Friday, June 5, 2020

இது உண்மை வரலாறு ..!

இது உண்மை வரலாறு ..!
Hilal Musthafa
இந்தப் பதிவேற்றத்தை நாளைதான் போட இருந்தேன். ஆனால் இன்று போட வேண்டிய ஒரு கட்டாயம் வாய்த்து விட்டது.
நண்பர் Salah Uddin என்பவர் என் பதிவில் ஒரு சந்தேகம் கேட்டிருந்தார். இந்த வினாவிற்கு விடையாகத்தான் நாளையப் பதிவு எழுத இருந்தேன்.
வினா இன்று வந்துவிட்டதால் இன்றே பதிலைத் தொடர்கிறேன்.
"இந்தக் கலிமா கேசட்டில் எங்கள் உறவுக்காரர் சலாஹுதீன் பாடல் எழுதி இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அவர் பெயரும் கேசட்டில்
பதிவிட்டிருந்ததாக நினைவு",
எனக் கேட்டு இருந்தார்.
இதற்கு நான் சற்றுத் தெளிவாக விளக்கம் தந்துதான் ஆக வேண்டும்.
சலாஹுதீனும் நானும் மிக ஆழமான நண்பர்கள். எங்கள் குரு நாகூர் ஹஸரத்துடைய பிள்ளைகள் நாங்கள். எங்கள் நட்புவட்டாரம் சற்றுப் பெரிது.
சலாஹுதீன் எங்கள் நட்பு வட்டாரத்தின் செல்லப் பிள்ளை.
எங்கள் ஹஸரத்திற்கும் நேயம் மிக்க அன்புச் செல்லப் பிள்ளை.
சலாஹுதீனுக்கு நாகப்பட்டினத்தில் ஒன்றும் சென்னையில் ஒன்றுமாக இரண்டு குடும்பங்கள். இவைகள் ரகசியமானவை அல்ல.
நாகப்பட்டினத்தில் செல்வாக்கும் மரியாதையும் மிக்க பெரிய குடும்பத்துப் பிள்ளை. அவர் தந்தையார் பிசினஸ் மேக்னெட்.
இந்த எங்களின் நட்புவட்டாரச் செல்லப்பிள்ளை நியாயம் மிக்க முரட்டுத்தனமானவர். இவரை அடக்குவது என்பது அநேகமாக இயலாத ஒன்று.
எங்கள் ஹஸரத் என்ன சொன்னாலும் கைகட்டித் தலைகுனிந்து ஏற்றுக் கொள்வார்.

நண்பர் வட்டாரத்தில் எவருக்கும் கட்டுப்பட மாட்டார். சென்னை ஆப்பனூர் மர்ஹும் காசிம் அண்ணன் இவரைக் கட்டுப்படுத்த முடியும். அவர் சொல்லை மதிப்பார்.
நான் அழுத்திச் சொன்னால் மீறவே மாட்டார். என் மீதும் அப்படி ஒரு பாசம் உண்டு அவருக்கு.
இந்தத் தகவல் ஒரு பரம ரகசியம் அல்ல. ஹஸரத்தும் அறிந்த உண்மை. எங்கள் நண்பர் வட்டாரமும் புரிந்த உண்மை.
ஸலாஹுத்தீனைப் போல ஒரு மனிதனை எங்கள் நட்புவட்டாரம் சந்தித்ததே கிடையாது.
அவரிடம் அப்பட்டமான பண்புகள் குவிந்து கிடக்கும். பிடிவாதமும் நேர்மையும் எவருக்கும் அஞ்சாத உறுதியும் அவரிடம் இருக்கும்.
ஒரு சம்பவத்தை நான் இங்கே சொல்லியாக வேண்டும்.
ஒரு மாலை நேரம் இருட்டுப் படரத்தொடங்கும் காலம். நாகப்பட்டினம் கடற்கரையில் அவரும் சில நண்பர்களும் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சற்றுத் தூரத்தில் ஒரு சூட் கேஸ் கிடந்தது. அதை சலாவுதீன் பார்த்துவிட்டார். எடுத்து வந்தார். நண்பர்கள் இது என்னவென்று கேட்டனர்.
இன்னொரு நண்பர் வாங்கிய வேகத்தில் உடைத்துத் திறந்துவிட்டார்.
உள்ளே கத்தைக் கத்தையாய் நூறு ரூபாய் நோட்டுக்கள். அநேகமாக பத்து லட்சம் ரூபாய் இருக்கலாம்.
நண்பர்கள் எல்லாம் ஆனந்தப் பட்டார்கள். அந்த நண்பர்கள் அனைவரும் பெரும் கஷ்டத்தில் இருப்பவர்கள்தாம்.
ஒரு நண்பர் அப்படியே எடுத்து பணத்தை மட்டும் பிரித்துக் கொள்வோம். சூட் கேஸைப் போட்டுவிட்டுப் போய்விடுவோம்.
ஏதோ கடத்தல் காரர்களைக் கஸ்டம்ஸ் விரட்டி இருக்கிறது. அவர்கள் சூட் கேஸைத் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பி விட்டார்கள். நமக்குப் பிரச்சனையே இல்லை என்று சந்தோஷப் பட்டார்.
சலாவுதீன் எழுந்தார். சூட் கேஸைச் சாத்தி மூடினார். காலால் எட்டித் தள்ளினார்.
"இது நமக்குரிய பணம் அல்ல. நமக்கது வேண்டாம்". நண்பர்களை அடக்கி அழைத்து வந்து விட்டார். சூட் கேஸ் பணம் அங்கேயே கிடந்தது.
வரும் வழியில் ஒரு நண்பர் போலீஸிடம் ஒப்படைத்து இருக்கலாமே என்றார்.
"அதுவும் என் வேலை அல்ல", என்று கடுமையாகச் சொல்லி நடந்து விட்டார்.
இது நடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.
சூட்கேசில் இருந்த பணம் இன்றைய மதிப்பில் பல கோடிகள் இருக்கலாம்.
இவர்தான் சலாஹுதீன். எங்கள் சலாஹுதீன் நட்புவட்டத்தில் உயர்ந்த மனிதன்.
சலாஹுதீன் என் மீது அன்பும் பாசமும் நேசமும் கொண்ட மனிதர். அவரின் இரு குடும்பத்தார்களுக்கும் இது நன்கு தெரியும்.
இன்னும் நிறைய அவர் பற்றிச் சொல்ல வேண்டும். அதை வேறொரு சந்தர்ப்பத்தில் வைத்துக் கொள்ளலாம்.
கலிமா கேசட் கதைக்கு வருவோம். மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அழைப்பின் பேரில் சலாஹுதீன்தான் என்னை அழைத்துச் சென்றார்.
நான் அந்தக் காலக் கட்டத்தில் மிக வறிய நிலையில் இருந்தேன். ஒரு நாளை ஓட்டுவதே இமயமலையை இழுப்பதற்குச் சமமானது.
அதுவரை நான் கேசட்டுகளுக்குப் பாடல் எழுதியதே கிடையாது.
எனக்கு அது பிடிக்காது. பிடிக்காது என்றால் பிடிக்காது. அவ்வளவுதான்.
கவிஞர்.தா.காசிம், நாகூர் ஹனிபா அண்ணனுக்குப் பாடல் எழுதும் வேளையிலெல்லாம் ஹனீபா அண்ணன் என்னிடமும் "அண்ணன் மகனே (என்னை அப்படித்தான் அழைப்பார்) நீங்களும் ஒரு பாட்டுத் தரலாமே ", என்று கேட்பார். நான் சிரித்துக் கொள்வேன்.
பின்னரும் கவிஞர் தா.காசிம் என்னை வற்புறுத்தினார். நான் " மாமு அது எனக்குப் பிடிக்காது", என்று மறுத்துவிட்டேன்.
இவைகள் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போது சலாஹுதீன் இஸ்லாமியப் பாட்டெழுத எம்.எஸ்.வியிடம் என்னை அழைத்துச் செல்கிறார்.
என் மனம் கடும் முரண்பாட்டில் என்னிடம் மோதுகிறது.
என் மனைவி, என் இரு குழந்தைகளின் பசி என் கண் முன் நிழலாடுகிறது.
ஒப்புக் கொண்டேன்.
சலாஹுத்தீனிடம் ஒரு கண்டிஷன் போட்டேன். இதில் வரும் அனைத்துப் பாடல்களிலும் உம் பெயரே போட்டுக் கொள்ளும்.
உம் தேவைக்கும் என் தேவைக்கும் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றேன்.
அவர் நிலையும் என் நிலையும் அப்போது கஷ்டம்தான்.
"யோவ் எனக்கு மரபுக் கவியே தெரியாது. இலக்கணக் கவிதையும் எழுதியதில்லை. இது இசைப் பாட்டு. என் பெயரைப் போட்டால் நம்மில் யாராவது நம்புவார்களா?" , என்றார் சலாஹுதீன்.
"அதெல்லாம் கிடக்கட்டும் சொன்னதைச் செய்யுமய்யா", என்று அதட்டினேன்.
கேசட் ஏழு பாடல்களில் ஐந்து பாடல்கள் எழுதினோம். ரிக்கார்டிங் எல்லாம் முடிந்து விட்டது.
ரிக்கார்டிங் நடந்த இடம் ராயப்பேட்டை ஏ.வி.எம். சௌண்டிங் அறையில்.
அவர்கள் சலாஹுத்தீனிடம் இரண்டு செக் கொடுக்கிறார்கள். சலாஹுதீன் பெயரில் 1500 ரூபாய் மூன்று பாடல்கள். ஹிலால் முஸ்தபா பெயரில் 1000 ரூபாய் இரண்டு பாடல்கள்.
"என்னயா இது என் பேரிலும் செக் தருகிறார்கள்? ", என்று கேட்டேன்.
"பாடல்களை என்னிடம் தந்து விட்டீர். அந்தப் பாடல்களுக்கு நான்தான் உரிமையாளன். நான் உமக்குப் போனால் போகட்டும் என்று இரண்டு பாடல் உம் பேரில் கொடுத்து விட்டேன்", என்றார் அவருக்கே உரிய எகத்தாள மொழியில்.
எனக்குப் பேங்க் அக்கவுண்டே கிடையாது.
சலாஹுதீனே இந்தியன் பேங்கில் எனக்கு 100 ரூபாய் போட்டு அக்கவுண்ட் ஓபன் பண்ணிக் கொடுத்தார்.
"யோவ் அதெல்லாம் சரி எந்த ரெண்டு பாட்டு எனக்குத் தானம் தந்தீர்", என்றேன்.
"என் பாட்டு ஐந்தும் அற்புதமான பாடல்கள். அவற்றில் அதிகம் பிடித்த ரெண்டு பாட்டை உமக்குத் தந்துவிட்டேன்.
அதுதான் "அழகுத் திருமுகம்" பாடலும், நினைவெல்லாம் மக்கத்து நபிமீது" பாடலும். உமக்குத் தந்து விட்டேன்", என்றார் சலாஹுதீன்.
உண்மை அதுதானே.
நான் தந்துவிட்டதன் பின் அவருக்குத்தானே உரிமை.
அவர் இப்பொழுது எனக்கு ரெண்டு தானம் தந்து இருக்கிறார்.
இதுதானே தார்மீகச் சரி.
பாடல்களுக்கு அவர் வாங்கிய 1500 ரூபாயில் ஒரு பைசாக் கூட எடுக்காமல்,
ஏன் அதற்கு மேலேயும் கூட என் வீட்டுச் செலவுகளுக்குப் பார்த்துப் பார்த்து செலவு செய்தார்.
சலாஹுதீன் மகத்தான மனிதன்.
நாங்கள் சென்னை மெரீனா காந்தி சிலைக்குப் பின்புறம் மணலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்போம்.
ஆப்பனூர் காசிம் அண்ணன், ஆப்பனூர் பீர் அண்ணன், தலைவர் அப்துல் சமத் சாஹிப் மூத்த மகன் பாகவி, கடைசி மகன் அப்துல் வஹாப், புலவர்.அ.ஷேக் அலாவுதீன், நம் சலாஹுதீன் பேசிக்கொண்டு இருப்போம்.
இரண்டு மணிநேரம் பேசுவோம். பல தலைப்புகளில் பேசுவோம்.
காசிம் அண்ணனும் பீர் அண்ணனும்தான் என்னைத் தூண்டி விடுவார்கள். என் பேச்சினை யாருக்கும் தெரியாமல் சலாஹுதீன் சிறிய டேப்பில் பதிவு செய்து வருவார்.
சில காலம் கடந்து ஒருநாள் எழுதிய பேப்பர்க் கத்தையை என் கையில் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
அதைப்படித்துப் பார்த்தேன். டேப்பில் நான் பேசியிருந்த இந்திய அடிப்படைச்சட்ட விமர்சனத்தைப் பகுதிகளாகப் பிரித்து எழுதி இருந்தார். படித்த நாங்கள் எல்லோருமே வியப்புற்றோம்.
நான் சொன்னேன்  புத்தகம் வடிவாக்க வேண்டுமானால் ஆதார பூர்வமான சில தகவல்களை இணைக்க வேண்டும் என்று.
சில நாள்களிலேயே தயார் பண்ணி தந்துவிட்டேன்.
காசிம் அண்ணன் " நான் வந்த உடனே பதிப்பித்து விடலாம்", என்று கூறி அவசரமாகச் சிங்கப்பூர் சென்று விட்டார்.
சலாஹுதீனுக்கு அவசரம் தாளவில்லை. ஏதோ ஒரு பிரஸ்ஸில் கொடுத்துப் பணம் புரட்டி கம்போசிங் முடித்து விட்டார்.
அன்று மாலையில் கடல்வெளியில் கூடிய எங்கள் முன் முழு புரூப் காப்பியைத் தந்தார்.
"ஏன்யா அவசரப் படுறீரு? பணத்துக்கு என்னையா செய்தீர்?", என்று கேட்டேன்.
"அதெல்லாம் ரெடி ஆகிடுச்சு, இன்று ராத்திரியும் நாளையும் மாங்கு மாங்குனு ப்ரூப் பார்த்து நாளைக்கழித்து காலையில் கொடும்மையா", என்றார்.
அதுபோல் அவரிடம் கொடுத்தேன். நாலாவது நாள் அச்சாகி விட்டது. அடுத்தவாரம் 1200 காப்பிகள் புத்தகமாகக் கைக்கு வந்துவிட்டன.
சலாஹுதீன் மூத்த மகள் சாராவின் பெயரில் சாரா பதிப்பகம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டார்.
அதுதான் நான் எழுதிய
"தேவையான தீர்ப்புகள்" புத்தகம்.
சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் தலைவர்
அப்துஸ் ஸமது சாஹிப் தலைமையில் நூல் வெளியீட்டு விழா.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க. சுப்பு, கவிஞர் மு.மேத்தா போன்றோர் நூலை விமர்சித்துப் பேசினார்கள்.
நூற்களுக்கு நூலக ஆர்டர் வாங்கி விட்டார். செலவு கையைப் பிடிக்கவில்லை.
நான் சலாஹுத்தீனிடம்,  வேறொரு பைக்கில் ஐந்து ஆறு நாளாகச் சுற்றுகிறீரே என்ன சமாச்சாரம்? என்று கேட்டேன்.
பிரிண்டிங், பைண்டிங் ஆக என் பைக் மாறிவிட்டது என்றார்.
அப்படியானால் இந்த பைக்?
சுபேதா (அவர் மனைவி) தம்பி பைக். அதை எடுத்து வந்துவிட்டேன். திரும்ப கொடுக்க மாட்டேன். இது நமக்குத்தான் என்று சிரித்தார். அப்படித்தான் ஆனது.
இவர்தான் எங்கள் சலாஹுதீன்.
 எங்கள் சலாஹுதீன் இன்று இங்கே எங்களிடம் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பே
வழங்கியவன் அவரை வரவழைத்துக் கொண்டான்.
இன்னும் சொல்ல வேண்டும். வேறொரு சந்தர்ப்பத்தில் பதிவிடுகிறேன்.

Hilal Musthafa

No comments: