அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின்.
சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர், இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......
முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.
இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....
இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.
அவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).
பணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................
"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.
இப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,
என் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.
அவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.
எனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.
என்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.
இது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.
என்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,
"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது"
இதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.
ஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.
"ஆம், நான் ஏற்றுக்கொண்டேன்"
அவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.