Friday, June 5, 2020

தூண்டில் கனா!

Sabeer Ahmed

தூண்டில் கனா!
பினாங் சபுராளிக்கு
பிள்ளையாய்ப் பிறந்தால்
உம்மா மட்டுமே
உலகம் !
அதிரையில் திருமணம் - ஆவணத்துக்
குதிரையில் ஊர்வலம்
ஹாஜா ஒலியுல்லாவுக்கு
கவனமாய் ஒரு ஃபாத்திஹா
வெந்நீர் குளியலோடு
பச்சை முட்டைக் கொத்தி
பளிங்கு வளை குலுங்க
மாமியாவீட்டுத் தேத்தண்ணி
காது மடல்களில்
பாம்புச்சாப் அத்தர் பஞ்சு
அக்குளில் பாண்ட்ஸ் பவுடர்
கழுத்தில் க்ரொகடைல் கர்ச்சீஃப்

கணேஷ் பீடிக் கட்டு
கடுநாற்றச் சுருட்டு
பணப் பர்ஸ் பிதுங்கும்
பச்சை வார் இடுப்பில்
மேனி கருக்காமல்
ராணி ச்சாப் கொழும்புக் குடை
ஜரிகை பார்டர் வேட்டி
சட்சடக்கும் கித்தாச் செருப்பு
கொசுறு கறிவேப்பிலையோடு
கொடுவாமீன் வால் முளைத்த உமல்
பாங்கு சப்தம் கேட்கும்வரை
புளியமேட்டில் கூட்டாளி அரட்டை
செட்டியிடம் கிஸ்திக்கு வாங்கிய
காசெல்லாம் கரைந்து
கூனிராலிலும் பொடிமீனிலும்
மடிந்து போகும் உமல்
கப்பக்கல்லுக்கு கடன் வாங்கி
எட்டுமணி ரயிலில்
இடம்பெயரும் சபுராளி
ரஜூலா கப்பல் ஏறி
கடல் கடந்து சென்றபின்
கடுதாசி காணாமலும்
கைச்செலவு கஷ்டத்திலும்
காலம் கடத்திடுவர்
கர்ப்பமுற்ற மனைவியரும்
பயணப்பட்ட மாப்பிள்ளையோ
பாடாவதியாய்க் கிடக்க
பினாங்க் தைலமோ
பிஸ்கோத்து டின்னோ
பிள்ளைக்காக வந்து சேரும்
இவ்வாறான
நெய்தல் நாகரிக
சபுராளி வாழ்க்கையின்
லட்சணம் ஏதுமின்றி
நாகரீக நன்மகனாய்
நான் பெற்ற வாப்பாவோ
பினாங் காரியின்
பிடியில் சிக்கிவிட
முக மாத்துக்காரியிடம்
மாட்டிகொண்ட வாப்பாவுக்கு
எங்கள் நினைவும்
வந்துவிடாதா என்றெண்ணி
உம்மா எழுதிடும்
கடுதாசிகளிலெல்லாம்
கண்ணீர் மட்டுமே பேனாமை ஆகும்
பிள்ளை வளர்ந்ததைப்
பார்த்தாலாவது
மூடுமந்திரக்காரியின்
மயக்கம் தீருமென
மணிக்கூண்டு அருகில்
அசோகன் ஸ்டூடியோவில் - பிள்ளையை
ஃபோட்டோ பிடித்த
உம்மா...
அருகிலேயே அமர்ந்துகொண்டது
பிசுபிசுக்கும் விழிகளில்
வாழ்க்கையின் வலியோடு
அனுப்பிவைத்த ஃபோட்டோ
கிடைத்ததோ இல்லையோ என
காத்திருக்கும் உம்மா
கனவிலே தூண்டிலிட்டு!

-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

No comments: