசம் அளிக்கக் கூடாது.
* இதையும் தாண்டி மற்றொன்று இருக்கிறது. தன்னலம் கருதா உதவி. பிறருக்கு உதவக் களமிறங்கினாலே பாதிக்கும் மேலான பிரச்சனைகள் தீர்ந்து விடும். நீங்கள் ஒருவருக்கு உதவி புரிந்து அதனால் அவர் முகத்தில் தோன்றும் புன்னகை இருக்கிறதே, அது உங்கள் மனதில் மகிழ்வைக் கொண்டு வந்து கொட்டும்.
கிணற்றடியில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். முகத்தில் வருத்தம். அவ்வழியே வந்த தனபால் விசாரித்தார். தமது கைக்கடிகாரம் நீரில் விழுந்துவிட்டதாக அவர் தெரிவிக்க, அவருக்கு எப்படியும் உதவியே தீருவது என்று தோன்றியது தனபாலுக்கு. அடுத்த நொடி உடனே கிணற்றுக்குள் குதித்துவிட்டார். பெரியவருக்கு ஒரே ஆச்சரியம், "காலையில் நான் ஆற்றில் குளிக்கும்போது தவறவிட்ட கடிகாரத்திற்கு இவர் ஏன் இப்பொழுது கிணற்றுக்குள் குதிக்கிறார்?"
னம் மகிழ, தொடருவோம்...
http://www.inneram.com/2010101411190/manam18

No comments: