Monday, March 12, 2018

அன்புள்ள அப்பா

Shahjahan R

அம்மாக்கள் கொண்டாடப்படுவதுபோல அப்பாக்கள் கொண்டாடப்படுவதில்லை. உயிரோடு இருக்கும்போது அம்மாக்கள் அன்பின் உருவங்களாகவும், அப்பாக்கள் டெரர் சிம்பல்களாகவுமே பார்க்கப்படுகிறார்கள். அம்மாக்களின் தியாகம் உடனே தெரியும். அப்பாக்களின் தியாகம் மிகவும் தாமதமாகவே புரியும். (இது என் கருத்து. உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.)
நேற்று அக்காக்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். நாளை அப்பாவின் நினைவு தினம் என்றார்கள். பெண்களுக்கு மட்டும் எல்லா தேதிகளும் நினைவில் இருப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கோ, அப்பா மறைந்த ஆண்டும்கூட மறந்து போனது.

12-3-1979. ஆஸ்த்மா தொல்லையிலிருந்து 60 வயதிலேயே முழு விடுதலை கிடைத்துவிட்டது அவருக்கு. இப்போது இதை எழுதும்போது உடுமலை மருத்துவமனையில் படுத்திருந்த காட்சி நினைவு வருகிறது. இருமலுடன் பேசியது காதில் ஒலிக்கிறது. முப்பத்தெட்டு ஆண்டுகள் போன வேகம் தெரியவில்லை. வாழ்க்கையே நினைவுகளால்தான் ஆக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது. நினைவுகள் மட்டும் இல்லையேல் கடந்த காலமும் இல்லை.
அப்பாவின் நினைவாக எனக்குள் பதிந்து போயிருப்பதற்கும் பல மடங்கு அதிகம் அக்காக்களின் மனதில் இருக்கிறது. அது அவ்வப்போது உரையாடல்களில் வெளிப்படவும் செய்யும். மனதில் இருந்தவற்றை பதிவு செய்திருக்கிறார் மூத்த அக்கா நசீமுன்னிசா. தன் பேரனுக்கு எழுதி வைத்த நோட்டுப் புத்தகம் ’அன்புள்ள அனீஸ்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவர இருக்கிறது. அதிலிருந்து அப்பாவைப் பற்றிய சில பத்திகள்.
*
ரஹ்மான் வாத்தியார் பிள்ளைகள் என்பது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அடைந்த பெரும் பேறு. இப்போதும் மடத்துக்குளத்துக்கு எங்கள் பிள்ளைகள் போனால் ரஹ்மான் வாத்தியார் பேரப்பிள்ளைகளா என்று வாஞ்சையோடு வாழ்த்துவார்கள். அந்த வாழ்த்துகளில் எல்லாம் பாபாஜான் வாழ்கிறார்.
மெல்லிசையின் ரசிகராக இருந்த பாபாஜான், மிகவும் நன்றாக பாடுவார். அவருக்கு கம்பீரமான, கணீரென்ற குரல் வளம் இருந்தது. ஹிந்தித் திரைப்படம் ஒன்றில் பாட வாய்ப்பு கிடைத்ததாகவும் மும்பை வரை அவரைத் தனியாக அனுப்ப எங்கள் தாதி மறுத்துவிட்டதாகவும் எங்கள் புப்பு கூறக் கேட்டதுண்டு. பாபாஜான் எப்போதாவது அத்திப் பூத்தாற்போல பாட்டுப் பாடத் தொடங்கிவிடுவார். மனதைத் தொடும் பழைய தமிழ் ஹிந்தி பாடல்கள், தேசபக்திப் பாடல்கள் என்று நீளும். சமயத்தில் சாப்பாடுகூட மறந்து போகும். பாபாஜான் முஹமது ரஃபி குரலிலும் பாடுவார், கிஷோர்குமார் குரலிலும் பாடுவார். இன்று எத்தனை வசதிகள் ரேடியோ, தொலைகாட்சி, எஃப் எம், யூ ட்யூப் என்று இருந்தாலும் அப்போது பாபாஜான் பாடிய பாடல்களுக்கு நிகராகாது.
இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் என எல்லா சமூகத்தினரும் கலந்து வாழந்த அந்தச் சின்ன ஊரில் உருது பேசும் முஸ்லிம் குடும்பங்கள் ஓரிரண்டு மட்டுமே இருந்தன. பெரும்பாலும் லப்பைமார்கள் எனப்படும் தமிழ் பேசும் முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன. மசூதியில் பெரும்பாலும் தமிழில்தான் தொழுகையும் சொற்பொழிவும் நடக்கும். பள்ளிவாசல் இமாம் ஊரில் இல்லாத நேரத்தில் பாபாஜான் தொழுகை நடத்துவதும் உண்டு. சில நேரங்களில் அவரே பயான் (குரான் விளக்கச் சொற்பொழிவு) செய்வதும் உண்டு.
பள்ளிக்குப் பயில வரும் மாணவர்களிடம் கட்டாயமாக இருக்கவேண்டிய பேனா பென்சில் போன்ற பொருட்களை வரிசைப்படுத்தி மனப்பாடப்பகுதி போல சொல்லச் சொல்லுவார். அதன்படியே மாணவர்கள் ‘பேனா பென்சில் ரப்பர் ஸ்கேல் அட்டை பெட்டி’ என்று மனப்பாடம் செய்து கொள்வார்கள். தினமும் பள்ளிக்குப் புறப்படும்போது அதை வாய்விட்டுச் சொல்லி புத்தகப்பையில் எடுத்து வைத்தால் எதுவும் தவறாது!
அவர் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை மற்ற ஆசிரியர்களும் பாராட்டுவார்கள். ஆங்கிலத்தில் உயிரெழுத்துகள் ஐந்து - A E I O U என்பதை சுலபமாக நினைவு வைத்துக்கொள்ள ‘ஏய்... ஐயோ யூ’ என்று சொல்லிக் கொடுப்பார். கிட்டப்பா குழியில் விழுந்தான் என்பார். அதாவது, கிட்டப்பார்வைக்கு குழி லென்ஸ்! அப்படியானால், தூரப்பார்வைக்கு குவி லென்ஸ் என்பது சட்டெனப் புரிந்து விடும். இப்படி ஒருமுறை நினைவுபடுத்திக்கொண்ட மாணவர்களுக்கு தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும், மறக்காது!
கணக்கும் அப்படித்தான்! ஒரு வேடிக்கை பார் என்பார்! சூத்திரங்களைப் பயன்படுத்தி எவ்வளவு சுலபமாக விடை வருகிறது பார் என்று விளையாட்டுத்தனமாகவே சொல்லிக்கொடுப்பார். மாணவர்களும் உற்சாகத்துடன் படிப்பார்கள். ஒரு சென்டிமீட்டருக்கு எத்தனை மில்லிமீட்டர்? ஒரு மீட்டருக்கு எத்தனை சென்டிமீட்டர்? ஒரு கிலோமீட்டருக்கு எத்தனை மீட்டர்? அப்பாவிடம் படித்த மாணவர்கள் இதற்கு விடைகூற சிரமப்பட மாட்டார்கள். ஏனென்றால், “மில்லி சென்டி டெசி மீட்டர் டெகா ஹெக்டா கிலோ மீட்டர்” என்ற பாட்டு அவர்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும். இதெல்லாம் அவராகக் கண்டுபிடித்த வாய்ப்பாடுகள்.
பாபாஜானின் இலக்கணப் பிழையற்ற ஆங்கிலப் புலமையும், க்ரமாடிக்கல் மிஸ்ட்டேக்ஸ் இல்லாத தமிழ் உச்சரிப்பும் சக ஆசிரியர்களையே வியப்பில் ஆழ்த்தும். ஒருமுறை பெரிய எஜுகேஷனல் இன்ஸ்பெக்டர் ஒருவர் ‘சையது ரஹ்மானின் நாவில் சாட்சாத் சரஸ்வதியே வாழுகிறாள்’ என்றாராம்.
எங்கள் வீட்டில் ஒரு சேர்கூட இருந்ததில்லை. பாபாஜானுக்காக ஒரு ஈசி சேர் மட்டுமே இருந்தது. டியூப் லைட் இருக்கவில்லை, எல்லாம் குண்டு பல்புகள்தான். ஒரு ஃபேன்கூட இருக்கவில்லை. ரேடியோ டிரான்சிஸ்டர் ஏதும் இருந்ததில்லை. ஸ்டவ் இருந்ததில்லை, விறகு அடுப்பில்தான் சமையல் செய்வோம். எங்கள் வீட்டில் இருந்ததெல்லாம் அன்பு, அன்பு, அன்பு மட்டுமே.
ஏழு பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு பாபாஜானின் வருமானம் போதவில்லை. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம்தான். எனவே, தன் அக்காள் மகன்களை அழைத்து வந்து அவர்களை வைத்து வேறு சில தொழில்களையும் முயற்சி செய்தார் பாபாஜான். எல்லாமே நஷ்டத்தில்தான் முடிந்தன.
ஒரு நல்லாசிரியர் எனப்படுபவர் ஒருநாளும் வியாபாரி ஆகவே முடியாது அல்லவா?
ஆனால் ஒரு தொழிலை மட்டும் பாபாஜான் எப்போதும் செய்து வந்தார். காந்திமகான் சொன்ன ராட்டையில் நூல் நூற்பதுதான் அது. பாபாஜான் மட்டுமல்ல, அம்மாவும் நூல் நூற்பார். எங்கள் காம்பவுண்டிலேயே கதர் கடை இருந்தது. அங்கே பஞ்சு கொடுப்பார்கள், நாம் அதை நூலாக நூற்று, சிட்டம் போட்டு, கொண்டு போய் கொடுத்தால் அதற்கு கூலி கொடுப்பார்கள். வீட்டில் இரண்டு ராட்டைகள் இருந்தன. இரண்டில் ஒன்று கெட்டுப்போனாலும் எப்போதும் ஒன்றாவது இயங்கும் நிலையில் இருக்கும். வீட்டில் இருக்கும்போது கிடைக்கிற நேரத்தில் எல்லாம் ராட்டையில் நூல் நூற்பார். நூற்ற நூல்களை சிட்டம்போட்டு கதர் கடையில் கொண்டு போய் கொடுப்போம். வாரம் முழுவதும் கொடுக்கப்பட்ட சிட்டங்களைக் கணக்குப்போட்டு சனிக்கிழமை அதற்கான காசு தரப்படும். சனிக்கிழமை சந்தையில் காய்கறி வாங்க அந்தப் பணம் உதவும். நாங்களும்கூட தக்ளியில் நூல் நூற்றதுண்டு. ஆனாலும் பாபாஜான், அம்மா நூற்பது போல எங்களால் அழகாக நூற்க முடியவில்லை. டியூஷன் நடத்திக்கொண்டே ராட்டையில் நூல் நூற்பார் பாபாஜான்.
*
நூல் அநேகமாக மே மாதம் வெளிவரும்.
இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அப்பாவின் புகைப்படங்கள் மூன்றே மூன்று மட்டும்தான் எங்களிடம் உண்டு. இது பென்ஷன் ஆதாரத்துக்காக எடுத்தது. இன்னொன்று, குடும்பத்துடனும் வீட்டுக்கு வரும் பள்ளி மாணவர்களுடனும் எடுத்த குரூப் போட்டோ. (அதை ஸ்டுடியோவிலிருந்து வாங்கவே இல்லை.) மற்றொன்று சின்ன மாமாவின் திருமணத்தின்போது எடுத்தது. இன்று கம்ப்யூட்டரிலும் எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கிலும் எங்களுடைய பல்லாயிரம் படங்கள் இருக்கின்றன. அப்பாவின் இன்னும் கொஞ்சம் புகைப்படங்கள் இருந்திருக்கலாம் என்று ஏக்கம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.


Shahjahan R

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails