தேவைகள் பூர்த்தி செய்யப்படாதமையாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. இவ்வாறு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா இன்று தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த அவர், அங்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
"தேவைகள் பூர்த்தி செய்யப்படாததாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது. வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இலங்கைக்கு வந்து தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது ஆரோக்கியமானது.
எனினும் ஜே.வி.பி. இதற்குத் தடையாக உள்ளது. எது எவ்வாறு இருப்பினும் இலங்கையில் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அத்துடன், இலங்கைப் பல்கலைகழக விரிவுரையாளர்களின் சம்பளம் குறைவு என்பதை நான் அறிவேன். அதனால் விரிவுரையாளர்களினதும், பல்கலைகழகத்தின் கல்வி சாரா ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன்.
மாணவர்களின் மஹாபொல நிதிக்கொடுப்பனவை அதிகரிக்கவும், கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விரிவுரை மண்டபம், விடுதி வசதி சிற்றுண்டிச்சாலை வசதி ஆகியவற்றை அமைத்துக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
கிழக்குப் பல்கலைகழகத்தின் திருகோணமலையிலுள்ள சித்த மருத்துவப்பீடத்தை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன..எனினும் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பேன்.
பல்கலைகழகங்களில் பகிடிவதை இடம்பெறுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை இல்லாமல் செய்வதற்கு எனக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்."
மீள்குடியேறத்துறை அமைச்சர் மீள் குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், ஏ.எஜ்.எம். அஸ்வர், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட எம்.பி. பொன்.செல்வராசா(நவம்)ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment