Thursday, November 3, 2011

சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும் by நாகூர் ரூமி

சமகால மொழிபெயர்ப்பும் இஸ்லாமியப் படைப்பாளிகளும்
கடந்த 01.10.11 அன்று குற்றாலத்தில் நடந்த இஸ்லாமிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கில் நாகூர் ரூமி வாசித்த  கட்டுரை
அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலங்குமோ ரிறையின் இனிய பேர் போற்றி.

அஸ்ஸலாமு அலைக்கும்.
 இறையருட் கவிமணியின் வார்த்தைகளில் என் உரையைத் தொடங்கியிருப்பது இந்த தலைப்புக்கு மிகவும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். “பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்” என்ற அரபி வாக்கியத்திற்கு “அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலங்குமோ ரிறையின் இனிய பேர் போற்றி” என்பதைவிட  சிறப்பான கவிதா மொழிபெயர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. தமிழ் இலக்கியத்திற்கு தமிழ் முஸ்லிம்களின் பங்கு எவ்வளவு மகத்தானது என்பதை விளக்க இந்த இரண்டு வரிகளே சான்று.
சமகால மொழிபெயர்ப்புகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் மொழிபெயர்ப்பு என்ற கலை பற்றிப்  பேசவேண்டியுள்ளது. சமகாலம் என்று தலைப்பு சொல்லியிருந்தாலும், சமகாலத்துக்கு முந்தியும் கொஞ்சம் பின்னோக்கிப் போய்ப் பார்க்க வேண்டியுள்ளது.
மொழிபெயர்ப்பு என்பது ஓர் அற்புதமான ஆனால் சவால் மிகுந்த கலையாகும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பைச் செய்வது எளிதான காரியமல்ல. இரண்டு அல்லது பல மொழிகள் பற்றிய  அறிவு ஒருவரை நல்ல மொழிபெயர்ப்பாளராக மாற்றிவிடாது. மொழியறிவோடு, இலக்கியம், இலக்கிய வடிவ வகைகள், வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, தத்துவம், மார்க்கம், சட்டம் – இப்படிப் பல துறைகளிலும் கணிசமான பரிச்சயம் தேவைப்படுகிறது. அடிப்படையில் மொழியானது பண்பாட்டின் குறியீடாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. எப்படி மொழிபெயர்க்கக் கூடாது என்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். மைக்ரோ இகனாமிக்ஸ் பாடப்புத்தகத்தில் “The govt has a big role to play” என்பதை “அரசு விளையாடுவதற்கு ஒரு பெரிய உருளையை வைத்திருக்கிறது” என்று தமிழாக்கம் செய்திருந்ததாக பல ஆண்டுகளுக்கு முன்னால் துக்ளக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது தெரிந்திருக்கலாம். வார்த்தையை மட்டும் பார்த்தால் இப்படி அபத்தமாகத்தான் போய் முடியும். தூயதமிழ் என்ற பெயரில் ரோஜா ரோசாவானதிலிருந்து அது தன் அழகையும் நறுமணத்தையும் இழந்து தவிக்கிறது.
மூலத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆவலில், ”Shit, he said” என்ற வாக்கியத்தை “மலம், அவன் சொன்னான்” என்று மொழி பெயர்க்கக் கூடாது. தமிழ்ப்படுத்துவது வேறு, தமிழைப் படுத்துவது வேறு. அந்த வாக்கியம் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை நான், “’அடச்சே’ என்று சொன்னான்” என்று தமிழாக்கம் செய்திருப்பேன்.
கல்லூரி மாணவனாக இருந்தபோது வாலஸ் ஸ்டீவன்ஸ் என்ற அமெரிக்க்க் கவிஞருடைய Of Mere Being என்ற கவிதையை “வெறும் இருப்பு பற்றி” என்று தமிழாக்கம் செய்திருந்தேன். ஆனால் அதே கவிதையை என் பேராசிரியர் ஆல்பர்ட் “சும்மா இருப்பது பற்றி” என்ற தலைப்பில் ஏற்கனவே தமிழாக்கம் செய்து வைத்திருந்ததைப் படித்தபோதுதான் மொழிபெயர்ப்பில் அனுபவம் என்பதும், ஆழமான உள் வாங்குதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது.
மொழியாக்கம் செய்பவர்கள் பண்பாட்டையும் பயன்பாட்டையும் மனதில் வைத்து செய்ய வேண்டும். காஃபியை காஃபியாகவே ஏற்றுக்கொள்வதால் அதன் சுவை குறையப் போவதில்லை.  அதைக் “கொட்டை வடி நீர்” என்று தமிழாக்கம் செய்யும்போது அதன்  அர்த்தம் தேவையில்லாத பரிணாமங்களை எடுத்துவிடுகிறது! ’முண்டக் கூவி’ என்ற ஒரு பதத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அரசாங்கக் கடிதங்களில் கண்டேன். அரசாங்கம் யாரையோ திட்டுகிறது என்றுதான் அப்போது நினைத்தேன். ஆனால் அது trunk call என்பதன் தமிழாக்கமாம்! ’ட்ரங்க்’ என்றால் ’முண்டம்’, ’கால்’ என்றால் ’கூவுதல்’ எனவே முண்டக் கூவி! தண்டங்களும் முண்டங்களும் அரசு மொழிபெயர்ப்புத் துறையில் இருந்ததனால் ஏற்பட்ட விளைவுகள் என்று அவற்றைக் குறிப்பிடலாம்!
மொழிபெயர்ப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1.மொழிபெயர்க்க எளிமையானவை,
2.மொழிபெயர்க்க கடினமானவை மற்றும்
3. மொழிபெயர்க்க முடியாதவை.
The meeting begins at 10 am tomorrow என்பதை “நாளைக்காலை பத்து மணிக்கு கூட்டம் தொடங்குகிறது” என்று தமிழாக்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதில் கலாச்சாரச் சிக்கலோ வேறுவிதமான நுட்பங்களோ இல்லை. மொழிபெயர்க்க எளிமையானது என்ற வகையில் இப்படிப்பட்டவற்றைச் சேர்க்கலாம்.
இரண்டாவது வகை மொழி பெயர்க்கக் கடினமானவை. சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
இப்ராஹீம் நபியும் அவர்களது மகனார் இஸ்மாயீலும் இறையில்லமான க’அபாவைப் புனர் நிர்மாணம் செய்துவிட்டு, “எங்களுடைய இறைவனே, (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக” (2:127) என்று பிரார்த்திக்கிறார்கள். இதில் திருமறையின் அரபி மூலத்தில் “ரப்பனா, தகப்பல் மின்னா” என்று மட்டும்தான் இருக்கிறது. “உனக்காக நாங்கள் செய்த இப்பணியை” என்ற வாக்கியம் இல்லை. ஆனால் அது சொல்ல வரும் அர்த்தம் அதுதான்.
1929-ல்  வெளியான ஆ.கா அப்துல் ஹமீது பாக்கவியின் தர்ஜுமத்துல்குர்’ஆன் மொழிபெயர்ப்பு இது. இது நுட்பமான, ஆழமான மொழிபெயர்ப்பாகும். அவர்களின் தமிழாக்கம் முழுவதிலுமே இத்தகையை வார்த்தைகளும், வாக்கியங்களும் அடைப்புக்குறிகளுக்குள் கொடுக்கப்பட்டிருக்கும். அவைகள் நம் புரிந்துகொள்ளலை எளிமையாக்கும் பொருட்டு செய்யப்பட்ட உபரி சேவையாகும். ஆழமான புரிந்து கொள்ளலின் வெளிப்பாடுமாகும். மூலவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று புரிந்துகொண்டால்தான் திருமறையை இப்படித் தமிழாக்கம் செய்ய முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு கஜலைக் கேட்டு சித்தேன். யார் பாடியது, வார்த்தைகளின் அர்த்தமென்ன என்றெல்லாம் தெரியாது. ஆனால் “பாவோன் பாரி ஹோகயீ” என்ற சொற்கள் மட்டும் அதில் பல்லவியைப் போல திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன.  அதற்கு என்ன அர்த்தம் என்று உர்து நன்றாகத் தெரிந்த நண்பரைக் கேட்டேன். ’பாவோன்’ என்றால் பாதங்கள், ’பாரீ ஹோகயீ’ என்றால் வீங்கிப் போயிருக்கின்றன என்று சொன்னார். ஆனால் ஒரு பெண்ணை அந்த வார்த்தைகளைச் சொல்லித் தோழிகள் கிண்டல் செய்வது போன்ற தொனியில் அப்பாடல் அமைந்திருந்தது. அர்த்தம் தெரிந்த பின்னும் அர்த்தம் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.
உர்து ஆழமாகத் தெரிந்த இன்னொரு நண்பர்தான் பிறகு விளக்கினார். அந்தச் சொற்கள் ’இடியம்’ எனும் மரபுத் தொடர் வாக்கியம். ஒரு பெண், குழந்தை உண்டாகியிருப்பதை அது குறிக்கிறது. ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு பாதங்கள் வீங்கிப் போவதுண்டு. குழந்தை தரிப்பது, பாதம் வீங்குவது, அவை இரண்டிற்குமான தொடர்பு, அதை இதால் குறிக்கின்ற கலாச்சாரம் – இவையெல்லாம் தெரிந்தால்தான் அப்பாடலை விளங்கிக் கொள்ளவோ மொழிபெயர்க்கவோ முடியும், அல்லவா? எனவே மொழிபெயர்ப்பு செய்வதற்கு முன் அம்மொழிகளின் பின்னால் இருக்கும் கலாச்சாரம், பண்பாடு, மரபுத் தொடர்கள் ஆகியவற்றிலும் பரிச்சயம் இருப்பது அவசியம்.
Do not carry coal to Newcastle என்பதை ”திருப்பதிக்கே லட்டா?”, “நாகூருக்கே குலாப்ஜானா?”, “ஆம்பூருக்கே பிரியாணியா?”, “குற்றாலத்துக்கே குளிர்பதனமா?” என்றோ இதையொத்த வேறு வாக்கியங்களிலோ தமிழ்ப்படுத்த வேண்டும். ஏனெனில் இங்கிலாந்தின் நியூகாஸ்ல் நகரில் இருந்துதான் நிலக்கரி அதிகமாக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. அதற்கே நிலக்கரி கொண்டு போவது அபத்தமான செயலாகிவிடும். சாலையெல்லாம் தங்கமாக இருந்த சுலைமான் நபியின் ராஜ்ஜியத்துக்கு பரிசளிக்க தங்கத்தை ஒரு தட்டில் வைத்து எடுத்துச் சென்ற பல்கீசின் மனநிலைதான் ஞாபகம் வருகிறது. எனவே இத்தகைய மரபுத் தொடர்களை தமிழாக்கம் செய்ய வரலாறு தெரிந்திருக்க  வேண்டியிருக்கிறது.
Do not flog a dead horse என்ற ஆங்கில மரபுத் தொடரை “செத்த பாம்பை அடிக்காதே” என்றும், Do not cast pearls before swine என்பதை ”கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை” என்றும் தமிழ்ப்படுத்த வேண்டும். இங்கே நாம் கவனிக்கவேண்டியது மரபுத்தொடர்களின் அர்த்தம் மட்டுமல்ல, மிருகங்களின் பெயர்களும்தான். ஆங்கிலத்தில் குதிரையாக இருந்தது தமிழில் பாம்பாகவும், ஆங்கிலத்தில் பன்றியாக இருந்தது தமிழில் கழுதையாகவும் மாறிவிடுகிறது! இந்த உருமாற்றம் கலாச்சார, பண்பாட்டு மாற்றம். இதைப் புரிந்து கொள்ளாமல் மொழிபெயர்த்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி! கிருஷ்ணகிரி எப்படிக் கிழியும் என்று நீங்கள் கேட்பீர்களேயானால் அரசு மொழிபெயர்ப்புத் துறையில் பணிபுரியும் தகுதி உங்களுக்கு வந்துவிட்டது ன்று அர்த்தம்!
மூன்றாவது வகை மொழி பெயர்க்கவே முடியாத விஷயங்கள். ”தில்லா டாங்கு டாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு” என்ற பாடலை எவ்வளவு பாண்டித்தியத்தோடு தமிழாக்கம் செய்ய முயன்றாலும் தமிழில் உள்ள அழுத்தம், கேட்பவர் மனதில் ஏற்படும் கிளர்ச்சி போன்றவையை எந்த மொழிபெயர்ப்பாலும் ஏற்படுத்த முடியாது. ”நீச்சோறு”, “சீம்பால்”, “கலிச்சல்ல போவா”, “படிய உளுந்துருவா” போன்ற வார்த்தைகளும் வாக்கியங்களும்கூட இப்படிப்பட்டவையே. இவற்றுக்கு விளக்கம் தரலாம். ஆனால் இன்னொரு மொழிக்கு அப்படியே கொண்டுபோக முடியாது. ஷேக்ஸ்பியரைத் தமிழ்ப்படுத்தும்போது நிகழ்வதும் இதுதான். உடல் கிடைத்துவிடுகிறது. ஆனால் உயிரை ஷேக்ஸ்பியரே வைத்துக்கொள்கிறார்!
They were Jung and Freudened என்றொரு வாக்கியம் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற அமெரிக்க நாவலாசிரியரின் Finnegans Wake என்ற நாவலில் வரும். விளக்கமாக சில பத்திகள் எழுதலாமே தவிர, இந்த வாக்கியத்தைத் தமிழ்ப்படுத்தவே முடியாது. ஏனெனில் யங், ஃப்ராய்டு ஆகிய உளவியலாளர்களின் பெயர்களை வினைச்சொல்லாக்கி ஜேம்ஸ் ஜாய்ஸ் இங்கே விளையாடுகிறார். யங்கும், ஃப்ராய்டும் மனநோய்கள் பற்றி என்னவெல்லாம் சொல்லியிருந்தார்கள், அந்த மாதிரியான வகையில் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்று அந்த வாக்கியம் சொல்வதாக விளங்கிக் கொண்டு விளக்கக் குறிப்பு கொடுக்கலாமே தவிர, அந்த வாக்கியம் மாதிரியானதொரு வாக்கியத்தைத் தமிழில் தருவது சாத்தியமில்லை.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது மூல ஆசிரியரின் நோக்கம். அந்த நோக்கம் புரியாமல் மொழி பெயர்த்தால் எவ்வளவு சிறப்பாக மொழி பெயர்த்தாலும் அது சரியாக அமையாது. உமர் கய்யாமின் ருபாயியாத்-துக்கு ஆங்கிலத்தில் பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. ஆனால் உலகின் தலைசிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு என்று சொல்லப்படுவது ஃபிட்ஸ் ஜெரால்டின் மொழிபெயர்ப்புதான். ஆனால் உமர் கய்யாமின் சூஃபி பரிமாணத்தை முற்றிலுமாகப் புறக்கணித்த மொழிபெயர்ப்பு அது.  அது உமர் கய்யாமின் உடலை மட்டும் எடுத்துக்கொண்டது. உயிரை விட்டுவிட்டது. தமிழில் நான் அதை மொழிபெயர்த்தபோது இந்த உயிர், உடல் விஷயத்தை மனதில் வைத்தே செய்தேன்.
ஒரு மொழிபெயர்ப்பு மூலத்துக்கு முற்றிலும் உண்மையாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கும் நாம் விடை காண வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை முடியாது என்றே சொல்வேன். சில இடங்களில் மூலத்துக்கு இணையாகவும், சில இடங்களில் மூலத்தைவிட சிறப்பாகவும், சில இடங்களில் மூலத்தைவிட சிறப்பு குறைந்தும் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கும் சாத்தியம் உண்டு. மூல மொழி, மொழி பெயர்க்கப்படும் மொழி ஆகியவற்றின் சிறப்புக்கள், எல்லைகள், இலக்கணம், சாத்தியக்கூறுகள் முதலியன இதற்குக் காரணம். சில உதாரணங்கள்:
இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவின் ஒரு பகுதியாக இருந்த மின்ஹாஜுல் ஆபிதீன் என்ற நூலை அப்துல் வஹ்ஹாப் பாகவி பக்தர்களின் பாதை என்ற பெயரில் தமிழ்ப்படுத்தி இருந்தார்கள். ‘மின்ஹாஜ்’ என்றால் ‘பாதை’ என்று பொருள். ‘ஆபிதீன்’ என்றால் ‘இபாதத்’ செய்பவர்கள் என்று பொருள். எனவே ‘பக்தர்களின் பாதை’ என்பது, தலைப்பைப் பொறுத்தவரை, மூலத்துக்கு இணையானது என்று கூறலாம்.
அதே அப்துல் வஹ்ஹாப் பாகவி கஸ்ஸாலியின் இன்னொரு நூலான இல்ஜாமுல்அவாம்அன்இல்மில்கலாம் என்ற நூலை தர்க்கத்து அப்பால் என்ற தலைப்பில் தமிழ்ப்படுத்தி இருந்தார்கள். அரபியில் உள்ள தலைப்பை அப்படியே தமிழ்ப்படுத்தினால் “பாமரர்களுக்கான விதிகளும் இறையியல் தொடர்பான அறிவும்” என்று சொல்லாம். அனால் இந்த தலைப்பு நீளமானதாகவும், நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டாததாகவும் உள்ளது. எனவே நூலின் உள்ளடக்கத்தைக் கருத்தில் கொண்டு தர்க்கத்துக்கு அப்பால் என்ற தலைப்பில் அந்த நூலை வெளியிட்டார்கள். அப்துல் வஹ்ஹாப் பாகவி எழுதிய 50 அல்லது அதற்கும் மேற்பட்ட நூல்களில் மிக முக்கியமான நூல்களில் ஒன்றான தர்க்கத்துக்கு அப்பால், தலைப்பைப் பொறுத்தவரை, மூலத்தைவிட ஒரு படி மேலானதாக இருப்பது வெளிப்படை.
In the Line of Fire என்ற தலைப்பில் பாகிஸ்தானின் முன்னால் அதிபர் பர்வேஷ் முஷர்ரஃப் அவரது சுயசரிதம் எழுதினார். The Audacity of Hope என்ற தலைப்பில் தனது அரசியல் வாழ்க்கை பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு நூல் எழுதினார். அவ்விரண்டையும் நான் கிழக்கு பதிப்பகத்திற்காக தமிழாக்கம் செய்து கொடுத்தேன். தீயின் எல்லைக் கோட்டில் என்று முன்னதற்கும், நம்பிக்கையின் பிடிவாதம், உடும்பு நம்பிக்கை என்று இரண்டு தலைப்புகளை பின்னதற்கும் கொடுத்திருந்தேன். ஆனால் கிழக்கின் பிரதான ஆசிரியர் நண்பர் பா.ராகவன் அத்தலைப்புகளை, புத்தகம் விற்பதற்கு ஏற்றவாறு, உடல் மண்ணுக்கு என்றும் நம்மால் முடியும் என்றும் மாற்றிவைத்தார். அவர் கொடுத்த இரண்டு தலைப்புகளுமே விற்பனைக்கு உதவியதா என்று தெரியாது. ஆனால் தலைப்பைப் பொறுத்தவரை மூலத்துக்கு இணையானவை அல்ல என்று மட்டும் என்னால் சொல்ல முடியும்.
பகுதி 2
சமகால மொழிபெயர்ப்புகள் என்று சொல்லும்போது விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்களே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சமகாலம் என்பதை இருபது மற்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இருபத்தியோறாம் நூற்றாண்டு என்று வைத்துக் கொண்டால், 19-ம் நூற்றாண்டுதான் கணிசமான, முக்கியமான தமிழாக்கங்கள் அதிகமாக வந்த காலம் என்று சொல்ல வேண்டும். அந்த நூற்றாண்டில் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமறையும் நபிமொழியும் பலரால் மொழிபெயர்க்கப்பட்ட நூற்றாண்டு அது.
குலாம் காதிர் நாவலர்(1833—1908)
”சமகால முஸ்லிம் மொழி பெயர்ப்பாளர்களின் தந்தை” என்று நாகூர் மகாவித்துவான், பன்மொழிப் புலவர், நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர், குலாம் காதிர் நாவலரைச் சொல்ல வேண்டும். தமிழிலக்கியத்திற்கான நாகூரின் பங்களிப்பு அவரிடமிருந்தே தொடங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டில் நாகூரில் வாழ்ந்த மூன்று ராட்சச இலக்கிய ஆளுமைகளில் இவர் முதல்வர்.  இன்னொருவர் என் முன்னோரான வண்ணக் களஞ்சியப் புலவர். மூன்றாமவர் புலவர்  நாயகம் என்று அறியப்படும் செய்கு அப்துல் காதிர் நயினார் லப்பை ஆலிம். புலவர் நாயகம் நான்கு காப்பியங்களையும் மற்ற இருவரும் மூன்று காப்பியங்களையும் ஆக்கியவர்கள்.
19-ம் மையப்பகுதியில் துருக்கிப் பேரரசுக்கும், இரஷ்யப் பேரரசுக்கும் இடையே தொடர்ந்து பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ஜார்ஜ் வில்லியம் ரைனால்ட்ஸ் ஆங்கிலத்தில் Omar, A Tale  of the War என்ற தலைப்பில் ஒரு வரலாற்று நூலை எழுதினார். ஆங்கிலத்தில் மூன்று பாகங்களாக வெளிவந்த இந்த பிரமாண்டமான நூலை, தமிழில் நான்கு பாகங்களாக, பல்வேறு காலக்கட்டங்களில் மொழிபெயர்த்து, நூறாண்டுகளுக்கு முன்பே வெளியிட்டவர் குலாம் காதிர் நாவலர்.
ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது, பொருத்தமான இடங்களில் புதிய சொற்களை ஆய்வது, இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு வழக்குச் சொற்களை உரிய இடங்களில் கையாள்வது, வர்ணிக்கும் இடங்களில் தூய தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துவது என நடையில் பல திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் மகாவித்வான்.
உதாரணமாக தியோடோர் என்ற நாயகனின் பெயரை அப்படியே பயன்படுத்தியுள்ளார். ’தியோதோரு’ என்று எழுதவில்லை. ஷேக்ஸ்பியரை ’செகப்பிரியர்’ என்றும், சாக்ரடீஸை ’சோக்ரதர்’ என்றும் தமிழ்ப்படுத்தும் பண்டிதர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. இந்நூலை கல்தச்சன் பதிப்பகம் சார்பில் புதுக்கல்லூரி பேராசிரியர் முரளி அரூபன் அழகிய மறுபதிப்பு செய்து தமிழுக்கு அரிய தொண்டாற்றியுள்ளார்.
சென்ற 100 அல்லது 150 ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட படைப்புகள், மற்றும் மொழிபெயர்ப்புகள் யாவும் மார்க்கம் மற்றும் ஆன்மிகம் தொடர்பானவையாகவே இருந்துள்ளன. ஆரம்பத்தில் திருமறையும் திருநபியின் வாக்கும், வாழ்வும்தான் மொழிபெயர்ப்பாளர்களின் கவனத்துக்கு வந்திருக்கின்றன. கீழே கொடுத்துள்ள அட்டவணை இதைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன்:
வரிசை எண்
ஆண்டு
ஆசிரியர்
தமிழாக்க நூல்
குறிப்பு
1
1908
கா.மி.அப்துல்காதர் ராவுத்தர்
அல்குர்’ஆன்
விளக்க உரை
2
1927,31
பா.தாவூத் ஷா
ஜவாஹிருல்ஃபுர்கான்
விளக்கவுரை, 2 பாகங்கள்
3
1929
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி
தர்ஜுமதுல் குர்’ஆன்
பொருளுரை
4

S.S.அப்துல்காதர் பாகவி
திருமறைத் தமிழுரை
பொருளுரை
5

ஈ.எம்.அப்துல் ரஹ்மான்
அன்வாருல் குர்’ஆன்
ஏழு பாகங்கள்
6

P.S.K.முஹம்மது இப்ராஹீம்
தர்ஜுமதுல் குர்’ஆன்
பொருளுரை
7
1992
அல்பாகியதுஸ் ஸாலிஹாத்
ஜவாஹிருல் குர்’ஆன்
விளக்கவுரை
8

கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பவி
குர்’ஆன்
விளக்கவுரை
9

எம்.அப்து வஹ்ஹாப்
குர்’ஆன் தர்ஜமா
பொருளுரை
10
2002
ஏ.குத்புத்தீன் அஹ்மத் பாகவி


R.அப்துர் ரவூஃப் பாகவி IFTதிருக்குர்’ஆன்பொருளுரை11 பி.ஜெய்னுல் ஆபிதீன்திருக்குர்’ஆன்பொருளுரை
இதல்லாமல் குர்’ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் தமிழாக்கம் வழங்கும் பல இணைய தளங்கள் உள்ளன. நூல் வடிவிலான நபிமொழிகளின் தொகுப்புக்கும், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றுக்கும் சென்ற நூற்றாண்டுதான் வழிகாட்டுகிறது. சில முக்கியமான மொழிபெயர்ப்புகள்:
வரிசை எண்
ஆண்டு
ஆசிரியர்
தமிழாக்க நூல்
1

பி.எஸ்.கே.முகம்மது இப்ராஹிம்
திர்மிதி
2
1932
பா.தாவுத்ஷா, ஏ.என்.முஹம்மத் யூசுப் பாகவி
நபிகள் நாயக மான்மியம், தாருல் இஸ்லாம் வெளியிடு
3
1954
உத்தம பாளையம் எஸ் எஸ் முஹம்மது அப்துல் காதிர் ஸாஹிபு பாகவி
சஹீஹுல் புகாரி 9 பாகங்கள்
4
1964
உத்தம பாளையம் பி.எஸ்.கே.முஹம்மது இப்ராஹீம்
அன்வாறு மிஷ்காத்தில் மஸாபீஹ்
5

எஸ்.எஸ். அப்துல் காதர் பாக்கவி
சஹீஹுல் புகாரி 3 பாகங்கள்
6
1994
ரஹ்மத் அறக்கட்டளை
புகாரி, 7 பாகங்கள்
7
1997
எம். அப்துல் ரஹ்மான் பாகவி, பஷாரத் வெளியீடு
ரியாளுஸ் ஸாலிஹீன் நபிமொழித்தொகுப்பு, மூன்று பாகங்கள்
8

எம்.ஆர்.எம். அப்துற்றஹீம், ஆர்.பி.எம். கனி, சையிது இப்ராஹீம்
நபிமொழிகள்
9
2010
உமர் ஷரீஃப் இப்னு அப்துல் சலாம்
அர் ரஹீக் அல் மக்தூம், தாருல் ஹுதா வெளியீடு
திருமறை மற்றும் நபிமொழித் தொகுப்புகளைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர் முக்கியமில்லாமல் போகிறார். ஆனால் மற்ற நூல்கள் மொழிபெயர்க்கப்படுகையில் தனி மனிதர்களும் அவர்களது பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றன.
திருச்சி சையித் இப்ராஹீம்
75க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள மகா ஆளுமைகளுள் ஒருவரான திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் சையித் இப்ராஹீம் அவர்கள் அபுல்கலாம் ஆஸாத் எழுதிய ஜுனைத் பக்தாதி என்னும் நூலைத் தியாகம் என மொழிபெயர்த்தளித்தார்.
மணவை முஸ்தபா
பல்துறை அறிஞராகத் திகழும் இன்னொரு பெரிய ஆளுமை அறிவியல் தமிழின் முன்னோடி கலைமாமணி மணவை முஸ்தபா. நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள இவர் மொழி பெயர்ப்புத்துறைக்கு ஆற்றிய தொண்டு சிறப்பானது. யுனெஸ்கோ வெளியீடான கூரியர் இதழ், தமிழாக்கம் பெற்று வெளிவருவது இவரது மொழிபெயர்ப்புப் பணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. ஆங்கிலத்தில் மைக்கேல் ஹெச் ஹார்ட் எழுதிய புகழ்பெற்ற The Hundred எனும் நூலை நூறுபேர் என மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
ம.மு.உவைஸ்
இலங்கைத் தமிழறிஞராகிய இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதும் திறம் பெற்ற இவர். எம்.ஆர்.எம்.மின் நபிகள் நாயகம் நூலைச் சிங்கள மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
எம்.ஆர்.எம். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய Muhammadthe Prophet என்ற நூலை தமிழில் இறைத்தூதர் முஹம்மத் என்ற  பெயரில் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் மொழிபெயர்த்துள்ளார். மேற்குறிப்பிட்ட நூல்களைத் தவிர, மிகச்சிறந்த உரைநடை மற்றும் கவிதை நூல்கள் பலவற்றை பல இஸ்லாமிய அறிஞர்கள் தமிழாக்கம் செய்துள்ளனர்.  
ஆர் பி எம் கனி
கடந்த காலத்தில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் ஆர்பிஎம் கனி. நெல்லை மாவட்டத்திலுள்ள ரவண சமுத்திரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். 1940-ம் ஆண்டு ஜனாப் ஜின்னா என்ற நூலை வெளியிட்டுத் தமிழிலக்கிய உலகில் அறிமுகமா ஆர்பிஎம்-மின்
  1. பேரின்ப ரசவாதம்(2008), கிதாபுல் மஸ்னவீ (2009)
ஆகிய இரண்டும் மிக முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களாகும். முன்னது இமாம் கஸ்ஸாலியின் ”இஹ்யா”வின் சுருக்கமான ”கீமியாயெ ச’ஆதத்” என்ற பாரசீக நூலின் தமிழாக்கமாகும். (கீமியாவை பாரசீக மூலத்திலிருந்து முதன் முதலில் மொழிபெயர்த்தது நெல்லிகுப்பம் அப்துல் ரஹ்மான் ஹஸ்ரத் அவர்கள். அந்த பிரதி கிடைக்கவில்லை. காலம் வெளியீடு முதலிய எந்த விபரமும்  தெரியவில்லை). பின்னது மௌலானா ரூமியின் ”மஸ்னவி” என்ற பாரசீக ஆன்மிகக் காவியத்தின் முதல் பாகத்தின், 2011 பாடல்களின் உரைநடையிலான தமிழாக்கமாகும். யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் வெளியீடு. உமர் கய்யாமின் ”ருபாயியாத்”தையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். அதிலிருந்து சில வரிகள்:
சத்தியத்தைப் போல / மதுவும் வாயில் கசக்கிறது.
எனவே, இத்திராட்சை ரஸத்தை / நாம் சத்தியம் என்றழைப்போம்.
மஸ்னவியை தக்கலை / கோட்டாறு பீர்முஹம்மது அவர்களும் மொழிபெயர்த்துள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. காலத்தால் மிக முந்திய மொழிபெயர்ப்பு இது என்றும், அதன் உள்ளே பல் மொழிகளில் இருந்து மேற்கோள்களும் காட்டப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான முக்கிய தமிழாக்கங்களில் உள்ள பிரச்சனை அதன் பிரதிகள் இப்போது கிடைக்கும் நிலையில் இல்லாததுதான்.
எம் ஆர் எம் முஹம்மது முஸ்தபா
எம் ஆர் எம் என்ற ராட்சச ஆளுமையின் சகோதரரான முஹம்மது முஸ்தபா அவர்கள் அல்லாமா இக்பாலின் முக்கியமான முதல் கவிதைத் தொகுதியான ”அஸ்ரார்-எ-ஹுதி” என்ற பாரசீக நூலை தமிழில் ”இதயத்தின் ரகசியம்” என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.
எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி(1933—2002)
நாகூர் இல்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இல்லை என்கிறார் எழுத்தாளர் ஜெ எம் சாலி. நாகூர் தந்த எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி. இமாம் கஸ்ஸாலியின் அறிவுக் கருவூலகமாகப் போற்றப்படும் ”இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற வாழ்வியல் நூலை, அரபு மொழியிலிருந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கும் முயற்சியை 1957-இல் தொடங்கினார்.
 இஹ்யாவை பகுதி பகுதியாகவும், கஸ்ஸாலியின் மற்ற நூல்களில் பலவற்றையும் எளிமையான தமிழில் ஈர்க்கும் நடையிலும் மொழிபெயர்த்துக் கொடுத்த பெருமை எனது ஞானாசிரியர் ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களையே சேரும். அவர்களது பெரும்பாலான நூல்களை வெளியிட்டது யுனிவர்சல் பப்ளிஷர்ஸ். அவர்களது நூல்களில் சில:
  1. நாயகத்தின் நற்பண்புகள் (மூலம்: இமாம் கஸ்ஸாலியின் ‘அக்லாகுன் நபி, 1959)
  2. நாவின் விபரீதங்கள்,
  3. விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்,
  4. இம்மையும் மறுமையும்(மூலம்: ஸம்முத் துன்யா, 1961)
  5. தனிமையின் நன்மைகள் (மூலம்:கிதாபுல் உஸ்லத்,1987)
  6. தனித்திரு (1988)
  7. இறைச் சிந்தனை,
  8. இறையச்சம்,
  9. இறைதிருப்தி,
  10. இறையாதரவு,
  11. இறை நம்பிக்கை, 1962.
  12. இறைவணக்கம்,
  13. சிந்தனையின் சிறப்பு,
  14. பொறுமையாயிரு,
  15. பாவ மன்னிப்பு (மூலம்: அத்தௌவ்பா, 1957)
  16. பதவி மோகம் (1958)
  17. கோபம் வேண்டாம்,
  18. உளத் தூய்மை(மூலம்: ரியாலத்துன் நஃப்ஸ், 1958)
  19. பொருளீட்டும் முறை,
  20. அறிவு எனும் அருள்,
  21. அறிவோ அருட்பேறோ,
  22. அறிவும் தெளிவும்,
  23. பொறாமை கொள்ளாதே(1958)
  24. புறம் பேசாதே(மூலம்: கிதாபுல் கீபத், 1955)
  25. திருமணம்(மூலம்: கிதாபுன் நிகாஹ், 1958)
  26. திருந்துங்கள் திருத்துங்கள்(மூலம்: அல் அம்ரூ பில் மாரூப் வன்னஹீ அல் முன்கர், 1966)
  27. நல்லெண்ணம்,
  28. உள்ளத்தின் விந்தைகள்(மூலம்: அஜாயிபுல் கல்ப், 1961)
  29. ஏகத்துவம்,
  30. பயணத்தின் பயன்(மூலம்: கிதாபுஸ் ஸஃபர், 1966)
  31. செல்வமும் வாழ்வும்(மூலம்: ஹுப்புல் மால், 1965)
  32. நோன்பின் மாண்பு,
  33. பக்தர்களின் பாதை, (மூலம்: மின்ஹாஜுல் ஆபிதீன், 1970)
  34. ஞானக் கோட்டையின் தலைவாசல் (33ன்2ம் பாகம், 2000)
  35. தர்க்கத்துக்கு அப்பால், (மூலம்: இல்ஜாமுல் அவாம் அன் இல்மில் கலாம்)
  36. சமுதாய வாழ்வு (சுலைமானியா பதிப்பகம், 1992)
  37. இமாம் கஸ்ஸாலியின் கடிதங்கள்
ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கிய அப்துல் வஹ்ஹாப், அறுபதுகளில் ஞான, ஆன்மீகப் பணியில் இறங்கினார்கள். இறைநாட்டப்படி 9.9.2002 அன்று இவ்வுலகைத் துறந்தார்கள்.
நரியம்பட்டு அப்துல் சலாம் (1947)
அதிகமாக அறியப்படாமல் சப்தமில்லாமல் சாதனை செய்துகொண்டிருக்கும் படைப்பாளி இவர். ஆம்பூருக்கு அருகில் உள்ள நரியம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழ், ஆங்கிலம், பாரசீகம், ஹிந்தி, உர்து ஆகிய ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். ஹிந்தியிலிருந்து ஓஷோவின் ஐந்து நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். ஆன்மிக இலக்கியமே இவரது ஈடுபாடு. இவர் எழுதிய 43 தமிழ் நூல்களில் 35-க்கும் மேற்பட்டவை மொழி பெயர்ப்புகளே. மௌலானா ரூமியின் சில பாடல்களை ”மலர்வனம்” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பக வெளியீடு. அவருடைய ஆன்மிக குருநாதரின் நூலையும் ”ஞானச் சிதறல்” என்ற பெயரில் உர்து மூலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவருடைய சிகரச் சாதனை என்று சொன்னால் மௌலானா ரூமியின் மஸ்னவியைத்தான் சொல்ல வேண்டும். மஸ்னவியின் ஆறு பாகங்களையும் உரைநடையில் மூல மொழி மற்றும் உர்து தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் படிக்கக் கிடைக்குமாறு எழுதி முடித்திருக்கிறார். 2008-ல் சென்னை ஃபஹீமியா ட்ரஸ்ட் சார்பாக முதல் பாகமும் அடுத்து இரண்டாம் பாகமும் வெளி வந்துவிட்டன. உலகின் தலைசிறந்த ஆன்மிகக் காவியத்தை தமிழுக்குக் கொண்டு வந்ததற்காக தமிழுலகம் இவருக்குக் கடன் பட்டிருக்கிறது. அவரது மொழிபெயர்ப்பு நூல்கள் சில:
1)    அன்பெனும் ஓடையிலே
2)    உண்மையைத் தேடவேண்டியதில்லை
3)    விளக்கின் கீழ் விதை
4)    நாரதரின் பக்தி சூத்திரம்
5)    புரட்சி விதை
ஆகிய ஐந்து ஓஷோவின் நூல்களை ஹிந்தியில் இருந்து தமிழாக்கம் செய்துள்ளார். கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக இவை வந்தன.
உர்துவில் இருந்த ஒரு சூஃபிக் கவிஞரின் ருபாயியாத்துகளை “ஞானச் சிதறல்” என்ற தலைப்பிலும் தனது ஞானாசிரியரின் ஆன்மிக நூல “ஞான விடியல்” என்ற தலைப்பிலும் தமிழாக்கம் செய்துள்ளார். இவரது தமிழாக்கங்களில் உரைநடையே அதிகம். மற்ற மொழிபெயர்ப்புகள்:
1)    இஸ்மெ ஆஜம்,
2)    முந்தானை மலர்கள் (முஹம்மது யாகூப் எழுதிய சில கதைகளின் தமிழாக்கம்)
3)    சத்திய வேட்கை (தலாஷெ ஹக் என்ற நூலின் தமிழாக்கம்)
நை.மு. இக்பால்
ஓய்வு பெற்ற பேராசிரியர், கவிஞர் நை மு இக்பால் அவர்கள் மலையாளத்திலிருந்து முக்கியமான சில மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். குறிப்பாக சச்சிதானந்தன், வயலார் ஆகியோரின் கவிதைகள் மற்றும் வைக்கம் முஹம்மது பஷீரின் சில சிறுகதைகள். ஆனால் புத்தகமாக எதுவும் வரவில்லை.
ரமீஸ் பிலாலி
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருக்கும் இந்த இளைஞர் இரண்டு முக்கியமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்:
1)      ரகசிய ரோஜா. இது மௌலானா ரூமியின் 76 ருபாயி வகைக் கவிதைகளின் தமிழாக்கம்.
2)      சூஃபி கோட்பாடுகள் – பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அல் குஷைரியின் அர் ரிஷாலத்துல் குஷைரிய்யா என்ற நூலின் தமிழாக்கம். இராஜா வெளியீடு2010.
அழகான தமிழில் நுட்பமான வாதங்களை வைக்கும் கட்டுரைகளை எழுதக்கூடிவர் இவர். தமிழின் சிறந்த உரைநடை ஆசிரியர்களுள் ஒருவராக வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இவரது எழுத்தில் மிளிர்கின்றன. பிரபஞ்சக் குடில் என்ற பெயரில் தனக்கான ஒரு வலைத்தளமும் வைத்திருக்கிறார். 
 எச்.பீர் முஹம்மது
நாகர்கோயிலைச் சேர்ந்த இந்த தகவல் தொழில் நுட்ப இளைஞர் ஓரியண்டலிசம், காலனிய ஆட்சிக்குப் பிறகான ஆசிய வாழ்க்கை பற்றி எழுதிய தாரிக் அலி, எட்வர்ட் சயீத், இக்பால் அஹ்மத், மன்சூர் ஹிக்மத் போன்ற கீழைச்சிந்தனையாளர்களை ஒரு நூலின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். அடையாளம் வெளியீடு. தன் வலைத்தளத்தின் மூலமாகவும் கீழைச் சிந்தனையாளர்கள் பலருருடைய எழுத்துக்களை, கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வருகிறார். மொழிபெயர்ப்பு நூல் என்று முழுமையான நூலாக இதுவரை வரவில்லை.
நாகூர் ரூமி
நான் இதுவரை 35 நூல்களை எழுதியுள்ளேன். அவற்றில் சில மொழிபெயர்ப்பு நூல்களும் உள்ளன. அவை:
  1. ஹோமரின் இலியட். முழு காவியத்தின் தமிழாக்கம். கிழக்கு, சென்னை, ஜனவரி 2007. இந்த நூலுக்காக 2009-ம் ஆண்டில் நல்லி திசையெட்டும் மொழியாக்க விருது கிடைத்தது.
  2. நம்மால் முடியும். அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய The Audacity of Hope என்ற அவரது அரசியல் வாழ்வு நூலின் மொழிபெயர்ப்பு கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃப்ராய்டின் The Interpretation of Dreams என்ற நூலின் சுருக்கமான தமிழாக்கம்.) ஸ்நேகா வெளியீடு, சென்னை முதல் பதிப்பு ஜுலை 2003.
  3. செல்வம் சேர்க்கும் விதிகள். ரிச்சர்ட் டெம்ப்ளர். தமிழாக்கம். (The Rules of Wealth). கிழக்கு. 238 பக்கங்கள். 2009. விலை ரூ. 150/-
  4. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள் (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). சந்தியா பதிப்பகம் வெளியீடு, சென்னை, 2002.
  5. உமர் கய்யாமின் ருபாயியாத். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்). ஆரூத் புக்ஸ் வெளியீடு, சென்னை, 2002.
  6. ஹிதாயதுல் அனாம் (இறைநேசர்களைப் பற்றிய தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.) இர்ஃபான் மஜ்லிஸ் வெளியீடு, கொழும்பு, பிப்ரவரி, 2000.
  7. உடல் மண்ணுக்கு. பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை In the Line of Fire-ன் ஆதாரப்பூர்வமான தமிழாக்கம். 2007.
  8. என் பெயர் மாதாபி. சுசித்ரா பட்டார்ச்சார்யாவின் கதைகள். அம்ருதா வெளியீடாக வர இருக்கிறது.
  9. ஹராம் ஹலால்.  எகிப்திய எழுத்தாளர் யூசுஃப் கர்ளாவி எழுதிய அரபி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம். இது விரைவில் வெளிவரும்.
முடிவுரை
மொழிபெயர்ப்புகளின் காலகட்டத்தையும் தேர்வுகளையும் பார்க்கும்போது ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் ஆன்மிகத்திலும் அதிக நாட்டமிருந்துள்ளது தெரிகிறது. படிப்படியாக அது வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம், பின்காலனியம், இலக்கியம், கவிதை என விரிவடைந்து கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான அடையாளமாகும். எளிமையான தமிழில் எல்லோரையும் சென்றடையும் மொழிபெயர்ப்புகள் நிறைய வருவதற்கு இதுவரை வந்த மொழிபெயர்ப்புகள் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நல்ல மொழிபெயர்ப்பும் ஒரு மறுபடைப்புத்தான்.  
Source : http://nagoorumi.wordpress.com/

No comments: