Wednesday, June 30, 2010

அன்புடன் புகாரி

கனடாவில் நான்கு கவிதை நூல்கள் வெளியீடு - வைரமுத்து, மாலன், முத்துலிங்கம், இலந்தை, கந்தவனம் அணிந்துரைகள் - குமுதம், பாரதிதாசன் வையவிரி அவை, புத்தகப்புழு, கவிதை உறவு பரிசுகள் - தமிழ்மாநில அடையாளக் கவிதையாக இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் தேர்வு - அமெரிக்க, ஐரோப்பிய கவிஞர்களுக்கான கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கம் - அமெரிக்கக் கண்டத்தில் தமிழ்நூல் வெளியிட்ட முதல் தமிழ்நாட்டுக்காரன் - தமிழ் உலகம் அரசவைக் கவிஞன் - உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டாளன் - உலகின் முதன் யுனித்தமிழ்க் குழும உரிமையாளன்.

ஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.

தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

வானூறி மழை பொழியும்
.....வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
.....தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
.....கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
.....பசியாறும் உரந்தையில்

நான் பிறந்தேன்.

நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள்

சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர்.

ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்னசந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.

அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு.

தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்

சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட

போர்வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.

அரணமனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.

ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள்.

கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.

பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு.

மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.

ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு

ஒரத்தநாட்டைச்சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.

எனவே என் ஊர் என்று தஞ்சையை அழைத்து என் நான்காம் தொகுப்பில் நான் எழுதிய கவிதை இது:

என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?


வானூறி மழைபொழியும்
.......வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
.......தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
.......கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
.......பசியாறும் தஞ்சாவூர்

தேரோடித் தெருமிளிரும்
.......திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
.......மதமோடி உறவாடும்

வேரோடிக் கலைவளரும்
.......விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
.......பொன்னோடும் தஞ்சாவூர்

சேறோடி நெல்விளைத்து
.......ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
.......கண்ணோடிக் கறிசமைத்து

நீரோடி வளர்வாழை
.......நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
.......விண்ணோடும் தஞ்சாவூர்

வாய்மணக்கும் வெத்திலைக்கும்
.......வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
.......கைமணக்கும் பட்டுக்கும்

சேய்மணக்கும் சேலைக்கும்
.......சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
.......தரம்மணக்கும் தஞ்சாவூர்

தலையாட்டும் பொம்மைக்கும்
.......அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
.......சிலைகாட்டும் சோழனுக்கும்

மழைகூட்டும் மண்ணுக்கும்
.......பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
.......எழில்காட்டும் தஞ்சாவூர்


என்னைப்பற்றி சுருக்கமாக:

1981 - 1999 சவூதி வாழ்க்கை
1999 ஜூலை 14ம் தேதி முதல் கனடிய வாழ்க்கை

பணி: கணினி வல்லுனர் - தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்
பிறப்பிடம்: ஒரத்தநாடு, தஞ்சைமாவட்டம்

நாலெல்லாம் இணையத்தில் எழுதுகிறேன். வலைத்தளம், வலைப்பூ, கூகுள் யுனித்தமிழ் குழுமம் நடத்துகிறேன். திருக்குறளை புதுக்கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன். கனடாவில் தமிழன் என்ற தொடர் கட்டுரை எழுதுகிறேன்

தீபம், திசைகள், தாய், குமுதம், அலிபாபா, இந்திய அரசின் வார்சிகி, அமுதசுரபி, இலக்கியபீடம், கனடா உதயன், கனடா முழக்கம் என்று பல பத்திரிகைகளில் என் கவிதைகள் வந்திருக்கின்றன.

குமுதம் கவிதைப்போட்டியில் பரிசு
உதயன் கவிதைப்போட்டியில் தங்கப்பதக்கம்
தமிழ் உலகம் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
பாரதிதாசன் வையவிரி அவை கவிதைப் போட்டியில் முதல் பரிசு
புத்தகப்புழு கவிதைப்போட்டியில் முதல்பரிசு
கனடா எழுத்தாளர் இணையம் உறுப்பினர்
உதயன் கவிதைத் தேர்வு நடுவர்
கனடிய தமிழ் வானொலிகளில் பங்கேற்பு
பல யாகூ தமிழ்க் குழுமங்களில் பங்கேற்பு
தமிழ் உலகம் குழுமத்தின் ஆஸ்தான கவிஞர் (2003-2004)
வெளிச்ச அழைப்புகளுக்கு கவிதை உறவு சிறப்புப் பரிசு

அச்சேறிய கவிதை நூல்கள்

2002 வெளிச்ச அழைப்புகள்
2003 அன்புடன் இதயம்
2004 சரணமென்றேன்
2005 பச்சைமிளகாய் இளவரசி

உலகில் முதன்முறையாக மாலன் தலைமையில் இணையத்தில் என் அன்புடன் இதயம் கவிதைநூல் வெளியீடு

*

அன்புடன் புகாரி (டிசம்பர் 24, 2003)
.....................................................

ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்

சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி

உள்ளத்தின் பரப்புகளை
உழுதுநின்ற உணர்வுகளைச்
சொல்லும்சுவை நானுணர்ந்தேன்
சொன்னமொழி என்மொழிதான்

வென்றுவிட்ட நினைவெழுந்து
வெள்ளலையாய் வந்துமோத
கன்றுமனத் துள்ளலோடு
கவிஞனெனக் கண்சிலிர்த்தேன்

பெற்றெடுத்த காதுகளில்
புகுந்ததிந்தச் செய்திவெடி
கற்றுபலப் பதவிவேண்டும்
கைநிறைய காசுவேண்டும்

வெற்றுக்கவி ஆகிவிட்டால்
வேதனையே வீடுசேரும்
முற்றுப்புள்ளி இட்டுவிடு
மூட்டைகட்டி கொளுத்திவிடு

தொட்டுஒரு வரிமீண்டும்
தொடர்ந்தெழுதிப் போனாலோ
பட்டையாய்த் தோலுரிப்பேன்
பட்டினியே இருட்டறையில்

கட்டைக்குரல் கடுகடுக்கக்
கண்டிப்பாய்க் கூறிவிட்டார்
முட்டியதுநீர் அன்றேஎன்
முதற்கவிதை பிறந்ததடா

0

பதின்வயதில் விளையாட்டு
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக

மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு

காதலெனும் புயல்ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ

காதலுக்குள் விழும்போதும்
காதலாகி எழும்போதும்
காதலோடு அழும்போதும்
கவிதைகளோ பலகோடி

கவிதைகளால் சிறகசைத்த
காகிதங்கள் பார்வையிட்டு
கவிஞரேயென அன்போடு
கற்றுத்தரும் தமிழய்யா

உயிர்மலர எனையழைத்து
உற்சாகம் தந்திடுவார்
பயிர்வளர்க்கும் உழவன்போல்
பாசமுடன் அரவணைப்பார்

அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்
ஆயிரமாய் அள்ளிவந்து
படிக்கவேண்டும் என்றெனக்குப்
பரிவோடு தந்திடுவார்

விடுப்பில்தான் படிக்கவேண்டும்
வேண்டாமிது இப்போது
இடுப்பொடியும் பாடமுண்டு
எப்படியும் முடிக்கவேண்டும்

மருத்துவனாய் எனையாக்க
மனமெல்லாம் கனவுகளாய்
இருக்கின்றார் என்வீட்டில்
எனைவிடுவீர் இப்போது

வருத்தம்தான் எனக்குவேறு
வழியுண்டோ கூறுங்கள்
விருப்பத்தை ஒத்திவைத்து
விடைகூறிப் புறப்பட்டேன்

போதுமான மதிப்பெண்கள்
பெற்றேநான் தேர்ந்தபோதும்
மோதிமுட்டிப் பார்த்தேன்நான்
முடியவில்லை மருத்துவமும்

சாதிவழிச் சலுகையில்லை
சந்துவழி வசதியில்லை
வேதனையில் விளைந்ததடா
வைரமணிக் கவிவரிகள்

0

பட்டமொன்று பெற்றுவிட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து

கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போலஎன்னைப்
பாதையோரம் நிறுத்தியது

எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்

சொல்லவொருச் சொல்லுமில்லை
சுகம்பெற்றேன் சத்தியமாய்
இல்லாமைப் பேய்விரட்டி
என்வீட்டைக் காத்திட்டேன்

பாலைவனச் சாலைகளில்
பார்த்ததெலாம் நெருப்பெனினும்
ஊளையிடும் வறுமைபோக்கி
உறவுகளைக் காத்துநின்று

மாலையிட்டு மக்களீன்று
மனம்முழுதும் பசுமைபூக்க
வேலைதந்தப் பாலைவனம்
வேதனையைத் தீர்த்ததெய்வம்

பெற்றமண்ணை உறவைநட்பை
பிரிந்துவந்த சோகவிதை
நெற்றிவரி இழுத்துச்சென்ற
நிலம்விழுந்து முட்டிமோத

பெற்றதுன்பம் கொஞ்சமல்ல
பிரிவென்பதும் வாழ்வுமல்ல
கற்றபெரும் அனுபவங்கள்
கவிதைகளாய் வெடித்ததடா

0

வருடங்கள் மூவாறு
வாழ்வளித்தப் பாலையிலே
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்

அரும்புகளின் கல்வியெண்ணி
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்
அவசரமாய்க் குடியேற்றம்

கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனியரதம் கனடியமண்

குணக்கேடு மதவெறியர்
குத்துவெட்டு பகையில்லா
மனிதநேயம் போற்றுமிந்த
மண்பெருமை விண்பாடும்

இணையத்தின் தமிழுக்கு
இங்குவந்தே என்வணக்கம்
முனைதீட்டிக் கவிபாட
முத்தமிழின் புதுச்சங்கம்

அணையுடைத்துக் கவிபாடும்
ஆற்றுவெள்ள உற்சவம்போல்
இணையமெங்கும் தமிழ்வாசம்
இதயமெங்கும் தேரோட்டம்

குளிர்தீண்டக் கவிகொஞ்சம்
கொட்டும்பனி கவிகொஞ்சம்
மலர்வண்ணம் இலைதாவும்
மரக்கிளையின் கவிகொஞ்சம்

வளர்தமிழை விண்ணேற்றி
உலகமெலாம் மழைபொழியும்
புலம்பெயர்ந்த ஈழத்தவர்
புகழ்பாடி கவிகொஞ்சம்

எழுதியெழுதி கவிதைகளை
இணையமெங்கும் தூவினேன்
எழுதிவைத்த தொகுப்பிரண்டை
இங்கிருந்தே வெளியிட்டேன்

அழகுதமிழும் கணினிமடியும்
அமுதூட்டித் தாலாட்ட
அழகழகாய்த் தேன்மழையாய்
அருங்கவிதை பொங்குதடா

0

பார்க்கவரும் விழிகளெல்லாம்
பார்ப்பதற்கே வருவதில்லை
கோர்க்கவரும் விரல்களுமே
கோர்ப்பதற்கே வருவதில்லை

ஊர்ப்பாட்டைக் கேட்டிருந்தால்
உன்பாட்டை மண்மூடும்
மார்தட்டித் திடங்கொண்டால்
மலைத்தொடரும் பொடியாகும்

யானைநடை போட்டாலும்
இடறிவிழும் காலமுண்டு
தேனமுதச் சொல்லெடுத்துத்
தித்திக்கப் பொய்யுரைத்து

பூனைபோலப் பாலருந்தப்
புறப்பட்டு வருவார்பின்
கானகத்து முட்புதரில்
கதியற்று நிறுத்திடுவார்

நிலவோடு விழிகளாட
நிலத்தோடு கால்களாட
விலகியோடும் பனிமேகம்
விருந்தாகும் சிலநேரம்

தழுவவரும் யோகங்களைத்
தடைபோடும் பாவங்கள்
நழுவிவிழும் அடிகளுக்கும்
நாடிவரும் ஒத்தடங்கள்

கோடுகளில் நதியோட்டம்
கரைகளிலோ நெஞ்சோட்டம்
ஏடுகளில் காணாத
எத்தனையோ கனவோட்டம்

கூடிவரும் வாய்ப்புகளில்
குறைவில்லாக் கொண்டாட்டம்
தேடுகின்ற அமைதிமட்டும்
தென்படாத திண்டாட்டம்

எத்தனையோ இவைபோல
என்வாழ்வில் காண்கின்றேன்
அத்தனைக்கும் மருந்தாக
ஆனதொரு மந்திரந்தான்

சொத்தைகளும் சரியாகும்
சுடர்வெற்றி வாழ்வாகும்
நத்தைபோல நகர்ந்தாலும்
நம்பிக்கை முன்னிறுத்து

நம்பிக்கை வளர்த்தெடுக்க
நாளெல்லாம் கவியெழுதி
தெம்புக்கோர் பாட்டென்று
திசையெங்கும் பாடவைத்து

அன்புமனம் அமுதளக்க
அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
அன்புக்கரம் வளைத்துலகை
அரவணைத்து நெகிழ்கின்றேன்


No comments: