Sunday, October 10, 2010

வணங்காமுடி பதில்கள் (10-10-2010)





காஷ்மீர் மக்கள் ஏன் இப்படி தேவையில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியாவின் மற்ற மாநில மக்களைப் போல 'நமக்கு விதிக்கப் பட்டது அவ்வளவுதான்' என்று விட்டுக் கொடுக்கலாம் அல்லவா?- சபாபதி, அய்யம்பேட்டை
காஷ்மீர் போராட்டம் தேவையில்லாப் போராட்டம் என எப்படிக் கருதுகிறீர்கள்.?

அம்மக்களின் உரிமைப் போராட்டம் அது. அம்மாநில மக்களுக்கு இந்தியத் தலைவர்கள் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றச் சொல்லியே அவர்கள் போராடுகிறார்கள்.

இந்தியாவின் மற்ற மாநில மக்களைப் போல 'நமக்கு விதிக்கப் பட்டது அவ்வளவுதான்' என்று நீங்கள் வினவி இருப்பதில் இருந்து பிற மாநிலங்களும் உரிமைகள் இழந்து இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் எனத் தெரிகிறது.

அப்படியில்லை. காஷ்மீர் போன்ற நிலைமை அவற்றுக்கு இல்லை. அவை சுயமாக முன்னேறவும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தம் மாநில மக்களை முன்னேற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளன.

ராஜேஷ்குமாரைப் போன்று க்ரைம் எழுத்தாளராக வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கான வணங்காமுடி அய்யாவின் ஆலோசனை என்ன? - சுகுமாரன், பள்ளியாடி
ராஜேஷ்குமாரைப்போல எழுதுவதற்கு நீங்கள் தேவையில்லை; அவரே எழுதிக் கொள்வார்.

நீங்கள் க்ரைம் கதைகள் எழுதி அவரைப்போல் புகழ்பெற வேண்டும் என நினைத்து வினா எழுப்பியுள்ளீர்கள் என்றால்... நிறையக் கற்பனை வளமும் எழுத்தாற்றலும் எழுதுவதற்கு நேரமும் இருந்து உங்கள் கதைகளைப் பதிப்பித்து வெளியிட ஆளும் கிடைத்துவிட்டால் நீங்கள் ராஜேஷ்குமாரைப்போல் என்ன; அகதாகிறிஸ்டியைப்போலக்கூடப் பெயர் பெறலாம்.
வாழ்த்துகள்.


வாசகர்களுக்கு மாய்ந்து மாய்ந்து பதிலளிக்கும் வ.மு,, பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கேள்விக்கெல்லாம் சரியாக பதிலளித்துள்ளாரா? -முகுந்தன், பல்லாவரம்

ஆசிரியர் தொடுத்த வினாக்களுக்கு சரியாக விடைகள் அளித்தது மட்டுமின்றி எதிர்வினாக்களும் எழுப்பியுள்ளார்.


நான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்?- கபாலி, சென்னை.நீங்கள் மாணவராயிருந்தால் ஒழுங்காகப் படித்துப் பட்டம் பெற முயலுங்கள்.

படித்து முடித்தவரெனில், படிப்புக்கேற்ற வேலைக்காகக் காத்திராமல் சுயதொழில் செய்யுங்கள்.

ஏதாவது நிறுவனத்தில் பணிபுரிபவராக இருப்பின் நேர்மையாகவும் திறமையாகவும் பணி புரியுங்கள்.
முன்னேற்றம் வரும்,.. கூடவே மகிழ்ச்சியும் மனநிறைவும் தொடர்ந்து வரும்.

காமன்வெல்த் போட்டிக்குளறுபடிகள் - யானைக்கும் அடி சறுக்கும் எனும் பழ மொழியா? திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் பாடலா? - துளசி, மைலோடு
முதலாவது ஆசியவிளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் 1951 ஆமாண்டில் டெல்லியில் நடந்தன. ஒன்பதாவது  விளையாட்டுப்போட்டிகள் 1982 ஆம் ஆண்டில் நடந்தன.

அதன் பிறகு இப்போதுதான் இந்தியாவிற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இருபத்தெட்டு ஆண்டுகளில் எவ்வளவோ  முன்னேறியிருக்க வேண்டிய நம் நாடு,  தேர்வுக்கு முன் தின இரவில் படிக்கும் பொறுப்பற்ற மாணவனைப் போல் நடந்து கொண்டதால், ஆஸ்திரேலியாவின் ஒலிம்பிக் கமிட்டித் தலைவர்  போன்ற பலரும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளை இந்தியாவில் நடத்த விட்டிருக்கக் கூடாது என்கின்றனர்.

யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்ல, இந்தியா ஏஸியாட் தவிர இதுபோலப் பல போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி அனுபவப்பட்டு, இப்போது அடி பிசகி இருந்தால் வாய்ப்புண்டு. அதைவிட நீங்கள் இரண்டாவதாகச் சொல்லியிருப்பது பொருத்தம் என்பதை ஊழல் புகார்கள் நிரூபிக்கின்றன.

கலைஞர் காப்பீட்டு திட்டம்னு சொல்றாங்களே, அப்படின்னா என்ன?- மலர்க்கொடி, திருநெல்வேலி.
கடந்த ஆண்டு துவக்கப்பட்ட கலைஞர் காப்பீட்டு திட்டம் என்பது ஆண்டுக்கு  72,000 ரூபாய்க்கும்  குறைவாக  ஏழை எளிய சாமானிய மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு இலட்சம் ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் நல்ல திட்டமாகும்.

இதற்கான பிரீமியத் தொகையை அரசே கட்டுகிறது.

உயிருள்ள ஒருவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்பினால் இந்திய குற்றவில் சட்டப்படி அதிகபட்சமாக எவ்வளவு தண்டனை கிடைக்கும்? - முஹ்ஸின், கோட்டாறு

உயிரோடு இருக்கும் ஒருவர் இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பினால் தண்டனை என்று நாம் அறிந்திருக்கவில்லை. எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும்போது பலமுறை,  ஏன், தற்போதைய முதல்வர் கருணநிதிக்கேகூட ஓரிருமுறை இப்படி மரண அறிவிப்புகள் வந்தன.

ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்த இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை -I P K F- விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைக் கொன்றதாகத் தமிழக நாளிதழ் ஒன்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டதோடு  தாங்கள் மட்டுமே இச்செய்தியைத் தர முடிந்தது என மார்தட்டினர்.

இவை போன்ற மரணச் செய்திகளைப் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

ஆனால் மோசடி செய்வதற்காகவோ பிறரை வஞ்சிப்பதற்காகவோ அரசை ஏமாற்றுவதற்காகவோ அல்லது குற்ற வழக்குகளில் இருந்து தப்புவதற்காகவோ இப்படிச் செய்தி பரப்பினால் கண்டிப்பாகச் சட்டம் அவர்களைத் தண்டிக்கும் என்பதில் ஐயம் இல்லை.


எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட கோரி எதிர்கட்சிகள் கூறுகிறதே? அப்படி சிபிஐயில் என்னதான் இருக்கிறது? - நாசர், தஞ்சாவூர்.மாநிலக்  காவல் துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, உளவுப்பிரிவு போன்ற பல உள்ளன. ஒரு குற்றவழக்கை உள்ளூர்க் காவல்துறை  அவர்களுக்குரிய வாய்ப்பு வசதிகளைப் பொறுத்தும் விரைந்து வழக்கை முடிக்கச் சொல்லிக் கொடுக்கப்படும் அழுத்தத்தைப் பொறுத்தும் அரசியல் மற்றும் கையூட்டுச் செல்வாக்கைப் பொறுத்தும் விசாரித்துக் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தும். அதில் சிலசமயங்களில் நிரபராதிகளும் மாட்டிக் கொள்வர். சான்றுக்கு விருதுநகர் பாண்டியம்மாள் வழக்கையும் உப்புக்கோட்டை சரோஜா வழக்கையும் எடுத்துக் காட்டலாம்.

பாண்டியம்மாளைக் கொலை செய்ததாக அவரின் கணவரைக் கைது செய்த காவல்துறை, அந்த அப்பாவியைச் சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கி அவரைக் கொலைக்குற்றவாளியாக்கி நீதிமன்றத்தில் நிறுத்தியது. தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் சினிமாவின் க்ளைமாக்ஸ் போல பாண்டியம்மாள் உயிருடன் வந்து நீதிமன்றத்தில் நின்றார்.

அதுபோல, சரோஜாவைக் கடத்திக் கற்பழித்துக் கொன்றதாக ஓர் அப்பாவி ஆட்டோக்காரனைக் கைது செய்து, வழக்கம்போல் சித்திரவதைகளுடன்  அவனிடம் வாக்குமூலம் வாங்கி வழக்குப் போட்டது காவல்துறை. அங்கு சரோஜா உயிருடன் வந்து தன்னை யாரும் கடத்தவில்லை; கற்பழித்துக் கொல்லவுமில்லை என்று கூறினார்.

இதுபோன்ற பொய் வழக்குகளில்  சிக்கும் அப்பாவிகளைக் காப்பாற்றி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய சி.பி.சி.ஐ.டி எனும் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணையும் நடக்கும்.

அந்தப் பிரிவாலும் உண்மையைக் கண்டறிய இயலாவிட்டால், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போராடினால், அந்தந்த மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி  அவ்வழக்கை மத்திய அரசு சி.பி.ஐ விச்சரணைக்கு விடும்.

சான்றுக்கு நமது அண்டை மாநிலமான கேரளத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட சேகன்னூர் மெளலவி கொலை வழக்கையும் அங்கு இன்னும் தீர்ர்ப்புக் கூறப்படாமல் 17 வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்கும் ஸிஸ்டர் அபயா கொலை வழக்கையும் கூறலாம்.

தேசீய முக்கியத்துவம் வாய்ந்த ராஜீவ்காந்தி கொலை போன்ற குற்றங்களில் அல்லது நாட்டையே உலுக்கும் பொருளாதார மோசடி வழக்குகளில்.நேரடியாக சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

முன்னர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு விட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியபோது, "சி.பி.ஐ என்ன வானத்திலிருந்தா குதித்தது?" என எள்ளலுடன் ஜெயலலிதா வினவினார். இப்போது "ஜெயலலிதாவுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்" என, தலைமைச் செயலரிடம் அ இ அ தி மு கவினரால் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது நகை முரண்.

கணவன் மனைவி தொடர்பான நகைச்சுவை ஒன்று சொல்லுங்களேன் - ஆர். சொக்கலிங்கம், தர்மபுரி.உலகத்தில் மொத்தம் நூறு வித நகைச்சுவைகளே உள்ளன என்பர். அவற்றில் இருந்து உருவாக்கப்படும் பல்லாயிரக்கணக்கான நகைச்சுவைத் துணுக்குகளுள் பல  இதற்கு முன் எங்கேயோ கேட்டவைபோலத் தோன்றும். அது உண்மையே!

குடும்பத்தில் நகைச்சுவை இழையோடினால் --கணவனும் மனைவியும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருந்தால்-- உரசல் இன்றிக் குடும்பம் நடத்தலாம்.

சான்றுக்கு நான் படித்த  ஒன்று:--

கணவனும் மனைவியும் காரில் போய்க் கொண்டிருக்கும்போது, மனைவியை மட்டம் தட்ட எண்ணிய கணவன் வழியில் கூட்டமாக நின்று கொண்டிருந்த நாய்கள் மற்றும் பன்றிகளைச் சுட்டிக் காட்டி "உன் உறவினர்கள் எல்லோரும் இங்கே கூடி நிற்கிறார்கள்" என மனைவியிடம் சொன்னான்.

கூரறிவு கொண்ட மனைவி உடனே, "ஆமாம் என் புகுந்த வீட்டுக்காரர்கள்தாம் அங்கே கூட்டமாக நிற்கிறார்கள்" என்றாள்.

வேறுவகை:--

கணவனின் மணிப்பர்ஸில் தன் ஃபோட்டோ இருப்பதைக் கண்ட மனைவி மகிழ்ச்சியோடு கணவனிடம், "என் மேல் இவ்வளவு காதலா? என் ஃபோட்டோவைப் பர்ஸில் வைத்துள்ளீர்களே?" என வினவ, "தாங்க முடியாத துன்பங்கள் பிரச்சனைகள் வரும்போது உன் படத்தைப் பார்த்துக் கொள்வேன்" என்றான் கணவன்.

"ஆஹா! அப்படியா? என் மீது இவ்வளவு பாசமா?" என்றாள்.

"இல்லை; பெரிய பிரச்சனைகள் வரும்போது உன் படத்தைப் பார்த்தால், உன்னைவிட அவை பெரிய பிரச்சனைகள் அல்ல எனத் தோன்றும்" என்றான்.

மற்றொன்று:--

கணவனும் மனைவியும் கோயிலில் வழிபடச் சென்றனர். திரும்பி வரும்போது கணவன் மனைவியிடம், "நீ கண்ணை மூடி சாமியிடம் என்ன வேண்டிக் கொண்டாய்?" என்றான்.

"இன்னும் வரும் ஏழு பிறவிக்கும் நானே உங்கள் மனைவியாக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். நீங்கள் என்ன வேண்டினீர்கள்?" என மனைவி வினவ,"இந்தப் பிறவியே என் கடைசிப் பிறவியாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்" என்றான் கணவன்.



பாபர் மசூதி தீர்ப்பு பற்றி இரண்டு நிமிடமும் உடனேயே எந்திரன் டிக்கட் விற்பனை பற்றி எட்டு, பத்து நிமிட விளக்கப்படமும் ஒளிபரப்பி மகிழ்ந்த சன் டிவி பற்றி? - சிராஜ், மேலப்பாளையம்.வணிகர்கள்  கோடிக்கணக்கில் முதலீடு செய்த தம் பொருளை விளம்பரப்படுத்துவதில் தவறில்லையே?

அவர்களிடம் இதற்கும் மேலாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

அவர்களைப் புறக்கணியுங்கள்.

வல்லரசாக ஆவதற்கு இந்தியாவிற்கு முன் உள்ள தடைகள்தான் என்ன? - செபஸ்டின், கரூர்.இப்போது ஆசியப் பகுதியில் இந்தியா ஓரளவு வல்லரசுபோலத்தான் உள்ளது.

ஊழலும் குறுகிய அரசியல் லாபத்துக்காக மக்களை மத, சாதி ரீதியாக வேறுபடுத்திப் பிரிப்பதும் ஒழிந்துவிட்டால் இந்தியா வல்லரசே!


கருணாநிதியின் குடும்ப பாசம் பெரிதா? கழக பாசம் பெரிதா? - ரமேஷ், திருச்சி.கழகம் அவருக்குக் குடும்பம் என்றாலும்சரி; குடும்பமே கழகம் என்றாலும் சரி.. அவருக்குக் கழகப்பாசம்தான் உள்ளது. தி.மு.கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவே இம்முதுமையிலும் அவர் பாடுபடுகிறார்.


அயோத்தி தீர்ப்பு காந்தியின் ஆசீர்வாதம் என்று குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளது பற்றி வணங்காமுடியாரின் கருத்து? - முஹம்மது சிராஜுதீன், கீழக்கரை.அதிலென்ன சந்தேகம்.

சங் பரிவார் தீவிரவாதி கோட்சேயால் காந்தி கொல்லப்பட்டதே இவர்களுக்கு ஆசீர்வாதம்தானே?.

ஏனெனில் இவர்களுக்கு எதிராக சத்தியாக்கிரகமோ உண்ணாவிரதமோ நடத்த இப்போது காந்தி இல்லையல்லவா?

மோடிக்கும் காந்திக்கும் குஜராத்தான் சொந்த மாநிலம் என்பது வரலாற்று முரண்.


உலகச் சிறந்த அரசியல்வாதி" பட்டம் வழங்கப்பட்ட நம் பிரதமர், அப்பட்டத்திற்குத் தகுதியானவர் தாமா? - மதிவாணன், சென்னை.பிரதமர் மன்மோகன்சிங் அரசியல்வாதி இல்லை. அதிகார வர்க்கத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டமோ அலட்டலோ இல்லாத இவரைப்போய் சிறந்த அரசியல்வாதி என்பதா? :--))
  
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.  

No comments: