Wednesday, March 7, 2018

அவ்வளவுதான்...!

அவ்வளவுதான்...!
நான் இருபத்தைந்து நாள்களுக்கு முன்னர் குடல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து
வருக்கிறேன்.தற்போது
நல்ல நலத்துடன் இருக்கிறேன்.
ஓய்வு நிலையில் மனம் எப்போதும் மிதந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த கால வெட்ட வெளியில்தான்
உலா நிகழ்த்துகிறது.
இது என் அனுபவ நிகழ்வு.
1973--ஆம் ஆண்டு. மார்ச் மாதம் 1--ஆந் தேதி. அக்காலம் என் அண்ணாமலைப் பல்கலைக் கழகக் காலம்.
எனக்குள் ஓர் இனிய காதல் நடமாடிய வேளை.
என் பல்கலைக் கழக நண்பர்.இன்றுவரை குடும்பமாகக் கலந்துறவாடும் நட்பு வட்டத்தில் இருப்பவர். தகடூர் பாவாணன்.

ஒரு ஆலோசனை வழங்கினார். நான் விரும்பிய பெண்ணிற்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டுமென்பதே அந்த ஆலோசனை.
நானும் சம்மதப்பட்டேன்.
கடிதம் எழுதினேன்.
அதனை நானும் பாவாணனும் சேர்ந்து பல்கலைக் கழகத்தின் மகளிர் விடுதியில் தங்கிப் பயிலும் என் வகுப்பறைத் தோழி ஒருவரைச் சந்தித்துக் கொடுத்தோம்.
என் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டவர் அந்த மாணவித் தோழி.
அவர்வழிக் கடிதத்தை நான் நேசித்த என் வகுப்பறைத் தோழிக்குத் தரச் சொன்னோம்.
அன்றையக் காலக் கட்டம் இப்படித்தான் அநேகமாக நடைமுறையிருந்தது.
அப்படி தோழியரிடம் கடிதம் தந்த தேதி 01/03/1973-அன்றுதான்.
03/03/1973-அன்று அதாவது மூன்றாம் நாள்.
அன்று சனிக் கிழமை.
கல்லூரி நடந்தது.வியாழக் கிழமை பாடத் திட்டத்தில் இயங்கியது.
நான் வகுப்பறையில் இருந்தேன். தோழி மதியம் 3--மணிக்கு வகுப்பறைக்குள் வந்தார்.
என்னிடம் "லேடீஸ் ஹாஸ்டல் முன்புறமுள்ள பெரிய மரத்தடியில் உங்களுக்காக அவள் காத்திருக்கிறாள்.நீங்கள் போங்கள்" என்றார்.
நான் உடனே புறப்பட்டுச் சென்றேன்.அவள் அங்கு காத்திருந்தாள்.
"நீங்கள் தந்த கடிதம் இரு தினங்களுக்கு முன்பு பெற்றேன். அதிரவில்லை.அறிந்துதான் இருந்தேன். முடிவு எடுக்கத்தான் எங்களால் முடியவில்லை."
"இந்த ரெண்டு நாளும் நான் தூங்கவில்லை.
உண்மையை மறைக்க முடியாது. அதே நேரம் மதம் என்னை பயமுறுத்துகிறது."
"என் தாய் விதவை.உங்களுக்கும் தெரியும். நான் ஒரே பிள்ளைதான். என் மாமாதான் எங்கள் ஆதரவு."
" என் அம்மா உடன்படவே மாட்டார். என் உண்மையக்கூட நான் வாழமுடியாது. மன்னித்து விடுங்கள்" எனக் கண்கலங்கி அழுது தேம்பிக் கும்பிட்டு நின்றாள்.
அந்த நாள் இந்த 03/03/1973 நாள்தான்.
எங்கள் காதலில் ரகசியமே இல்லை. எங்கள் பேராசிரியர்கள் ,என் பாக்கியம் நிறைந்த நண்பர் வட்டாரங்கள் பூரணமாக அறிந்த ரகசியம்தான்.
நான் ஒரு கைப்பை வைத்திருப்பேன். அதில் அவள் படம் வைத்திருப்பேன். அதை என் நெருக்கமாவர்கள் பார்க்க வாய்ப்பு உண்டுதான்.
ஒருமுறை. தென்காசியில் என் சிறிய தந்தையார் இல்லம்.
என் தந்தையாரும் தாயாரும்
சென்னையிலிருந்து வந்திருந்தனர்.
நான் என் கைப்பையை டேபிளில் வைத்துவிட்டுக்
கழிவறை சென்றிருந்தேன்.
அந்த நேரம் என் பெரிய தந்தை மூத்த மகன் என் அண்ணன் கைப்பையைப் பிரித்துப் பார்த்தார். அவள் படத்தைப் பார்த்து விட்டார்.
அவ்வளவுதான்.
என் அம்மாவிடம் "தம்பி கைப்பையில் ஒரு பொம்புளப்புள்ளப் படம் வைத்திருக்கிறான்."எனக் கூறிக் காட்டினார்.
என் தாயர் அவரைக் கடுமையாகக் கண்டித்தார். என் அண்ணன் விடாமல் என் சிறிய தந்தையாரிடம் கொண்டுபோய்க் காட்டினார்.
அவரும் என் அண்ணனைக் கண்டித்தார். "பையை எடுத்த இடத்தில் கொண்டுபோய் வையப்பா"என கோபத்தோடு கூறியிருக்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினர்.
இந்தக் கதை என் குடும்பத்தாரும் அறிந்த ரகசியம்தான்.
இவையெல்லாம் என் நினைவுகளில் நீந்தி நீந்தி மிதந்தன.
அவ்வளவுதான் இந்தக் கடந்த காலத்திற்கு நான் வழங்கிய இடம்.

Hilal Musthafa

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails