Sunday, November 13, 2011

இல்லறம் - துறவறம், எது சிறந்தது?இல்லறம் - துறவறம், எது சிறந்தது? - மாரி, செங்கல்பட்டு.
"இல்லறமல்லது நல்லறமில்லை" எனக் கேள்விப்பட்டதில்லையா?

இந்து மதத்தில் தம்பதியராகவே தெய்வங்களைக் கற்பித்துள்ளனர். ரிஷிகளும் முனிவர்களும் அவ்வாறே இருந்துள்ளனர் என நம்பப் படுகிறது.

மற்றுமொரு பெட்ரோல் விலை உயர்வு, இப்படியே போனால் எதில் போய் முடியும்? - மீரான்மைதீன், சென்னை.

"மூக்குள்ளவரை சளி இருக்கும்" அதுபோல பெட்ரோல் இறக்குமதி இருப்பது வரை விலையும் உயர்ந்துகொண்டே இருக்கும். பெட்ரோலுக்கு மட்டுமா விலையேற்றம்? நுகர்பொருள் அனைத்தும்  நாள்தோறும் விலையேறிக் கொண்டே போவதை நீங்கள் அறியவில்லையா?

சங்க காலக் குடும்ப அமைப்பிற்கும், தற்கால குடும்ப அமைப்பிற்கும் வேறுபாடு என்ன? - விமலா, மதுரை.
ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரைக்குரிய தலைப்பை வினாவாக்கியுள்ளீர்கள். விரிவாக எழுத இப்பகுதி இடம் தராது.

சங்ககாலக் குடும்ப அமைப்பில் ஆணைச் சார்ந்தே பெண் இருந்தாள்.... களவு கற்பு எனும் இரு நிலையிலும்!

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்          (குறுந்தொகை. 135)


தற்காலத்தில் பெண்களின் நிலை அப்படி இல்லை. சுயமாக வாழும் அளவு பெண்கள் முன்னேறியுள்ளனர்.

"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடன்" என்றுதான் சங்க கால மகளிர்  வாழ்ந்தனர். இன்று குழந்தை வளர்ப்பிலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிலும் எதிர்கால வடிவமைப்பிலும் தாய்மார்கள் செலுத்தும் அக்கறை அளவிட முடியாதது.

சங்ககால வாழ்வில் சமயம் வாழ்க்கைக்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கவில்லை. இக்காலத்தில் சமயங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளில் குடும்ப அமைப்பு உள்ளது.

அரசியல் அக்கப்போரா? - சுதீர், நாகர்கோவில்.

நாள்தோறும் வரும் அரசியல் செய்திகளைப் படிப்பதில்லையா;  பார்ப்பதில்லையா?

கருணாநிதியின் ஆட்சியில் செய்தவற்றையெல்லாம் மாற்றுவது என்பது ஜெயலலிதாவின் அரசியல். ஜெயலலிதா செய்வதையெல்லாம் குறை கூறுவது எதிர்க்கட்சிகளின் அரசியல்.

இவை அக்கப்போராரா அல்லவா?

தம் சொந்தக் கட்சி முதல்வர் ஊழல் செய்து சிறைபுகுந்தபின்னும் அத்வானி ஊழலுக்கு எதிராக ஊர்கோலம் போவது அக்கப்போரா இல்லையா?

மாயாவதி அடிக்கும் லூட்டிகள் அக்கப்போரா இல்லையா?

ஊழல் குற்றச்சாட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி சிறையில் இருந்த முன்னாள் அமைச்சரை அரசே விடுதலை செய்திருப்பது அரசியல் அக்கப்போரா இல்லையா?

எஸ் எஸ் எல் சி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தலைமறைவாக ஒளிந்து திரியும் அமைச்சர் பற்றிய செய்தி அக்கப்போரா இல்லையா?

பெட்ரோல் விலை உயர்வுக்காகப் போர்க்கோலம் பூண்ட மமதா பானர்ஜி புஸ்வாணமாகிப் போனது அரசியல் அக்கப்போரா இல்லையா?

மன்மோகன், சோனியா, ராகுல், ப்ரணாப் முகர்ஜி, ப சிதம்பரம் போன்றோர் பற்றிய செய்திகள் அக்கப்போரா இல்லையா?

கனிமொழி பாவம்.. இல்லே? - இளமாறன், நாகை.

சரிதான்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி இருந்த தெம்பில் அரசியல் அறியாமல் சிக்கிக் கொண்ட கனிமொழி பாவம்தான்.

கலைஞர் டி விக்காகப் பண விவகாரத்தில் ஈடுபடும்போது இத்தனை பெரிய ஆபத்துக் காத்திருக்கும் எனக்  கனிமொழி அறியாமல் போனது பரிதாபம்தான்.


தமிழ் இலக்கணத்தில் "புணர்ச்சி விதி" என்று உள்ளது கொஞ்சம் மட்டகரமாக தெரிகிறதே! மற்றமொழி இலக்கணங்களில் இத்தகைய சொல்லாடல் உண்டா? - நந்தன் - குறிஞ்சிப்பாடி.

"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு..."
என ஒளவையார் பாடல் கூறுவது உங்களுக்குப் பொருந்துகிறது.

நீங்கள் தமிழ் மொழியைக் கற்கவில்லை எனத்தெரிகிறது.

புணர்ச்சி விதி என்று உள்ளது கொஞ்சம் மட்டகரமாக தெரிகிறதே என வினவியுள்ளீர்கள். ஓர் இலக்கண விதியில் என்ன மட்டரகம்?

"புணர்ச்சி" என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொண்டுள்ளீர்கள்?

நீங்கள் "கண்ணீர்" எனச் சொல்வதும் எழுதுவதும் கண்+நீர் என்பதன் புணர்ச்சி தான் ஐயா!

"நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என
ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே"


என்பது தொல்காப்பிய இலக்கண விதி!

நிலைமொழி ஈறும் வரும்மொழி முதலும் புணர்தலைப் புணர்ச்சி என்கிறோம்.

ஒரு சொல்லின் கடைசி எழுத்தும் அதனை அடுத்து வரும் சொல்லின் முதல் எழுத்தும் ஒன்றாகச் சேருவதற்கான இலக்கண விதியே "புணர்ச்சி விதி".

சான்று:

அங்கு+இங்கு+எனாதபடிச்  சென்று+எங்கும்  சுற்றி+அலைந்து என்பதை அங்கிங்கெனாதபடிச் சென்றெங்கும் சுற்றியலைந்து என எழுதுகிறோமே; அதற்கான விதியே புணர்ச்சி விதி.

நாடு ஆகு ஒன்றோ என்பதை "நாடாகொன்றோ" என எழுதுவது குற்றியலுகரப் புணர்ச்சி.

யான் + கண்ட நாடுகள் என்பதை யாங்கண்ட நாடுகள் என எழுதுவதும் மரம் + கள் என்பதை மரங்கள்  என எழுதுவதும் மகரப்புணர்ச்சி

பல் +கள் =பற்கள்; கல்+ கோயில் = கற்கோயில் என எழுதுவது வல்லினப் புணர்ச்சி

கல்+ மலை = கன்மலை என எழுதுவது மெல்லினப் புணர்ச்சி.

விரிவாக எழுத இச்சிறு பகுதி இடம்தராது.

பிற மொழி இலக்கணங்களில் தமிழ்மொழி இலக்கணத்தைப் போலப் புணரியல் உண்டா இல்லையா எனத் தெரியாது.


ஏழாம் அறிவு படத்தில் சொல்கின்ற படி பயோ வார் சாத்தியமா இன்றைய சூழலில்? - அனு, நெய்வேலி.

நான் அப்படம் பார்க்கவில்லை; பார்க்கும் அளவு பொறுமையுமில்லை. அப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் தெரியாது.

ஆனால் பாக்டீரியாக்களாலும் வைரஸ் கிருமிகளாலும் உருவாக்கப் பட்ட "பயோ வெபன்ஸ் - உயிரியல் ஆயுதங்கள்" மூலம்  பயோ வார் சாத்தியம்தான் எனச் சொல்கிறார்கள் .

உணவுப்பொருட்களிலும் குடிநீர் ஆதாரங்களிலும் நஞ்சு கலப்பதும் கூட பயோவாரில் ஒரு வகைதான்.


சிபிஐ ரெய்டில் அடிக்கடி கூறப்படும் முக்கிய தடயங்கள் என்றால் என்ன? - மகேஷ், துபாய்.

சொத்துப் பத்திரங்கள், கடிதங்கள், ஆவணங்கள், கோப்புகள், வங்கிக் கணக்கு விபரங்கள், லாக்கர் விபரங்கள், பாஸ்போர்ட், ஆடியோ - வீடியோ பதிவுகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் போன்றவை.


ஓர் ஆக்கம் வெறும் எழுத்து என்பதைக் கடந்து இலக்கியம் ஆவது எப்போது? அதன் அளவுகோல் என்ன? - நஸீர், தஞ்சை.

கவிதையோ, கதையோ, கட்டுரையோ ... எந்த ஓர் ஆக்கமாயினும் அதை வாசிக்கும்போது நீங்கள் சுற்றுப்புறத்தை மறந்து அதனுடன் ஒன்றிவிடுகிறீர்களோ அப்போது அது இலக்கியமாகி விடுகிறது.

தொலைபேசிகள் எட்டாக்கனியாக இருந்த காலத்தில் கணவனும் மனைவியும் காதலர்களும் எழுதும் கடிதங்கள் எதிர்பாலருக்குத் தம்மை மறக்கச் செய்யும் பேரிலக்கியமாக இருந்திருக்கவில்லையா?

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails