Wednesday, August 8, 2012

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை மதிக்காது உயர் வில்லையே
நெஞ்சில்  நின்று வாழும் ரூபம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது ? 
                                            - அம்மா

அகமதர்  நபிதொட்டு அனைத்துயர் மேதைகளை
அகிலத்திற் களித்தது  தாய் தானம்மா
மகன் பெற்ற புகழ் கண்டு போறாமை உலகத்தில்
மனம் பொங்கி மகிழ்வதும் தாய் தானம்மா
பேருச்சி மலை மீது புகழ் ஓங்கி நின்றாலும்
நான் எந்தன்  தாய் பாதம் கீழ் தானம்மா
தாயை நான் மறந்தாலும் தாய் என்னை மறக்காத 
தருமத்தை  யான்  மறவா   நிலை வேண்டுமே !
என் தாயே பொறுப்பாயே
                                               - அம்மா

உன் தாயின் பாதத்தில் உன் சொர்க்கம் நபிசொன்ன
பொன் வாக்கு என் நெஞ்சின் அலை யானதே
பொற் தாயின் பணிவிடையால் பேருவை   சுல் கர்ணிக்கு
பெருமானை தரிசிக்கும் நிலை போனதே
வயதான தாய் வீட்டில் பணிவிடை என் பொருப்பில்
உயர்வான கடன் ஹஜ்ஜும் கடனில்லையே
இறைபொருத்தம் யான் வேண்டின் எனை ஈன்ற தாய் பொருத்தம்
கிடைத்தாலே புவிவாழ்வில் அது போதுமே !
                                  
  என் தாயே பொருந்துவாயே !
                                                                                  - அம்மா 

பொன் முத்து மணி என்ன  பூலோக செல்வங்கள்
பூராவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா!
மலை போன்று விலை வைத்து புவி சந்தை எங்கிலும்
கேட்டாலும் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் உன் வயிற்றில் எனை சுமந்து
நீ பட்ட பெரும் பாட்டை மறை கூறுதே !
காலங்கள் எல்லாமும் நொடி நொடியாய் நன்றி கடன்
செய்தாலும் பெற்றெடுத்த கடன் தீருமா ?
                                  என் தாயே என்னுயிரே  !
                                                                                  - அம்மா 

தாயில்லா பிள்ளைகள் தவிக்கின்ற நிலை கண்டு
கரையாத கல் நெஞ்சும் கரையுதம்மா.
நோய் பட்டு தன் பிள்ளை பாய் தன்னில்  கிடக்கையில்
வாய் விட்டு அழுவதும் தாய் தானம்மா
பாலூட்டி  சோறு(ruu)ட்டி  ஈ எறும்பு கடிக்காமல்
இரவெல்லாம் விழித்ததும் தாய் தானம்மா
தாயே உன் பொன் மனம் கலங்காமல் பார்த்துன்னை
தலை மீது வைத்தல் என் கடமை அம்மா
                                                  என் தாயே இதயமே
                                                                     -அம்மா.

முதற்கடமை யார் மீது என கேட்க மும்முறை
அருந்தாயைச் சொன்னார்கள்  நபி நாதரே
நபி  மூஸா  சுவனத்து தோழராய் ஆனவர்
முதிர் தாய்க்கு பணி செய்த அரும் தோழரே 
மறை வேதம் கிரந்தங்கள் இறைத்தூதர்  உயர்வாக
உரைக்கின்ற தாய்மைதான் லேசானதா?
என்ன ஈன்ற தாயே  உன் ஆசியே என் வாழ்வு
தாயே உன் நல்லாசி தா என் தாயே !
                                             என் தாயே என் மூச்சு!
                                                       அம்மா ....


 பாடல் - கொள்ளுமேடு, ஹாபீஸ் பாருக் ஹஜ்ரத் அவர்கள்.
பாடல் பாடியவர் -தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
வீடியோ - S.E.A. முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.



தீனிசைத் தென்றல், தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."
நன்றி







No comments: