Tuesday, June 2, 2020

டார்நெல்லா ஃப்ரேஸியர் மட்டும் தனது ஸ்மார்ட்ஃபோனில் அந்தக் கொடுமையான காட்சியை வீடியோ எடுக்காமலிருந்திருந்தால்

Rafeeq Sulaiman

இந்தப் பெண்(குழந்தை) ஆம்....... 17 வயது பெண் குழந்தை டார்நெல்லா ஃப்ரேஸியர் மட்டும் தனது ஸ்மார்ட்ஃபோனில் அந்தக் கொடுமையான காட்சியை வீடியோ எடுக்காமலிருந்திருந்தால், ஒருவேளை அந்தக் கொலைகார போலீஸ்காரர் தப்பித்துப் போயிருக்கலாம்.

தனது ஒன்றுவிட்ட சகோதரனோடு ஹோட்டலுக்குப் போகும்போது அந்தக் கொடுமையைக் கண்டிருக்கிறாள் அந்தச் சிறுமி, உடனே தனது கைபேசியை எடுத்துப் படமெடுக்கத் துவங்கிவிட்டாள். , கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில்தான், வன்மம் பிடித்த வெள்ளை போலீஸ் Derek Chauvin முழங்காலில் குரல்வளையை நெறித்துக்கொண்டிருக்கும்போது, “ப்ளீஸ், என்னால் சுவாசிக்க முடியவில்லை....” என்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் கெஞ்சும் குரல் கேட்கிறது.

“எந்த அசைவுமற்றுக் கிடக்கிறான்...” என்று பொதுமக்கள் போலீஸை சாடும் குரல்களும் கேட்கின்றன.
கொலை நிகழ்ந்து முடியும் வரையிலும் எதுவுமே தெரியாதவன் போல நின்ற இன்னுமொரு போலீஸ் Tou Thao என எல்லாவற்றையும் தோலுரித்துக்காட்டி, சம்பந்தப்பட்ட நான்கு போலீஸ்காரர்களையும் பதவி நீக்கவும், ஒருவர் மீது கொடுங்கொலைக் குற்றம் சுமத்துவதற்கும் இந்த வீடியோவே நேரடி ஆதார சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனால், டார்நெல்லா ஃப்ரேஸியர்க்கு இதுவெல்லாம் நடக்கும் அமெரிக்காவே பற்றியெரியும் என்றெல்லாம் தெரியாது. ஹோட்டலிலிருந்து வீட்டுக்குத் திரும்பியவுடன், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துவிட்டுத் தூங்கிப் போனார்.

அடுத்த நாள் அந்தப் பதிவைத் திரும்பப் பார்க்கும்போதுதான், இவர் மனம் நோகும்படியான கமெண்டுகளும், கிண்டல்களும், சீண்டல்களும் இருப்பதைக் கண்டு அதிர்ந்து.... “ நானென்ன பாவம் செய்தேன்?” என்று அடுத்த பதிவில் புலம்ப, ஆதரவளித்து ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள், பகிர்வுகள் என்று நகரத் துவங்கியவுடன்தான் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது...... புரட்சி வெடித்தது!

- Rafeeq Sulaiman

No comments: