Monday, June 28, 2010

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

  அன்புடன் புகாரி

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்


கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் பல சுவாரசியங்களைப் புகுத்தியவர். தேன் தேன் என்று முடிவதாகவும், பால் பால் என்று முடிவதாகவும், நிலா நிலா என்று முடிவதாகவும் காய் காய் என்று முடிவதாகவும் இன்னும் சில சொற்களில் முடிவதாகவும் தேன் சொட்டும் பாடல்களை எழுதிக் குவித்தவர்.

அவர் காலத்தில் திரை இசை, குத்துப் பாட்டுக்களில் ரத்தம் கொட்டி நிற்காமல் கண்ணதாசனின் இலக்கிய தாகத்திற்கு ஏற்ப மென்மையாய் இருந்தது. அதுவே கண்ணதாசனுக்கு வசதியாய் இருந்தது.

இப்போது தேன் தேன் என்று தேன் குழைத்து எழுதிய கண்ணதாசனின் தேன் பாடல் ஒன்றை நாம் சுவைப்போமா? திரையிசைப்பாடல்களுக்குள் இலக்கியத்தை அள்ளிப் பொழிந்த அந்த இன்பத்தை காலங்கள் மாறினாலும் மாறாத சிலிர்ப்போடு அனுபவிப்போமா?

இந்தப் பாடலை கவிஞர் 1965ல் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த கே.வி.மகாதேவன் இசையில் சுசீலாவும் ஸ்ரீனிவாசும் பாடிய அற்புதப் பாடல். படம் வீர அபிமன்யு.

ஓர் அழகான காதல் காட்சி. தலைவனும் தலைவியும் முழுநிலவின் மடியில் விழுந்த வெண்ணைக் கட்டிகளாய் உருகிக் கரைந்து காதல் பொழிகிறார்கள் கண்மயங்கி கவிதை மொழிகிறார்கள். இதுதான் பாடலின் சூழல். இதற்கு கண்ணதாசன் எழுதிய முதல் மூன்று வரிகளைப் பாருங்கள்.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்


எத்தனைத் தேன்? முன்றே வரிகளில் ஏழு தேன் அதிலும் மலைத்தேன் என்று ஒரு சிலேடைத் தேன்.

அவன் அழகே உருவான அவளைக் காதலாய்ப் பார்த்தானாம். அவளும் அவனிடம் மயங்கி அப்படியே காதல் பொங்கப் பார்த்தாளாம். அந்தப் பார்வைகள் தந்த உடனடி ஒப்புதலின் காரணமாக அடுத்த நிலைக்குச் சென்றானாம் அவன். அதாவது அவளைக் கண்டு இதழ் அவிழச் சிரித்தானாம். அதுவும் அவளிடம் ஒப்புதல் ஆனதும் அதோடு நிற்காமல் வா வா என் அருகே என்று அவளை அழைத்தானாம்.

காதலென்றால் காலங்கள் தோறும் ஆண்கள் முன்னேறிக்கொண்டேதானே இருப்பார்கள். அவனது அழைப்பை ஏற்று அவளும் அவனிடம் வந்துவிடுகிறாளாம். அடடா இப்படியல்லவா இருக்க வேண்டும் பெண் என்று கற்பனை ஓடுகிறதா? கொஞ்சம் அந்தக் குதிரையைக் கட்டிவையுங்கள். அவள் அவனுக்கு உரிமையானவள். அதன் காரணமாகவே அவள் காயாய் நிற்காமல் கனியாகவே குழைகிறாள்.

அழைத்ததும் வந்தவளைச் சுவைக்கிறானாம் அவன். அடடா இவள் உண்மையிலேயே தேன் என்று முடிவு செய்துவிடுகிறானாம். அவளிடமிருந்து பெற்ற காதல் சாதாரணத் தேன் அல்ல சுவை மிகுந்த மலைத்தேன் என்று கண்டு மலைத்து நிற்கிறானாம். எத்தனை அழகு பாருங்கள் இந்தத் தேன் தேன் வரிகள். மலைத்தேன் என்ற சொல்லுக்கு இரு பொருள். ஒன்று மலைப் பிரதேசத்திலிருந்து எடுத்த தேன் மற்றொன்று அதிசயத்தில் அப்படியே மலைத்துப் போய் நிற்பது.

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவரென மலைத்தேன்


இனி அவள் சொல்கிறாள். அவனை ஆமோதிப்பதுபோலவே சொல்கிறாள். இந்த ஒத்த மனமும் ஒத்த இசையும் ஆணுக்கும் பெண்ணும் தரும் சுகம் கொஞ்சமா? அவளும் அவனைப் பார்த்தாளாம், பின் சிரித்தாளாம், அவன் அழைக்கும் முன்னரே அவன் பக்கத்தில் செல்லத் துடித்தாளாம். இது எப்படி இருக்கிறது? அவனைப்போலவே அவள் அவனைத் தேன் போல் தித்திப்புடையவன் என்றே நினைத்தாளாம். ஆனால் அவன் காதல் மட்டுமல்ல அவனே ஒரு சுவையான மலைத்தேன் என்று அவள் அப்படியே மலைத்துப் போய்விட்டாளாம்.

கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என
ஒரு படித்தேன் பார்வையில் குடித்தேன்


மெல்லிய இடையைக் கொண்ட இவள் ஒரு கொடியைப் போன்றவள் அதாவது இவள் ஒரு கொடித்தேன். இனியெல்லாம் இவள் எங்கள் வீட்டுக்குச் சொந்தமானவள். எங்கள் குடியைச் சேர்ந்தவளாகிறாள். இந்தக் கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் ஆகிறாள் என்று எத்தனை அழகாகச் சொல்கிறார் பாருங்கள் கண்ணதாசன். அடடா என்று வியக்க வைக்கிறதல்லவா? இப்போது அவள் அவனை ஆழமாய்ப் பார்க்கிறாள் அதில் அகிலத்தின் காதலெல்லாம் ஒன்று சேர்ந்து நிற்கிறது. அதை எப்படிச் சொல்கிறார் கண்ணதாசன் பாருங்கள். ஒரு படி நிறையத் தேன் குடித்ததுபோல அவள் பார்வையைக் குடித்தேன் என்கிறார். பெண்ணிடம் பல்லாயிரம் அழகுகள் உண்டு. ஆயினும் அவள் பார்வை என்ற அழகுக்குமுன் எல்லாமும் ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அந்தப் பார்வைதான் காதலின் மொழி. பருவக் கண்களை அதன்பின் உறங்கவே விடாத அற்புதம்.

துளித்தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்


அவள் அழகை எல்லாம் ஒரு துளியும் சிந்தாமல் அனுபவித்தானாம். அப்படியே அள்ளி எடுத்து அணைத்தானாம் பருவ அழகையெல்லாம் முழுவதும் ரசித்தானாம். வார்த்தைகள் எத்தனை மதுரமாய் வந்து விழுந்திருக்கின்றன பாருங்கள். .

மலர்த்தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்


அழகிய மலரில் தேன் நிறைவதைப்போல இளமை அழகு நிறைய பருவம் எய்தினாளாம் அவள். அதுமட்டுமல்ல அவனுக்காகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தாளாம், உரிய வயது வந்ததும் அவனையே மணந்தாளாம். இதைவிட அற்புத வாழ்வு வேரென்ன இருக்க முடியும்? நட்பும் நட்பைத் தொடர்ந்த காதலும் அந்தக் காதலைத் தொடர்ந்த கல்யாணமும் அமைந்துவிட்டால், வேறென்னதான் வேண்டும் வாழ்வில்?

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்


சரி கல்யாணமும் ஆகிவிட்டது. அடுத்து? தேன் நிலவுதானே? தேன் நிலவில் சுகம் என்பது இருவருக்கும் சமம் அல்லவா? அங்கே சுகம் எடுக்கவும் செய்ய வேண்டும். சுகத்தை அள்ளிக் கொடுக்கவும் செய்யவேண்டும். அவர்கள் அப்படியேதான் செய்தார்கள். அதுமட்டுமா அனுபவிக்கும்போது ஒரு முழுமை வேண்டுமல்லவா? தமிழே நாணும் வண்ணம் எத்தனை அழகாக அதை கண்ணதாசன் எழுதுகிறார் பாருங்கள். இனி அவளிடம் எஞ்சியதாய் ஒரு துளி தேனும் இல்லை என்று ஆகும் அளவுக்கு அந்தக் காதல் லீலைக் கதையை அழகாக சுவையாக சுகமாக முடித்தானாம் :)

கலக்கிட்டியே கண்ணதாசா!

நன்றி http://anbudanbuhari.blogspot.com/2009/12/blog-post_1312.html

No comments: