அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்
குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்
பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே
குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்
போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்
குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு
மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்
பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்
குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்
மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்
Source : http://eraeravi.wordpress.com/