Tuesday, November 8, 2011

ஆண்களுக்கான ஜட்டி விளம்பரங்களில்கூட பெண்களை அரைக்குறை ஆடையுடன் காட்டுவது ஏன்?
அழகிப் போட்டி என்று நடத்துகிறார்களே, அவற்றில் வெற்றியடைபவர்கள் உண்மையிலேயே அழகிகளா? - பாமரன், சென்னை.
உண்மையிலேயே அழகிகளா என வினவியிருக்கிறீர்கள்.

அழகு என்பதன் வரையறை என்ன? அதன் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடும். beauty lies in the beholder's eyes. கடந்த அரை நூறாண்டுக் காலத்தில் நடைபெற்று வருகின்ற அழகிப் போட்டிகள் ஒரு இருபதாண்டுக்குள் சாதாரண மக்களும் அறியும் வண்ணம் ஊடக வெளிச்சத்தால் பிரபலமாகி விட்டது. உலகமயமாக்கல் எனும் பொருளாதாரத் திருப்பத்துக்குப் பின் அழகிப் போட்டிகள் பன்னாட்டு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு நடத்தப்படும் ஒரு மாபெரும் விளம்பர மேளாவாகி விட்டது. அழகுசாதனப் பொருட்களுக்கு எந்த நாட்டில் சந்தை தேவையோ அந்த நாட்டு இளம் பெண்கள் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப் படுவர். தொடர்ந்து இந்தியப் பெண்கள் உலக அழகிகளாகவும் ப்ரபஞ்ச அழகிகளாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இப்போது இந்தியாவில் சந்தை நிலைப்பட்டு விட்டதால் வேறு 'வளரும்நாடு'களுக்கு அழகிப் பட்டம் போகிறது அவ்வளவுதான்.

"கருணாநிதிக்கு ஓய்வளிக்க மக்கள் விரும்பிவிட்டனர்" என்று அவருடைய மக்களுள் ஒருவரான ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி? - ப.கோ. வசீகரன்.

மக்கள் கருணாநிதி விரும்பியதைத்தான் வழங்கியுள்ளனர்.

அவர் ஆட்சியில் இருக்கும்போது  அருந்ததியர் சங்கத்திடம் கேட்டு வாங்கிய பாராட்டு விழாவில் ஏற்புரையாற்றிய கருணாநிதி செம்மொழி மாநாடு, புதிய தலைமைச் செயலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய மூன்று ஆசைகள் நிறைவேறிய பின் அரசியலில் இருந்து ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்னார். அவர் தாம் சொன்னபடி செய்ய மாட்டார் என அறிந்திருந்த மக்கள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி விட்டனர். இப்போது கனிமொழி பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்க அவருக்கு இவ்வோய்வு தேவைதான்.


வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஏன்? - சாதிக், மயிலாடுதுறை.
உலகப் பணக்காரனின் மறுபக்கம் வால்ஸ்டீட் போராட்டம். அமெரிக்க நாட்டின் பொருளாதார மையத்தின் அடையாளமே வால்ஸ்ட்ரீட். சமீப காலமாக அமெரிக்கா பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் rich becomes the rich and the poor becomes more poor என்பது உண்மைப்படுத்தப் பட்டது. வேலை இல்லை; வருவாய் இல்லை. அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சியே வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு.

தமிழ் இலக்கியங்களில் சிறந்தது எது? - அன்புச்செல்வன், லாஸ் ஏஞ்சலஸ்.

சங்க இலக்கியங்களும் ஐம்பெருங்காப்பியங்களும் கம்பராமாயணமும் நிகரற்றவை.

ஒரு சிலர், கட்டிய மனைவி இருக்கும்போது பிறன் மனை நோக்குவது ஏன்? - சிவா, கோவை.

மனம்தான் காரணம். மனித மனம் அப்படித்தான்.

கண்டபடி மேயும் மனதை "அங்காடி நாய்" என்றார் பட்டினத்தார்.

நாய்க்குணம் உடையோர் ஆணாயினும் பெண்ணாயினும் இப்படித்தான் அலைவர். ஒழுக்கம் உள்ளவர்கள் - பண்பட்ட மேன் மக்கள் - மனதையும் கண்களையும் கட்டுக்குள் வைத்திருப்பர். அதுதான் ஆண்மைக்குரிய அடையாளம்.

வள்ளுவன் "பிறன்மனை நோக்காப் பேராண்மை" என்கிறான்.காங்கிரஸில் தென்னிந்தியர்கள் குறிப்பாக (ப.சிதம்பரம் போன்ற) தமிழகத்தைச் சார்ந்தவர்கள், அடுத்த  பிரதமராகும் வாய்ப்புள்ளவர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ராகுல் காந்திக்கு வழிசெய்து கொடுப்பதற்காகவே 2G விவகாரம் இழுத்தடிக்கபடுவதுபோல் தெரிகிறதே? - சி.மோகன், சிங்கப்பூர்.

அது உங்கள் கற்பனை!
2 ஜி யில் ஊழல் புரியும் வாய்ப்புக் கிடைக்கும் முன்னரே மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பைக் கருணாநிதி கெடுத்தார் என ஒரு வலுவான பேச்சு அரசியல் அரங்கில் இருந்ததைக் கேள்விப்பட்டுள்ளீர்களா?

ராகுல் காந்தி பிரதமராக வருவது காங்கிரசின் வெற்றிக்கும் அதன் மேலிடத்தின் விருப்பத்துக்கும் உட்பட்டது.
பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க ஜெயலலிதா சமர்ப்பித்த மனுவை விசாரிக்க விருப்பமில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? - நடேசன், துபாய்.

அது சட்டப்படி அவருக்குள்ள உரிமை. ஜெயலலிதாவின் மனுவை அவர் தள்ளுபடி செய்யவில்லையே. வேறு நீதிபதிகள் விசாரிப்பர்.


தமிழக அரசின் அண்ணா நூலக இடமாற்ற அறிவிப்புக்கான தடை மற்றொரு சமச்சீர் கல்வி வழக்காகுமா? - ஆன்றோ ஜெயரெஸ்ட், சென்னை.

ஆகலாம்.

கருணாநிதி ஜெயலலிதா எனும் இருவருக்கிடையில் எழுந்த "நீயாநானா" போட்டியில் பாவம்  அறிவுதேடுவோர் அவதிப்படுகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு நூலகங்கள் பிடிக்காமல் போய்விட்டனவா? புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த செம்மொழி நூலகம் போன வழியில் அண்ணா நூலகமும் போகுமா?


ஆண்களுக்கான ஜட்டி விளம்பரங்களில்கூட பெண்களை அரைக்குறை ஆடையுடன் காட்டுவது ஏன்? - மன்ஸூர், கன்னியாகுமரி.

மனோதத்துவ உத்தி.

கண்கள் பெண்கள் பக்கமே திரும்பும் வண்ணமே ஆணின் மனம் படைக்கப் பட்டிருக்கிறது. அப்படி ஆணைப் பெண் ஈர்க்காவிட்டால் இச்சை எழாது இனப்பெருக்கம் நடவாது.

ஆண்களுக்குரிய பயன்பாட்டுப் பொருட்களுக்கும் பெண்களை விளம்பர மாடல்களாக்குவது இதனால்தான்.

வித விதமான ஆடைகள், நகைகள், ஃபேன்ஸி பொருட்கள் என வியாபார உலகம் பெண்களை டார்கெட் செய்வதன் காரணம், அவர்களின் மனம் அவற்றை விரும்புவதாலா? அல்லது இவர்களின் வியாபாரத்திற்காக பெண்களின் மனதை இவற்றிலேயே முடக்கவேண்டுமென்பதற்காகவா? - ஸாஜிதா,  கோவை.

பெண்கள் அவற்றை விரும்புவதால்தான்.

விற்பனை இல்லாவிட்டால் சந்தைக்கு அவை ஏன் வருகின்றன?


"இமாம் அலி கூட்டாளிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என முன்னர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் மனு அளித்ததும் அத்வானியின் தமிழக வருகையின்போது கண்டெடுக்கப்பட்ட குண்டு சம்பவத்தில் "இமாம் அலி கூட்டாளிகள்" என சிலரைக் காவல்துறை கைது செய்திருப்பதும் என்ன காட்டுகிறது? - அன்ஸார், குவைத்.

நம் இந்நேரம்.காம் தளத்தில் "திசைதிருப்பும் முயற்சியா?" என ஒரு கட்டுரை வெளியானதைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

எல்லாம் அரசியல்.

ஜெயலலிதா முன்னர் விடுதலைப் புலிகளால் ஆபத்து என்றார். இப்போது புதுக் காரணம் சொல்கிறார். முதல்வர் என்ற அதிகாரமோ பதவி தரும் உயர் மட்டப் பாதுகாப்போ இல்லாமல் ஐந்தாண்டுகள் கொடநாட்டிலும் சிறுதாவூரிலும் முடங்கிக் கிடந்தபோதோ நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுதேர்தல்களில்  பிரச்சாரம் செய்தபோதோ இமாம் அலி கூட்டாளிகள் பற்றிய  அச்சம் அவருக்கு ஏற்படவில்லை. இப்போது ஒரு மாநில முதலமைச்சர் என்ற தகுதியோடு பெங்களுரு செல்லும்போது மட்டும் இவ்வச்சம் ஏன் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. முப்பது லட்சம் ரூபாய் செலவில் கர்நாடக அரசு பாதுகாப்பு வழங்கியது. தமிழ்நாட்டில் இருக்கும் இமாம் அலி கூட்டாளிகள் தமிழ்நாட்டில் இம்முயற்சியில் ஈடுபடாமல் பெங்களூருவில் போய் ஈடுபடுவார்களாம் :--)
கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ற உச்ச நீதிமன்ற அறிவிப்பில், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மறுத்துவிடமுடியாது" என காரணம் கூறியிருப்பதால், 3000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றொழித்த மோடிக்கு எதிரான வழக்கிலும் இதே காரணம்கூறி உச்ச நீதிமன்றம் மோடியைக் கைது செய்ய உத்தரவிடும் என எதிர்பார்க்கலாமா? - அருள், கத்தார்.

கனிமொழி ஜாமீனை மறுத்தது பாட்டியாலா ஹவுஸில் உள்ள சி பி ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி.

உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கலாம்.

ஒரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன கருத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பின்பற்ற வேண்டும் என்ற தேவையில்லை.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2011110620024/vanagamudi-answers-30-10-2011

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails