Tuesday, June 16, 2020

யாரடா...!

எழுதியவர் Hilal Musthafa

யாரடா...!

யாரடா ! அங்கே எழுந்துநிற்பவன்--நல்ல
இலக்கணம் தப்பிய பழுதுடையவன்?
( யாரடா...)

எழுச்சி ஒன்று எழுந்திட வேண்டும்
இளைய காற்று நிகழ்த்திட வேண்டும்!
பழியினை அள்ளி வீசிடும் போதும்
பாவச் சேற்றைப் பூசிடும் போதும்...!

பல்லினை இளித்துக்
கரத்தினைக் குவித்துப்
பணிந்திட மாட்டோம்!
உள்ளினில் தயக்கம்
உடலினில் நடுக்கம்
அணிந்திட மாட்டோம்!
(யாரடா...)



மதத்தின் பேயை ஏவிவிட் டாலும்
மயங்கிட மாட்டோம் மதித்திட மாட்டோம்!
தனித்துப் பழகித் தோளைத் தழுவி
சகோதரப் பாசம் வளர்த்தே
அணைப்போம்!

அன்பினை விளைப்போம்
அருளினை விதைப்போம்
அஞ்சிட மாட்டோம்!
அருந்திடும் அமுதினில்
என்றுமே நாங்கள்
நஞ்சிட மாட்டோம்!
(யாரடா...)

வாழ்ந்திடும் பூமி இந்தியச் சொந்தம்
பிரிப்பவர் தமக்கோ ஏதிங்குப் பந்தம்!
சூழ்ச்சிக்கோ இங்கு ஒருப்பட மாட்டோம்
சுற்றும் முற்றும் கவனம் பதிப்போம்!

வந்தவர் வீசிய
குந்தகம் தன்னை
வளர்த்திட மாட்டோம்!
வாலினை ஆட்டிக்
காலினைப் பிடித்து
குழைந்திட மாட்டோம்!
(யாரடா...)

கற்பவர் தம்மைத் தடுப்பவன் எவனும்
கண்ணியம் இழந்தவன்! கயமை
இனத்தவன்!
அற்பப் பதரவன்! அசுத்த இழிவவன்!
அழிவுப் புழுவவன்! தேசத் துரோகியன்!

உழைப்பவர் மதிப்பினைக்
கெடுப்பவன் தன்னை
விட்டிட மாட்டோம்!
பிழைப்பவன் அவனை
உழைப்பவர் நாமோ
தொட்டிட மாட்டோம்!
(யாரடா...)

ஆளத் தகுந்தவன் தானெனச்
சொல்பவன்
ஆணவம் அழிப்போம்! அவன்திமிர்
ஒழிப்போம்!
பேணத் தகாதவன்! வீணே கொழுத்தவன்
பாவத் துணையவன்! பழியினில்
பிறந்தவன்!

கூத்தினைத் துடைப்போம்!
குறுமதி உடைப்போம்!
மதித்திட மாட்டோம்!
கோணப் புத்திக்
குதர்க்கம் சிதைப்போம்!
பயந்திட மாட்டோம்!

No comments: