இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்
("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஐந்தாம் பகுதி)"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அது வருங்காலத்தில் பல விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படும்." இந்த எச்சரிக்கையை விடுத்தது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பனான சவூதி மன்னன் அப்துல்லா. அமெரிக்காவின் பிற கூட்டாளிகளான ஜோர்டான், பாஹ்ரைன் போன்ற நாடுகளும் இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இது வரை காலமும் அரபு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க சார்பு மேட்டுக்குடியினரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக வளர்ந்த அரபு மத்திய தர வர்க்கம் ஆட்சியாளருக்கு சவாலாக கிளம்பியுள்ளது.
முன்பெல்லாம் அரபு நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அரசால் ஒழுங்கமைக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள், அல்லது சமூக ஆர்வலர்கள் ஊர்வலங்களை ஒழுங்கு செய்கின்றனர். பொது ஜனங்களின் எழுச்சி வெறும் வாய்ப்பேச்சோடு நிற்காது செயலிலும் இறங்கியுள்ளது. முதற்படியாக அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் தோன்றியுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு, பொது மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது. லெபனானில் கல்லூரி மாணவர்கள், அமெரிக்க பொருட்கள் எவை என்றும், அதற்கு மாற்றாக வாங்கக்கூடிய உள்ளூர் மற்றும் ஆசிய உற்பத்திப் பொருட்கள் எவை என்றும் பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலை துண்டுப் பிரசுரமாக வீடு வீடாக விநியோகித்துள்ளனர். அரபு நாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் டாலரை புறக்கணித்து யூரோவுக்கு மாற வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
பொருளாதாரத் தாக்கம் இஸ்ரேலிலும் உணரப்படுகின்றது. பெரும் லாபமீட்டிய சுற்றுலாத் துறை, பயணிகளின் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் என்ன தான் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பீதி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தது. எதிர்காலம் கேள்விக்குறியான இஸ்ரேலியர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி வருகினறனர். பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றது. அதனால் வரி அதிகரிப்பு, மானிய வெட்டு என்பன யூத உழைக்கும் மக்களை பாதிக்கின்றன.
வெறும் பாலைவனத்தை, தாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, யூதர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதற்கு ஒரு விலை இருந்தது. தண்ணீர். வறண்ட நிலத்தை பண்படுத்த பிரமாண்டமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறும் வந்து குடியேறிக் கொண்டிருக்கும் யூதர்கள், இன்று ஆறு மில்லியனாக பல்கிப் பெருகி விட்டனர். பெரும்பாலும் வறண்ட நிலங்களைக் கொண்ட இஸ்ரேல், ஆறு மில்லியன் ஜீவன்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. அதற்கு தீர்வு? அரபுக்களின் தண்ணீரை திருடுவது!
1967 யுத்தம் கூட, தண்ணீர் தேடி நடந்ததாக கருதப்படுகின்றது. இந்த யுத்தத்தின் பின்னர் இரு முக்கியமான நீர் நிலைகள் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டன. பாலஸ்தீன மேற்குக்கரையை சேர்ந்த ஜோர்டான் நதி, சிரியாவுக்கு சொந்தமான நன்னீர் ஊற்றுகளைக் கொண்ட கோலான் குன்றுகள். இவற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் இன்று மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்கின்றது. இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானை 20 வருடங்களாக ஆக்கிரமித்திருந்தன. அதற்குக் காரணமும் தண்ணீர்க் களவு. லெபனானின் வற்றாத லித்தானி நதி, வட இஸ்ரேலியரின் தேவையை பூர்த்தி செய்தது. இந்த தண்ணீர் எல்லாம் பகற்கொள்ளை மூலம் பெறப்படுவதால், யூதர்களுக்கு குறைந்த செலவில் விற்க முடிகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் திருடுவது, சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் தண்ணீர்க் கொள்ளையை நிரந்தரமாக்கும் பொருட்டு, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெருசலேமில் இருந்து ஜெரிக்கோ வரை, அதாவது ஜோர்டான் நதிக்கரையோரம் நூற்றுக்கணக்கான யூதக் குடியிருப்புகள் காணப்படுகின்றன. எல்லைப்புற யூத குடியேற்றங்களை அப்படியே விட்டு விடும் படி, அரபாத்திடம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. நோர்வே அனுசரணையிலான சமாதான ஒப்பந்தம், ஒரு நாளும் சுதந்திர பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கியிருக்காது. அது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
"மேகொரோட்" என்ற இஸ்ரேலிய கம்பெனி தான், யூதர்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீன வீடுகளுக்கும் நீர் விநியோகம் செய்கின்றது. ஒரு நாளைக்கு, ஒரு சராசரி யூதர் 350 லீட்டர் தண்ணீரைப் பெறுகின்றார். அதே நேரம், சராசரி பாலஸ்தீனர் பெறுவதோ வெறும் 70 லீட்டர் தான்! உலக சுகாதாரக் கழகத்தின் அளவீட்டின் படி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 100 லீட்டர் தண்ணீர் தேவை. கோடை காலங்களில், நீர் நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் போது, பாலஸ்தீன வீடுகளுக்கான விநியோகம் நாட்கணக்காக நிறுத்தப்படும். குடிப்பதற்காகவும், சமைப்பதற்காகவும் பாலஸ்தீனியர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணீர் கடன் வாங்குவார்கள். அப்போதெல்லாம் யூதக் குடியேற்றங்களில் நீச்சல் குளங்கள் நிரம்பி வழியும்.
பாலஸ்தீனப் பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கு கூட, இஸ்ரேலிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். யூதக் குடியேறிகளின் அட்டகாசம் குடிநீரையும் விட்டு வைப்பதில்லை. பாலஸ்தீனர்களின் கிணறுகளில் குப்பை கொட்டி நீரை அசுத்தமாக்குவது, குடிநீர் கொண்டு செல்லும் 'பௌசரை' வழிமறித்து, நீரை நிலத்தில் கொட்டி பாழாக்குவது. இப்படி பல அட்டூழியங்கள் வெளியே தெரிய வருவதில்லை. இஸ்ரேலிய படையும் தன் பங்குக்கு தண்ணீர்க் குழாய்களை உடைத்து நாசப்படுத்துகின்றது.
ஒஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் நீர் நிலைகள் பாலஸ்தீன அதிகார சபையின் கைகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் காரணமாக, மீண்டும் யுத்தம் ஏற்பட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. எது எப்படி இருப்பினும், அபரிதமான நீர்ப் பாவனையால் ஜோர்டான் நதி வற்றி வருகின்றது. கோலான் குன்றுகளின் நீரூற்றுகளும் ஒரு நாள் வற்றிவிடலாம். மறுபுறம் இஸ்ரேலிய/பாலஸ்தீன சனத்தொகை பெருகி வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்ற நீர் வளம் குறைந்து வருகின்றது. நிலைமை இப்படியே போனால், இன்னும் 50 வருடங்களில் அந்தப் பிராந்தியம் வறண்ட பாலைவனமாகி விடும். அப்போது இந்த புனித பூமிக்காக சண்டை போட யாரும் இருக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment