Monday, November 21, 2011

பராக் ஒபாமா ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால்?


வணங்காமுடியார், அரசார், மதனார் யார் எதில் சிறந்தவர்? - குழந்தைவேலு, புதுவை.
அதை வாசகர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும்.

என்னை நானே    ஜாம்பவான்களுடன் ஒப்பிடக் கூடாது.

"ஜெயலலிதா போயஸ் கார்டனையும் மனநல மருத்துவமனையாக மாற்றி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்கிறாரே மு.க. ஸ்டாலின்? - சிவா, மயிலாடுதுறை.

ஆத்திரத்தின் வெளிப்பாடு.

கருணாநிதி தம் கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக்கப் போவதாக அறிவித்திருந்தாரே!

அதுபோல் ஜெயலலிதாவும் தம் வீட்டை மனநல மருத்துவமனையாக மாற்றிப் பொதுத் தொண்டாற்றினால் இவருக்கென்ன?

"ஸ்டாலினுக்கு அம்மருத்துவமனையில் நிச்சயமாக இடம் உண்டு" என ஜெயலலிதாவோ அல்லது அவரது அமைச்சர்களோ இன்னும் எதிர் அறிக்கை விடாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

கையில் நாலு காசு சேரும்போது பதட்டமாகவும், காசு இல்லாதபோது எரிச்சலாகவும் உள்ளது. ஏதாவது இலவச ஆலோசனை தாருங்கள். - சிக்கந்தர், மண்ணடி.
வணங்காமுடியைப் போல் தேவைக்கு மட்டும் காசைத் தேடிக் கொண்டால்  போதும். செலவுகளுக்குத் தக வரவைத் தேடி, வரவுக்குத் தக செலவு செய்தால் பதட்டமும் இராது; எரிச்சலும் வராது.

மரணம் எப்போது என ஒரு மனிதனுக்குத் தெரியுமானால் அவனது வாழ்க்கை எப்படி இருக்கும் வணங்காமுடியாரே? - அனு, நெய்வேலி.

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண நாளும் நேரமும் முன் கூட்டியே தெரிந்து விடும். சிலர் பிரார்த்திப்பார்களாம்; சிலர் அழுது அரற்றுவார்களாம்; சிலர் விரக்தியாய்ச் சிரிப்பார்களாம்; சிலர் பைத்தியம்போல் உளறுவார்களாம். இவை சில கைதிகளின் சிறை அனுபவப் புத்தகங்களில் படித்தவை.


மோடியின் நிர்வாக திறமையை புகழ்ந்த அமெரிக்கா அவருக்கு அமெரிக்கா வர விசா வழங்க மட்டும் மறுக்கிறதே...ஏன்? - பாஸ்கர், குமாரகோவில்.

மோடியைப் புகழ்ந்தது மோடியின் அமெரிக்க லாபியின் திறமையால் என இப்பகுதியில் முன்னர் விடையளித்துள்ளேன். அமெரிக்காவில் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பால்தான் மோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது.

பதிற்றுப்பத்து சேரர்களைக் குறித்துப் பாடும் பாடல்கள் என்பது உண்மையா? எனில், சேரர்கள், சோழர்-பாண்டியர்களைவிட மேலாக நல்லாட்சி செய்தனரா? - கண்ணன், மதுரை.

பதிற்றுப்பத்து சேரர்களைக் குறித்துப் பாடும்  இலக்கியம் தான்.

ஓர் இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவர்களாக வந்துவிட்டதால் மட்டும் அவர்கள் சோழ பாண்டியர்களை விட நல்லாட்சி புரிந்தனர் என்று முடிவு செய்யக்கூடாது. சோழ பாண்டியர்களைப் பற்றியும் இவ்வகை இலக்கியங்கள் உள.

கோவை மேயர் தேர்தலில் மூன்றாவது இடம் பிடித்த அமிர் அல்தாஃப் பற்றி உங்கள் கருத்து? - ஜாஃபர், கோவை.

மூன்றாம் இடத்துக்கு வந்த அவர் முதல் இடத்தைப் பெற இன்னும் நிறைய அரசியல் படிக்க வேண்டும் என்று தெரிகிறது.

போதி தர்மன் சீனா சென்று மருததுவம், பாதுகாப்பு கலைகள் கற்று தந்தள்ளார், ஆனால் ஏன் அவர்களுக்கு 'தமிழ்' கற்று தரவில்லை...? - சினிமாவில் வருவதெல்லாம் உண்மை என்று நம்பும் 'அப்பாவி' தமிழன், சென்னை.

அவர் சென்ற நோக்கத்துக்கு அங்குள்ள மொழியைக்கற்பதே பொருத்தமாக இருந்திருக்கும்.... கிருத்துவம் பரப்ப இங்கு வந்த ஜி யு போப் கால்டுவெல் போன்றோர் தமிழ் மொழியைக் கற்றதுபோல் ....

சினிமாவில் வருவதெல்லாம் உண்மை எனத் தமிழர்களுள் பெரும்பாலோர் நம்புவதால்தான் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலிலும் எதிர்க்கட்சி நாற்காலிகளிலும் அமர்ந்து வருகின்றனர்.

பராக் ஒபாமா ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தால்? - முத்துக் கருப்பன், கும்பகோணம்.

ஒபாமா தமிழ்நாட்டுக்காரர் எனக் கொண்டு இவ்வினாவுக்கு விடையளித்தால்..

ஜெயலலிதாவின் காலில் விழுந்திருப்பார்; சட்ட சபையிலும் போயஸ் தோட்டத்திலும் காலணி அணியாமல் நடப்பார். ஜெயலலிதாவின் கார் டயரைத் தொட்டுக் கும்பிட்டிருப்பார். எந்த ஒரு முடிவும் எடுக்காமல் அம்மாவின் கடைக்கண் அசைவிற்காகக் காத்திருப்பார். அலகு குத்தி மண்சோறு சாப்பிட்டிருப்பார்.

கடந்தகால் அ இ அ தி மு க அமைச்சர்களின் செயல்பாடுகளில் இருந்து எடுத்தவை இவை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின்  புதிய தலைவராக ஞான தேசிகன் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி? - கவிமுகில், சிதம்பரம்.

எந்தப் புதிய தலைவராலும் அக்கட்சியை வளார்த்துவிட முடியாது. ஞானசேகரன் அ இ அ தி மு க அபிமானி எனச் சொல்கிறார்கள். எதிர்வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த நியமனம் என்றும் சொல்கிறார்கள். காங்கிரஸ் சவாரி செய்ய ஏற்ற முதுகைத் தேட அக்கட்சிக்குப் புதிய ஏஜண்ட்; அவ்வளவுதான்.

தனக்கு எவ்விதத்திலும் சம்மந்தமே இல்லாத விடயத்தில் யாரும் அழைக்காமலே தானே முன் வந்து கருத்து கூறுபவர்களுக்கு வ. மு வின் அறிவுரை என்ன? - என். ஆர். நந்தக்குமார், துபாய்.

அதிகப்பிரசங்கிகள்.

அறிவுரை ஆலோசனை என்பன யார் தம்மை மதித்துக் கோருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர், நண்பர் மற்றும் தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு இது பொருந்தாது.

ராஜீவ் கொலை வழக்கில் உள்ள சில மர்மங்களும், மும்பை குண்டு வெடிப்பில் உள்ள சில மர்மங்களும் தெளிவுபடுத்தப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தூக்கில்போட சிலர் துடிப்பது ஏன்? - அண்ணாமலை, சென்னை.

சிக்காமல் இருக்கும் சிலரைக் காப்பாற்றத்தான்.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source :http://www.inneram.com/

1 comment:

S. L. Xavier said...

Timing Answers...
S. L. Xavier
Arumuganeri

LinkWithin

Related Posts with Thumbnails