Friday, June 5, 2020

வெட்டுக்கிளிகள்

வெட்டுக்கிளிகள்
எங்கள் வயல்களில் இறங்கி
ஆறாண்டுகள் நிறைவடைந்துவிட்டன

அவை கூட்டம் கூட்டமாய் வந்து இறங்கின
பெரும்பான்மை பலத்துடன் வந்து இறங்கின
செங்காவி நிறத்தில்
சூலாயுத ரெக்கைகளுடன் வந்திறங்கின
அவை ஒவ்வொரு குருத்தையும் தின்னும் ஓசை
மந்திரம்போல ஒலித்தன
தேசிய கீதம்போலவும் ஒலித்தன
அறுபதாண்டுகால பயிர்களை
அவை ஆறாண்டுகளில் தின்று முடித்தன



அவை எதைத்தான் தின்னவில்லை?
கண்ணீரால் வளர்த்த சுதந்திரத்தின் பயிர்களை
நீதியின் கதிர்களை
சகோதரத்துவத்தின் குருத்துக்களை
எளிய மனிதர்களின் தானியங்களை

நாங்கள் வெட்டுக்கிளியை கொல்ல முயன்றோம்
அவை எங்கெங்கும் பெருகி
எங்கள் குருதியைப் பருகின
மனிதரின் தலைக்குள் புகுந்து
அவர்கள் சிந்தனாமுறையை மாற்றின

பிறகு எங்களில் சிலர்
வெட்டுக்கிளிகளாக மாறுவதைக் கண்டோம்
சில எழுத்தாளர்கள்
சில பத்திரிகையாளர்கள்
சில ராணுவ தளபதிகள்
சில நீதியரசர்கள்
சில தலைவர்கள்
சில இளைஞர்கள்
அவர்கள் வெட்டுக்கிளிகளாக மாறியதும்
பழைய வெட்டுக்கிளிகளைவிட மூர்க்கமாக
பயிர்களை துண்டிக்கத் தொடங்கின

வெட்டுக்கிளிகள் நிலங்களை துண்டாடின
பிறகு மக்களின் மனங்களை
பிறகு வரலாற்றின் வழித்தடங்களை
பிறகு பிறரது நம்பிக்கைகளை

வெட்டுக்கிளிகள்
எங்கள் வயல்களுக்குள் இறங்கி
ஆறாண்டுகளாகிவிட்டன
வயல் இருந்த இடத்தில்
இப்போது ஒரு பொட்டல் இருக்கிறது

அவை இப்போதைக்கு
இங்கிருந்து வெளியேறுவதாகத் தெரியவில்லை

30.5.2020
இரவு 11.50

மனுஷ்ய புத்திரன்

No comments: