தெள்ளிய நீரில்
கழுவுவதற்கு முன்
அந்த முகம்
பார்க்கச் சகிப்பதாயில்லை.
நட்பின் கருணை
வாய்க்கும் காலங்களில்
கள்ளிமரங்களும்
ரோஜாக்களையே மலர்த்துகின்றன.
பயணத்தின் இனிமையை
பேசிக் கொண்டிருக்கும் நதிகளும்
பார்க்கப்படலாம்
பாதைகளின் குறுக்கீடாய்.
துயரமென்பது வானமல்ல
கடந்துபோகும் மேகங்களேயென்று
பாடிப் பறக்கின்றன பறவைகள்
வானவில் மகிழ்ச்சி.
திறந்திருக்கும் சுவர்க்கங்களில்
தனித்து நுழைய விருப்பமற்று
காத்துக் கிடக்கிறது தென்றல்
யுகங்கள் தோறும்.
கூடவே பிறந்த
சுயநலத்தை வெல்வதற்கு
நட்பைவிடவும்
நல்லவழியுண்டா?
- இப்னு ஹம்துன்
Source : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1169:2009-11-12-06-34-20&catid=2:poems&Itemid=88
No comments:
Post a Comment