Sunday, June 13, 2010

கோடீஸ்வரனாக்கிய பழைய இரும்பு வியாபாரம்

 
சென்னையைச் சேர்ந்த ராம் குருவின் ஆசை,​​ அமெரிக்கா சென்று கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்பதே.​ விருப்பப்படி அமெரிக்கா சென்று படித்தார்.​ அதன்பிறகு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஆளாக,​​ அதிகம் சம்பாதிக்க முடியவில்லை.​ வெறுத்துப் போன அவருக்கு எதேச்சையாக தொடங்கிய பழைய இரும்பு வியாபாரம் கைகொடுத்து இன்று அவரை கோடீஸ்வரனாக ஆக்கியுள்ளது.​
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் இவரது நிறுவனமும் உள்ளது.​ இத்தகவலை “நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு சிறப்புச் செய்தியாக வெளியிட்டு ராம் குருவை கெளரவித்துள்ளது. இவரது நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் தற்போது 8 கோடி டாலராக உயர்ந்துள்ளது.​
‘மைல்ஸ்டோன் மெட்டல்ஸ்’ என்ற பெயரில் செயல்படும் இந்நிறுவனம்,​​ அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.​ ​
இரும்பு வியாபாரத்தில் ராம் குரு இறங்கியது தற்செயலாக நிகழ்ந்ததுதான்.​ நண்பர் ஒருவர் உயர் தர இரும்பை வாங்கித் தருமாறு கேட்டபோது அதற்காக இணையதளத்தில் தேடியபோதுதான் இத்தொழிலின்மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.​ இதன் விளைவாக 2003-ம் ஆண்டில் உருவானதுதான் மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் நிறுவனம்.​ உலோகங்களின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து இவரது நிறுவனத்துக்கு அதிக ஆர்டர்கள் குவிந்தன.​
வீடுகள்,​​அலுவலகங்கள்,​​தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானங்களுக்கு உலோக பொருள்களின் தேவை அதிகரித்தது.​ குறிப்பாக பிரேஸில்,​​ ரஷியா,​​ இந்தியா,​​ சீனா உள்ளிட்ட ‘பிரிக்’ நாடுகளில் இவற்றின் தேவையும் அதிகரித்தது.
இந்தியாவில் உள்ள நண்பர் ஒருவர் இதே தொழிலில் ஈடுபட்டதாகவும்,​​அவரிடமிருந்து இரும்பு உள்ளிட்ட உலோகங்களை வாங்க விரும்பியதைத் தொடர்ந்து இதில் ஈடுபட்டதாக ராம் குரு கூறினார்.​
கார் நிறுத்துமிடத்திற்கு கீழ்தளப் பகுதியில் ஒரே ஒரு தரைவழி தொலைபேசி இணைப்புடன்,​​ கம்ப்யூட்டருடன் அலுவலகத்தைத் தொடங்கினார் ராம் குரு.​ உலோக பரிவர்த்தனை தொடர்பாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை அறிந்து அதை செயல்படுத்தினார்.​ பழைய இரும்பு,​​ தாமிரம்,​​ செம்பு,​​ அலுமினியம் உள்ளிட்ட அனைத்து உலோகங்களையும் வாங்கி அதை விற்பனை செய்கிறார்.​
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம் ஃபேர்பாக்ஸ் நகரில் அமைந்துள்ள இவரது அலுவலகம் 100 பழைய இரும்பு கிடங்குகளுடன் ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளது.​ ​
நியூயார்க் நகரில் பாஸ்டன் துறைமுகம்,​​ நியூ ஆர்லியான்ஸ்,​​ போர்ட்லாந்து ஆகிய துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கப்பல் மூலம் உரிய நாடுகளுக்கு அனுப்பப்படும்.​ கன்டெய்னர் மூலம் இவை அனுப்பப்படுகின்றன.​ அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு கன்டெய்னர் மூலம் அனுப்புவதற்கு 1,500 டாலர் முதல் 2,000 டாலர் செலவாகிறது.​ தேக்க நிலை நிலவியபோதிலும் தங்களது வர்த்தகம் மிகச் சிறப்பாக இருந்ததாக ராம்குரு தெரிவித்துள்ளார்.​
2003-ல் 10 லட்சம் டாலராக இருந்த வருமானம் ஆறு ஆண்டுகளில் 8 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று பெருமையுடன் பேட்டியளித்துள்ளார்.​ ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ என்ற இதழுக்கும் இவர் பேட்டியளித்துள்ளார்.
எந்தத் தொழிலிலும் எவரும் ஈடுபடலாம்.​ கோடீஸ்வரனாகலாம் என்பதற்கு ராம் குரு சிறந்த உதாரணம்
 

No comments: