Hilal Musthafa
வானக் கடலில்--மேகம்
வக்கணை செய்கிறது!
(வானக்...)
வெளுத்துத் திரண்டு---பஞ்சுப்
பொதியாய்ப் படர்கிறது!
(வானக்...)
மண்ணில் வெக்கை மனிதன் உச்சி
மண்டையில் நரக நெருப்பை வரைகிறது
கண்ணில் சூடோ நிறைகிறது!
( வானக்...)
சொட்டுத் தண்ணீர் பட்டுத் தெரித்து
சுகம்தர மறுத்து முரண்டு பிடிக்கிறது
விட்டுத் தொலைத்து கடக்கிறது!
(வானக்...)
மேகம் திரண்டு இதோவெனச் சொல்லி
மெல்ல உதிர்த்து மீண்டும் வெறுக்கிறது
தாகம் நாவை இழுக்கிறது!
(வானக்...)
காக்கை பறவை மதிய மரத்தில்
போக்கை நிறுத்தி மூச்சு இரைக்கிறது
தாக்குப் பிடிக்கத் தவிக்கிறது!
(வானக்...)
ஒருபுறம் இப்படி மறுபுறம் எப்படி?
ஊரைச் சுருட்டி வெள்ளம் நடக்கிறது
வரும்மழை விரோதம் தொடுக்கிறது!
(வானக்....)
மனிதப் பயல்கள் மனத்தைப் போலே
இயற்கைப் பாதைத் தவறிப் போகிறது
புனிதம் பிரேதம் ஆகிறது!
(வானக்....)
பூமித் தவறே புறவெளித் தவறும்
புண்ணியம் பதறி மனிதம் சிதைகிறது
போதும் தண்டனை புரிகிறது!
(வானக்...)
இவனின் மோசடி இத்தனை என்றால்
இயற்கைப் பதிலடி அத்தனை வெகுமதி
அவனின் அருளும் கெடுபிடி!
(வானக்...)
Hilal Musthafa


No comments:
Post a Comment