Tuesday, October 26, 2010

அழகும் அதன் எல்லையும் !


அழகு  அதனை நினைத்தாலே அழகு
அழகினைப் பற்றி  அதிகமாக இக்காலத்தில் கவிதைகள் வந்து கொண்டிருகின்றன.அதில் அதிகமாக   பெண்களைப்பற்றியே இருக்கின்றன .ஏன் ஆண்களைப்பற்றி எழுதினால் தவரா ? அல்லது ஆண்கள் அழகானவர்கள் இல்லையா ? காரணம் அதனை யாரும் படிக்க மாட்டார்கள் .கவிஞனும் ஆண் . தன்னைதானே எப்படி புகழ்வான் .
பெண்கள்  தவறி  எழுதிவிட்டால் சமுதாயம் அந்த  பெண்ணை பார்க்கும் விதம்  வேறு .
அழகு என்பது ஒரு கடல் .அது ஒரு கற்பனை உலகம் .அழகை கண்டு ரசி ஆனால் அடைய முயலாதே என்பர். ரசித்த அழகை எல்லாம் அடைந்து விட முடியுமா! நிலாவினை ரசித்த நம்மால்  ஒரு சிலரால் மட்டும் தொட முடிந்தது ஆனால் எல்லோரும் அதனை ரசிக்க முடியும் .
அழகினை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அடைய முயல்வதிலும் ஒரு எல்லை உண்டு .அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை ஆனால் கவர்சியாக  காணப்பட  வேண்டும் என்பது முறையல்ல.
சில நேரங்களில், சிலவற்றில்  அழகினை பங்கு போட்டுக்கொள்ள முடியாது .அதற்கும் உரிமை உடையோர் உண்டு .மனைவியின் அழகு கணவனுக்கு உரிமை .மனைவி என்பவள் மற்றவருக்காக  தன்னை அழகுபடுத்திக் கொண்டால் மட்டும் எப்படி சிறப்பாக முடியும்.
கணவன் கண் நோய் வந்து பார்வை அற்ற நிலையில் மருத்துவரை காண புறப்பட மனைவியினை  அழைக்க அவள் தன்னை  அழகுபடுத்திக் கொள்வதிவதில் நேரம் செலவிட "`எனக்குத்தான் பார்வை இல்லையே பின் ஏன் இவ்வளவு நேரம்" என்று கணவன் மன வேதனையுடன்  சொல்லும்பொழுது  அழகு படுத்திக்கொள்வதிலும்  எல்லை உண்டு என்பதை அறிய முடிகின்றது.

படித்த கதை ஒன்று
 சீன ஏழை விவசாயி தன் மனைவியுடன் கடுமையாக உழைத்து பணம் ஈட்டி செல்வந்தன் ஆன பின் கடுமையாக வயலில் உழைத்ததினால் அவனது மனைவியின் அழகு குறைய அவன் வேறு பெண்ணை நாடி செல்கின்றான் . அவனது  மனைவி மிகவும் மன வேதனை அடைகின்றாள்.
பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளுக்கு சூ  மாட்டி விடும்போழுது அந்த பெண் குழந்தை வலி தாங்காமல் கதறுகின்றாள் .அப்பொழுது தாய் சொல்லும் வார்த்தை "மகளே  இந்த  வலியினை தாங்கிக் கொள் உனக்கு திருமணம் ஆன பின் உன் கால் அழகாக இல்லை என்று உன் கணவன் உன்னை விட்டு பிரிந்தால்  அந்த மன வலியினை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது
என  அழுகின்றாள்.  அந்த காட்சி
யினை நம்மாலும் தாங்க முடியாது .
 

அழகு மனதினை சார்ந்தது .இன்று இருக்கும்.  அழகு நாளை நமக்கு அது  இல்லாமல் போகலாம் . ஒரு பொருளை இன்று அழகாக  இருப்பதாக எண்ணி அதனை வாங்குகின்றோம் நாளை மற்றொரு பொருள் நமக்கு அழகாக தோன்றும் .காலத்திற்கு  காலம்  மாறுபடக்கூடியது . அழகு என்பது நிலையானது அல்ல .அது மனதினைப்  பற்றியது. உள்ளத்தின் அழகே அழகு.
 அதனால் அதற்கு எல்லையும், விலையும் உண்டு.

No comments: