ஸாம்பியா நாட்டின் காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் அந்த விடுதிக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காட்டு யானைகள் தங்கள் பட்டாளங்களோடு அமைதியாக வந்துவிட்டுப் போவது வழமை.
Source : http://rishansharif.blogspot.com
ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாத ஆரம்பத்தில் அவ் விடுதிக்கு வரத் தொடங்கும் யானைகள், நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து தினமும் நாலைந்து தடவைகள் வந்து போகின்றன.
சுமார் 150 பணியாளர்களையும் இன்னும் பல விருந்தினர்களையும் கொண்ட இவ் விடுதிக்கு வரும் இக் காட்டுயானைகள் எதுவும் இதுவரையில் அங்கிருந்த எந்தவொரு மனிதர்களுக்கும், பொருட்களுக்கும் எந்தவொரு சேதத்தையும் விளைவித்ததில்லையென விடுதியின் முகாமையாளர் திரு.என்டி ஹொக் தெரிவிக்கிறார்.
வருடம் தவறாமல் குறிப்பிட்ட ஒரு காலத்தில் மட்டும் யானைகள் அவ் விடுதிக்கு வரக் காரணம்?
அக் காலம் மாங்காய்கள் பழுக்கும் காலம்.
விடுதியில் மாங்காய்?
முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் ஒரு பெரிய மாந்தோப்பு இருந்திருக்கிறது. அந்தத் தோப்பு அழிக்கப்பட்டே அவ் விடுதி எழுந்து நிற்கிறது.
யானைகள் தங்கள் பழகிய தடம் வழியே மாம்பழங்கள் கொண்ட அத் தோப்பைத் தேடி தங்கள் சொந்தங்களைப் பார்க்க வருவது போல ஒவ்வொரு வருடமும் வருகின்றன. ஆனால் மனிதர்கள் எந்தவிதக் குற்றவுணர்ச்சியுமற்று, தோப்பை அழித்து, பெரும் கட்டடங்கள் கட்டி இன்னும் நன்றி மறவாத யானைகளின் வருகையையும் வேடிக்கை காட்டி பணம் சம்பாதிக்கின்றனர்.
இயற்கை வளங்களை அழித்து, அது பற்றிய குற்றவுணர்ச்சி சிறிதும் இல்லாமல் நாம் நகர்ந்துகொண்டு போகிறோம். யானைகள் நாம் அழித்த இயற்கையைச் சுட்டிக் காட்டவென்றோ, ஞாபகப்படுத்தவென்றோ வந்துபோகின்றன. அவற்றின் விழிகளிலிருந்து தேடலும், அசையும் தும்பிக்கையில் எதிர்பார்ப்புகளும் வழிகின்றன. நாம் அவற்றுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுக்கிறோம், இயற்கைக்கும் கூட.
No comments:
Post a Comment