Tuesday, December 1, 2009

அவகாசம்



சற்று இடமும், நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
மீண்டு வந்திருக்கிறேன்
சூழ்ந்தேயிருந்தன
நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
சீறும் பாம்புகள் பல

கொடும்வெப்பம் உமிழும்
விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
ஒரு பூப்போல இருந்தேனாம்
சிறகுகள் கருகி அவையும்
செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின

அரசகுமாரனாகிய அவனையேதான்
தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
சனியனென்றும் சாத்தானென்றும்
பிடாரனென்றும்
பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
உண்மைகளை உரக்கச் சொல்வேன்
மீளவும் கண்களைக் கட்டிக்
கடத்திப் போகும் வரையில்

அதுவரையில்
உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
பார்வையில் குரூரம் தவிர்த்து
சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி from எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

No comments: