Monday, June 15, 2020

பொதுவாக ஒரு கருத்து இருக்குமானால்

Saif Saif
பொதுவாக ஒரு கருத்து இருக்குமானால் அதை சார்ந்த பல கருத்துக்கள் அதனூடே காணப்படும்..

அருள்மறை குர்ஆனிலும் கூட இப்படி தான்.. இறைவன் ஒரு தீர்வை சொல்லி விடுவான்.. ஆனால் அதை அடையும் வழிமுறையை அதன் ஊடாக தான் சொல்லி வைப்பான்..

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்”(9:51)

"அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது. அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால்
அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை."
(10:107)


இவ்வசனங்களை வெளிப்படையாக
பார்க்கும் போது
எது நடந்தாலும்
(கஷ்டம் நஷ்டம்)
அது அல்லாஹ்வின்
நாட்டபடி தான்..
இறைவன் சொல்வது
சரி தான்..

இருப்பினும் இறைவன் தரும் நல்லவை கெட்டவைகள் அவனிடம் நாம் காட்டுகின்ற நன்றி பிரார்த்தனை வழிதான் பெற்றுக் கொள்ள முடியும் என்பது சூட்சுமமாக பல வசனங்களில் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது..

இறைவனின் இந்த சூட்சுமத்தை உணர்ந்து கொண்டோமானால் அவன் கிருபையை ரஹ்மத்தை முழுமையாக நாம் பெற்றுக்கொள்ள
ஏதுவாகும்..

அது எப்படி..!? கொஞ்சம் பொறுமையாக உள்வாங்கி படித்துப் பாருங்கள்... புரிந்து கொள்ளலாம்..

"உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக."
(1:4,5)

"எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக!"(18:10)

"என் இறைவா! எனக்கு
நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்.."(28:24)

"எங்கள் இறைவா! இவ்வுலகிலும்
எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!"(2:201)

இதுபோன்ற பல பிரார்த்தனைகள் திருமறையில் ஆங்காங்கே காணப்படுகிறது..

இறைவன் தானே நம்மை படைத்தான் அவனுக்கு தெரியாதா நம்மை பாதுகாக்க..!?

எதற்காக இத்தனை பிரார்த்தனைகளை சொல்லி தந்திருக்கின்றான்..!?

அவன் விதித்ததை
தவிர எது நடந்து விடப்போகிறது..!?

இப்படி எல்லாம் கேள்விகள் நம் மனதில் எழுவது சகஜமானது தான்..

இதில் கவனிக்க
வேண்டிய ஒரு விஷயம்

"அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக
(பொறுப்புகளைச்
சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை."
(2:286)

இறைவனே சொல்லி இருக்கிறானே நம் சக்திக்கு அதிகமாக நம்மை சிரமப்படுத்த மாட்டான்.. என்று நினைக்கின்ற
மானிடன் அசால்டாக
இருந்து விடக்கூடாது என்பது தான்..

கூடவே பிரார்த்தனை
பின் தொடர்வதை கவனிப்பதில்லை..

(நம்பிக்கை கொண்டவர்களே!
நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:)
“எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக!
எங்கள் மீது கருணை பொழிவாயாக!
நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!”(2:286)

பிறிதொரு வசனம் ஒளு செய்ய தண்ணீர் கிடைக்காத போது மண்ணை பயன் படுத்துவது குறித்து கூறுகிறது..

"உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை."(5:6)

தண்ணீர் கிடைக்காவிட்டால் மண்ணை வைத்தாவது சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.. இங்கு சுத்தத்தை விட இறைவனுக்கு செலுத்தும் நன்றி முக்கியமாகிறது..
அந்த நன்றி நம்மை தூய்மைப்படுத்துகிறது..

"ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை
நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்."(5:6)

ஆக படைத்தவனின்
சூட்சுமங்கள் நடப்பது நடக்கட்டும் என்று நாம் வீணே இருந்து விடுவதல்ல..

அவனை நன்றியுடன் நினைவு கூர்ந்து அவனிடம் பிரார்த்தனைகளை அதிகமதிகம் கேட்க வேண்டும் என்பது தான்..

அதுவே இறைவன் சொல்லி தருகின்ற அழகான நற்சிந்தனைகள்..

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுள்ளவர்களுடன் இருக்கின்றான்."(2:153)

Saif Saif

No comments: