Friday, December 11, 2009

எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?---ரவி

தமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
எல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான்.
ஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது தான். தவிர,
பல துறையினரின் முதன்மைத் தகுதிகளை இழிவுபடுத்துகிறது. ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ துறைகளில் முன்னேறலாம்.
ஆங்கில அறிவு தான் சோறு போடுகிறது என்றால், ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் தமிழர்களுக்கு ஆங்கிலம் சோறு போடுகிறது?
ஆங்கில அறிவை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு **** முடியாது.
ஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் தொடர்பாடுவதற்கான பிற மொழியறிவு. அதற்கு மேல் பிற மொழியை உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.
ஆங்கிலம் உலகப் பொது மொழிகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் மொழியில் ஆங்கிலத்தில் கலப்பதில்லை. ஆங்கில அறிவு, அதன் மூலமான பல் துறை அறிவு பெற்றுத் தரும் வேலைவாய்ப்புகளை முன்னிட்டு அனைவரும் ஆங்கிலம் கற்பது அவசியம். தமிழர் தமிழருடனும் பிறருடனும் ஆங்கிலத்திலேயே கூட பேசலாம். பெரும்பான்மை மக்கள் மக்கள் தமிங்கிலத்தில் பேச, எழுத பல நியாயமான காரணிகள் உள்ளன. 100% மொழித்தூய்மை சாத்தியமற்றது. ஆனால்,மொழிக் கலப்பை வலிந்தும் தேவையற்றும் செய்வதும் தவறு. ஒரு இனத்துக்கே இன்னொரு மொழி தான் சோறு போடுவது
போல் சித்தரிப்பதும் உள்ளூர் மொழியைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதும் கண்டித்தக்கது.
“சோறு போடும் நன்றிக்காக ஆங்கிலத்தைக் கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த இனமும் ஏற்றுக் கொள்ளாது.
தொடர்புடைய இடுகை: தமிழ் சோறு போடும்

நன்றி : http://blog.ravidreams.net

No comments: