Sunday, June 7, 2020

#ஆப்பிரிக்க_மக்கள்_அமெரிக்காவின் #அடிமைகளாக_மாற்றப்பட்ட_வரலாறு #அத்தியாயம்_மூன்று

Abu Haashima





#குன்டா_கின்டேயும்_காதலில்_விழுந்தான் ...!

மரத்தோடு சேர்த்து கட்டப்பட்ட கின்டாவின் வலதுகால் பாதத்தின் பாதியை அந்த வெள்ளையன் சிரித்துக் கொண்டே கோடாரியால் வெட்டினான்.
வால் அறுபட்ட பல்லியைப்போல் கின்டா துடித்தான். கதறினான்.
அவன் அழுகையும் கதறலும் ஆங்கிலேயர்களுக்கு மெத்த மகிழ்ச்சியைத் தர
அவர்கள் வாய் விட்டு சிரித்தார்கள்.

வலியின் உக்கிரம் தலைக்கு ஏற குன்டா அப்படியே மயக்கமானான்.
குன்டா கண்விழித்தபோது ஒரு குடிசையில் கிடத்தப்பட்டிருந்தான்.
உடம்பை அசைக்க முடியவில்லை.
கை கால்கள் கட்டப்பட்டிருந்தன.
வலி உயிரை வருத்திக் கொண்டிருக்க தனக்கு என்ன நேர்ந்தது என்பதை சிந்தித்துப் பார்த்தான்.

தான் பண்ணையிலிருந்து தப்பியோடியதையும் ஆங்கிலேயர்கள் வேட்டை நாய்களோடு தன்னை துரத்திப் பிடித்து மரத்தோடு கட்டி வைத்து காலை வெட்டியதையும் நினைத்து கண்ணீர் வடித்தான். தான் இந்த குடிசைக்கு வந்து இரண்டு நாட்களாவது இருக்கும் என்று எண்ணிக் கொண்டான்.


சிறிது நேரத்தில் உயரமான ஒரு வெள்ளையன் குடிசையின் கதவைத் திறந்து உள்ளே வந்தான்.
அவனோடு ஒரு நீக்ரோ பெண்ணும் வந்தாள். குன்டாவின் காலை பரிசோதித்த வெள்ளையன்
அதை சுத்தம் செய்யும்படி நீக்ரோ பெண்ணிடம் சொன்னான். அவளும் அதன்படியே செய்தாள்.
காலின் மீது போடப்பட்டிருந்த கட்டின்மீது மருந்தை வைத்து கட்டிவிட்டு வெள்ளையன் சென்று விட்டான்.

கூடவே வந்த நீக்ரோ பெண்
#பெல் குன்டாவைப் பார்த்து லேசாக புன்னகைத்தாள். குன்டா முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த பெல்
உணவு கொண்டு வந்து குன்டாவுக்கு கொடுத்தாள். அவன் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் உணவை வைத்துவிட்டு போய் விட்டாள்.
பசியின் கொடுமையும் வெட்டுப்பட்ட காலின் வலியும் குன்டாவை இம்சிக்க அவள் வைத்து விட்டுப்போன உணவை எடுத்து உண்டான்.

இப்படியே மூன்று வாரங்கள் கடந்து விட்டன. அன்று குன்டாவின் காலில் போடப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்க்கும் நாள். வெள்ளையன் தன்னோடு நீக்ரோ பெண் பெல்லையும் அழைத்துக் கொண்டு குன்டாவின் குடிசைக்குள் வந்தான். குன்டாவின் கால் கட்டுகளை அவிழ்த்தான். அது பாதி வெட்டுப்பட்டு மொக்கையாக இருந்தது.
அதில் மருந்தை வைத்து கட்டிவிட்டு வெள்ளையன் சென்று விட்டான்.
குண்டாவைப் பார்த்து ஆறுதலாகச் சிரித்தாள் பெல். ஆனால் குன்டா அவளைப் பார்க்கவே பிடிக்காததுபோல் நடந்து கொண்டான்.

ஆனாலும் தினமும் மூன்று நேரம் அவனுக்கு உணவு கொண்டு வந்து தர அவள் மறக்கவில்லை.
தான் கால் வெட்டப்பட்ட இத்தனை நாளும் பெல்தான் தன்னை கவனித்து உணவும் தருகிறாள் என்பதை குன்டா ஒருநாள் உணர்ந்து கொண்டான். தன்னைப்போல் அவளையும் யாரோ பிடித்து வந்து இந்த ஆங்கிலேயனிடம் விற்றிருக்க வேண்டும் என்று நினைத்து முதன் முதலாக அவள்மீது இரக்கப்பட்டான்.

மேலும் ஓரிரு நாட்கள் கடந்தவுடன் குன்டா மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
குடிசையின் கதவைத் திறந்து வெளியே வந்தான். இது தன்னை விலை கொடுத்து வாங்கிய ஆங்கிலேயனின் பண்ணை இல்லை என்பதை தெரிந்து கொண்டான்.
அவன் முன்னர் வேலை பார்த்த பண்ணையை விட இது அழகாக இருந்தது.
ஆங்காங்கே மலர்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன.

காலையில் வேலைக்குச் செல்லும் கருப்பர்கள் மாலை கருக்கலில் தளர்ந்துபோய் திரும்பி வருவதை குன்டா பார்த்தான்.
ஆனால் ....
பழைய பண்ணையில் அடிமைகளை சுற்றி ஆங்கிலேய கங்காணிகள்
கையில் சாட்டையோடு குதிரையில் உட்கார்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.
தேவையே இல்லாமல் அவர்கள் அடிமைகளை சாட்டையால் அடித்து அதிகமாக வேலை செய்யச் சொல்வார்கள்.
ஒவ்வொரு அடிமையும் தினம் தினம் அடிவாங்காமல் தப்பியதில்லை.
இந்த பண்ணையில் அப்படி எந்த கண்கானியும் இல்லை. அடிமைகளை யாரும் அடித்து துன்புறுத்தவில்லை.
அடிமைகளுக்கென்று பண்ணையையொட்டி
அடிமைச்சேரி அமைக்கப்பட்டிருந்தது.
அதில் அவர்கள் தங்கி இருந்தார்கள்.
அவர்களில் சிலருக்கு கல்யாணமும் ஆகி இருந்தது.
கருப்பர்கள் சுதந்திரமாக இருந்தாலும் அவர்கள் அடிமைகளே.
வேலைக்கு ஊதியம் கிடையாது.
ஆயுள் உள்ளவரை ஆங்கில எஜமானனுக்கு வேலை செய்து கொடுத்தே சாக வேண்டும்.
அங்கிருந்து தப்ப முயன்றால் கணக்கின்றி சவுக்கடி தரப்படும்.
சுட்டுக் கொல்லவும் ஆங்கிலேயருக்கு அதிகாரம் உண்டு
என்பதை குன்டா புரிந்து கொண்டான்.
இனிமேலும் தன்னால் தப்பிச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை அவனிடமிருந்து மெல்ல மெல்ல விலகிச் சென்றது.
மற்ற கருப்பர்களைப்போல தானும் கிடைப்பதை உண்டு அடிமையாகத்தான்
வாழ வேண்டும் என்ற உண்மை அவனை தீயாகச் சுட்டது.
ஓட முடியாத தன் கால்களைப் பார்த்து கண்ணீர் வடித்தான்.

" அல்லாஹ் ... அல்லாஹ் ... " என்று அழுதான்.
சமயங்களில் அல்லாஹ்வைத் தொழுதான்.
தன் தந்தை உமரோவும் தாய் பிண்டோவும்
தம்பிகள் லாமின் , சுவாது , மாடி ஆகியோர் இப்போது எப்படி இருப்பார்கள்
என்பதை எண்ணிப் பார்த்து தாங்க முடியாத சோகத்தில் அழுதான்.
தான் கடத்தப்பட்டு ஒரு வருடம் ஆகி விட்டதை எண்ணி மனம் கலங்கி தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது என்பது புரியாமல் தவித்தான்.

அன்று ..
இரு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியை ஒரு கருப்பு அடிமை ஓட்ட வெள்ளையன் அதில் ஏறி வெளியே புறப்பட்டுச் சென்றான். அந்த வெள்ளையன்
#டாக்டர்_வில்லியம்_வாலர்.
கின்டாவை விலைக்கு வாங்கிய
ஜான் வாலரின் சகோதரன்.
ஆனால் வில்லியம் வாலர் ஜானைப்போல் கொடூரமானவன் இல்லை.
வில்லியம் இரக்கமுள்ளவன்.
நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்வான்.
அடிமைகளை துன்புறுத்தமாட்டான்.
அவன்தான் கால் வெட்டப்பட்ட குன்டாவை தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றினான்.
ஜான் வாலருக்கு குன்டாவின் விலையையும் கொடுத்து விட்டான்.

ஆனால் ....
அடிமைகள் மீது அமெரிக்கர்கள் வைத்திருந்த கொள்கைக்கு அவன் தீவிர ஆதரவாளனாகவும் இருந்தான்.
வில்லியத்தின் மனைவி எலிசபெத்.
அவளும் கொஞ்சம் இரக்கமுள்ளவளாக இருந்தாள்.

வில்லியம் வாலர் வெளியே சென்ற பிறகு நீக்ரோ பெண் பெல் வெள்ளையனின் பங்களாவில் இருந்து வெளியே வருவதைப் பார்த்தான் குன்டா. குன்டா வெளியே நிற்பதை கண்டுகொள்ளாமல் அவள் தான் தங்கி இருக்கும் அவுட் ஹவுசை
நோக்கிச் சென்றாள். இத்தனை நாள் தான் குன்டாவுக்கு பணிவிடை செய்தும் தன்னை அலட்சியம் செய்த குன்டாவின் மீது அவளுக்கு சற்று கோபம் இருந்தது. அதனால் அவனை பார்க்க விரும்பாமல் சென்றாள்.

பெல்தான் அந்த ஆங்கிலேயனின் வீட்டு சமையல்காரி என்பதை
குன்டா புரிந்து கொண்டான்.
அவன் நடமாட முடியாமல் இருந்த நாட்களில் தன் எஜமானன் வீட்டில் சமைக்கும் நல்ல உணவுகளை குன்டாவுக்கு அவள் கொடுத்து வந்தாள். அதில் பன்றிக்கறியை மட்டும் அவன் சாப்பிடாமல் தவிர்த்து வந்தான்.
இன்று அவனைப் பார்த்தும் பார்க்காமல் அவள் சென்றது குன்டாவின் மனதை உறுத்தியது.
பெல்லும் தன்னைப்போல் சுத்தமான கறுப்பின பெண் என்பதில் குன்டாவுக்கு சந்தோசம் .
அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவன் மனதுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.

சாட்டையடி விழுந்த முதுகில்
பெல் எனும் மயில் தோகை
வருடி விடுவதுபோல் சிலிர்த்தான்.
அவள் பேசினால்
இசையை ரசிப்பதுபோல்
மகிழ்ந்தான்.
அவனைத் தாண்டி
அவள் செல்லும் போதெல்லாம்
தென்றலாய் அவள் தன்னை
தீண்டுவதுபோல் குளிர்ந்தான்.!
அந்த கறுப்பழகியின் கண்பார்வைக்கு
காத்திருப்பதில்
கால் வலியை மறந்தான்.. !

குன்டா ...
கொஞ்சம் கொஞ்சமாக
தன் மனதை
பெல்லிடம் பறி கொடுக்க
ஆரம்பித்தான்.!

ஜுஃப்பூர் கிராமத்தின் குன்டா
என்ற கறுப்பு இளைஞன்
ஆங்கிலேயருக்கு அடிமையானான்.
மீண்டும் கறுப்பு அடிமைப்பெண் பெல்லின்
காதலுக்கும் அடிமையானான் !

#இன்ஷா_அல்லாஹ் ...
#நாளை

* இந்த வேர்கள் நூலைப்பற்றி ஒரு விமர்சனம் மட்டுமே எழுத எண்ணி இருந்தேன். ஆனால் நண்பர்கள் பலரும் அந்த வரலாறை விரும்பிப் படிக்க ஆசைப்பட்டதால் கொஞ்சம் விரிவாகவே எழுத வேண்டியதாகி விட்டது.
நாவலை அப்படியே எழுத முடியாது.
நான் படித்ததை உள் வாங்கி என்னுடைய ஸ்டைலில் சுருக்கமாகத்தான் இதை சொல்கிறேன்.
300 க்கு அதிகமான பக்கங்களுள்ள நூலை அப்படியே காப்பி பண்ண முடியுமா என்ன ?
இது அலக்ஸ் ஹேலி எழுதியதின் சாறு.
பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் இதை எழுதுவதற்கும் நேரம் கிடைப்பது அரிது. வரலாறை கொஞ்சம் விரிவாகச் சொல்வதால் என்னுடைய விமர்சனத்தை கடைசியில் சொல்லலாம் என்று தீர்மானித்து விட்டேன்.
இந்த தொடரை படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொன்னால் அதுவே எனக்கும்
வேர்கள் நூலை எழுதிய
M S Abdul Hameed அவர்களுக்கும் சந்தோஷம்.

Abu Haashima

No comments: