Sunday, March 18, 2018

அவள் வேகமாக வந்து நின்றாள்.

அவள் வேகமாக வந்து நின்றாள்.
அண்ணா அவசரமா பணம் வேணும். ஐநூறு ரூபா குடுங்க என்றாள்.
எந்தக் கேள்வியும் கேட்காமல், ஒரு வார்த்தை பேசாமல் ஒரு 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தேன்.
அரிசி வாங்கக்கூட காசில்லே. அதான் உங்ககிட்டே வந்தேன் என்று சொல்லிவிட்டு கிடுகிடுவென வெளியேறினாள். கதவை அடைத்த சத்தம் ஏதோ இசைபோலக் கேட்டது.
சட்டென விழிப்பு வந்தது. யார் இவள்? யார் போல இருந்தாள்? யாருடைய ஜாடையும் நினைவுக்கு வரவில்லை. மாநிறமாக இருந்தாள் என்பது மட்டுமே நினைவில் இருந்தது. தலைமாட்டில் செல்போன் அலாரம் அடித்துக்கொண்டிருந்தது.

கையால் தேய்த்து அலாரத்தை நிறுத்தினேன். மணி ஆறரைதான். இன்று ஞாயிறுதான். இன்று காலை சீக்கிரமே எழுவதில்லை என்று நேற்றே முடிவு செய்ததுதானே? தூங்குவோம் என்று தூக்கத்தைத் தொடர்ந்தேன்.
கனவில் வந்தவள் யார் யார் யார் என்று உறுத்திக்கொண்டே இருந்தது. எப்போது தூக்கம் பிடித்தது என்று தெரியவில்லை.
வாசல் பக்கமிருந்து ஸ்ஸ்...என்று சத்தம் கேட்டது. தலையைத் திருப்பிப் பார்த்தேன்.
படியில் நின்று கொண்டிருந்தாள் அவள்.
இங்கே வாங்க என்று சைகை காட்டினாள்.
பக்கத்தில் போனேன்
ரெண்டு நாளா சாப்பிடலே. பசிக்குது. சாப்பாடு வேணும் என்றாள் குசுகுசுவென்ற குரலில்.
எனக்கு கண்ணில் நீர் கட்டியது.
ஒல்லியாக, மாநிறத்தில் இருந்த அவளை எங்கோ பார்த்த ஞாபகம். யார் என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
யார் இது யார் இது என்று நினைத்தவாறே கிடுகிடுவென்று சமையலறைக்குள் நுழைந்தேன். சோறும் பருப்பும் இருந்தது. இரண்டையும் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுத்தேன். படியில் நின்றவாறே சாப்பிடத் துவங்கினாள்.
சாரிம்மா... இது நேத்தைய சோறுதான். கொஞ்சம் பொறு. சூடா சோறாக்கினதும் தர்றேன் என்றேன்.
இதோ சோறு வைக்கிறேன் என்று குக்கரை அடுப்பில் வைத்தார் ஆமீனா. அவர் எப்போது சமையலறைக்கு வந்தார் என்று தெரியவில்லை.
யார் இவள் என்று மெதுவான குரலில் கேட்டேன் ஆமீனாவிடம்.
மறந்துட்டீங்களா... மூணு பொண்ணுங்க இருப்பாங்களே அக்கா தங்கச்சிங்க... அதுல கடைசி இவதான் என்றாள்.
அப்போதும் யார் என்று நினைவுக்கு வரவில்லை.
மூன்றாண்டுகளுக்கு முன்னால் திருப்பூர் ரயில் நிலையத்தில், தலையில் ஏதோ கட்டி இருக்குன்னு சொல்றாங்க... என்று சொன்ன ஒல்லியான கிராமத்துப் பெண்ணின் சாடையில் இருந்ததுபோலத் தெரிந்தது.
அய்யோ... அவளுக்கு என்னவாயிற்றோ என்று பதறினேன். ரயில்வே ஸ்டேஷனின் அறிவிப்புக்கு இடையிலான இசை ஒலித்தது. அவளை எங்கே காணோம் என்று பார்த்தேன்.
அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. ஆறேமுக்கால்.
போர்வையை அகற்றிவிட்டுப் படுத்தே கிடந்தேன். எட்டு மணி வரையில்.
ஃபரீதா நினைவுநாள் என்ற நினைவு வந்தது. பதிவு எழுதினேன்.
பதிவுக்கு பதில்களும் ஆறுதலாய் சில தகவல்களும் வீடியோக்களும் இன்பாக்சிலும் வந்து விழுந்தன. எத்தனை கதைகள்! எத்தனை சோகங்கள்...
வரிசையாக ஒவ்வொருவரின் நினைவாக வந்து போய்க்கொண்டிருந்தது.
இரண்டு பெண்களும் வந்தது கனவில்தான். ஆனால் ஏதோ நேரில் வந்ததுபோல மனதில் பதிந்து போயிருக்கிறது. யாரிடமாவது இறக்கி வைக்க வேண்டும்போல இருந்தது. இறக்கி விட்டேன்.
இதற்கிடையில் எத்தனையோ செய்திகள் கண்களையும் காதுகளையும் எட்டிக் கொண்டே இருக்கின்றன.
வேலை அதிகம் ஓடவில்லை. மனது பாரமாகவே இருக்கிறது.
அ. முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஆறேழு கதைகளைப் படித்தாயிற்று.
இதோ நாள் கடந்து விட்டது.
ஒரே ஒரு விஷயம்தான் திரும்பத் திரும்ப ஒலி்க்கிறது — அது ஏன் பெண்களுக்கு மட்டும் இத்தனை சோதனைகள்?

Shahjahan R

No comments: