Thursday, March 1, 2018

கூகுளில் தமிழ்மொழிக்கு அங்கீகாரம்!

இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் தளத்தில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் (Google Adsense) என்னும் இலவச சேவையை வழங்கிவருகிறது. இதுவரை சில குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டுமே இருந்த இந்தச் சேவை தமிழ் மொழியில் உள்ள இணையதளங்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது தமிழ்மொழிக்கான கதவைத் திறந்துள்ளது கூகுள்.

ஆட்சென்ஸ் என்றால் என்ன?


ஆட்சென்ஸ் என்பது கூகுள் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு சேவையாகும். இது நிறுவனங்கள், அல்லது தனி நபர்களின் விளம்பரங்களை நமது தளத்தில் நம் அனுமதியுடன் வைக்கும். இந்த விளம்பரங்கள் மூலம் விளம்பரதாரர்களிடமிருந்து பெறப்படும் தொகையில் 32 சதவீதத்தை கூகுள் எடுத்துக்கொண்டு 68 சதவீதத்தை நமக்குத் தந்துவிடும். உதாரணத்திற்கு உங்கள் இணையதளத்தில் வைக்கப்படும் விளம்பரம் மூலம் கூகுளுக்கு 100 டாலர் கிடைத்தால், அதிலிருந்து 68 டாலரை உங்களுக்குத் தந்துவிடும்.

தமிழுக்கு அங்கீகாரம்

உங்கள் இணையதளத்தில் விளம்பரம் வைக்க வேண்டுமானால் ஆட்சென்ஸ் ஆதரிக்கும் மொழியில் மட்டுமே இணையதளத்தின் உள்ளடக்கம் இருக்க வேண்டும். இதுவரை ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம், உருது போன்ற 43 மொழிகளை மட்டுமே ஆதரித்த ஆட்சென்ஸ் தமிழ்மொழியை நெடுங்காலமாகப் புறக்கணித்துவந்தது. இதனால் தமிழில் இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் வருமானம் ஈட்ட முடியாமல் இருந்துவந்தது. பல வருடங்களாக இணையதள உரிமையாளர்கள் தமிழ்மொழிக்கு அங்கீகாரம் வேண்டி கூகுளிடம் கோரிக்கைகள் வைத்துவந்தனர். இதுவரை செவிசாய்க்காத கூகுள் நிறுவனம் தற்போது 44-ஆவது மொழியாகத் தமிழ்மொழியை அங்கீகரித்துள்ளது. இதன்மூலம் தமிழில் இணையதளங்கள் வைத்திருப்பவர்கள் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு வழிவகுத்துள்ளது கூகுள் நிறுவனம்.

தமிழ் இனி மெல்ல வளரும்

உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் உலகின் உன்னதமொழியும், நம் தாய்மொழியுமான தமிழ்மொழிக்கு ஆட்சென்ஸ் அங்கீகாரம் கிடைத்ததைத் தமிழ் ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த அறிவிப்பால் இணையத்தில் தமிழ்ப் பதிவுகள் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இதனால் இணையத்தில் தமிழ் இனி மெல்ல வளரும்!!!

அப்துல் பாஸித்
நன்றி:http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=377635

No comments: