Tuesday, June 30, 2020

உகாண்டாவில் உழைப்பு; உள்ளூரில் சேவை!- முகமது கபூரின் மனிதநேயம்

உகாண்டாவில் உழைப்பு; உள்ளூரில் சேவை!- முகமது கபூரின் மனிதநேயம்

பிறப்பால் இஸ்லாமியரான  முகமது கபூர்  சமீபத்தில், ஆதரவின்றியும், அடக்கம் செய்யக்கூட வழியின்றியும் இறந்த இந்துக்கள் மூவரின் உடலை எடுத்து அடக்கம் செய்திருக்கிறார்.

நாகர்கோவில் இடலாக்குடியைச் சேர்ந்த முகமது கபூர், உகாண்டாவில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார். அங்கு இருக்கும் கடையை இவரது பணியாளர்கள் கவனித்துக்கொள்ள, அதன் வருமானத்தில் பெரும்பகுதியை இங்கே சேவைக்காகச் செலவு செய்கிறார் முகமது கபூர்.


இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய அவர், “நானும் ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன்தான். எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. எங்க அப்பாவுக்குக் கேன்சர் வந்துச்சு. அவரை அம்மா வாரத்துக்கு ஒருதடவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாங்க. ஒருகட்டத்தில் இந்த வாரம் ஆஸ்பத்திரிக்குப் போக காசில்லைன்னு அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறதை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைப்போம். இந்த சூழலில் வளர்ந்ததால ஏழை மக்கள் ஆஸ்பத்திரிக்குச் செலவு செய்ய முடியாமல் படும் கஷ்டத்தை அனுபவபூர்வமா உணர்ந்துருக்கேன்.

அதனாலேயே, உகாண்டாவில் பணிபுரியும் குமரி மாவட்ட நண்பர்கள் சேர்ந்து இடலாக்குடியில் ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டினோம். ‘உகாசேவா மருத்துவமனை’ன்னு அதுக்குப் பேரு. அதன் மூலமா இதுவரை 50 ஏழைகளுக்கு இலவசமா ஆபரேஷன் செஞ்சுருக்கோம். அதில் சரிபாதி மாற்று மதத்தினர்தான். ‘நஸ்ருன் மினல்லாஹ்’ என எங்களுக்குள் ஒரு வாட்ஸ் - அப் குழு வைச்சுருக்கோம். அப்படின்னா, ‘இறைவனிடம் இருந்து வரும் உதவி’ன்னு அர்த்தம். அந்தக் குழுவில் ஏழை மக்களின் அறுவை சிகிச்சை பற்றி தகவலைச் சொல்லி, அதுக்கு எவ்வளவு செலவாகுதுன்னும் போடுவோம். உகாண்டா நண்பர்கள் பலரும் உதவ, அடுத்த ஒருமணி நேரத்திலேயே ஆபரேஷனுக்கான தொகையைத் திரட்டிருவோம்.

நிதி கேட்கும் அளவுக்கு அவர் ஏழையாக இருந்தாலே போதும். மதம் கடந்து இந்தச் சேவை நீளும். அதேமாதிரி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் மூலம், அடக்கம் செய்ய வசதியில்லாத பிரேதங்கள் குறித்துத் தகவல் வரும். அப்படித்தான் மூன்று இந்து சகோதர்களின் உடல்களை நானும், நண்பர்களுமாகச் சேர்ந்து எரியூட்டினோம். கஜா புயல் தாக்கியபோது தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் மூன்று ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தோம்.


உடல் அடக்கத்தின்போது
இஸ்லாமியர்கள் உடல் அடக்கம் செய்வதில் சில விதிகள் இருக்கு. உடலை நல்லாக் குளிப்பாட்டி, சுத்தம் செய்து வயிற்றில் இருக்கும் மலக் கழிவுகளைக்கூட வெளியேற்றணும். அதுக்கான வசதியும், அந்த நீர் செல்லும் பாதையும் எல்லா வீடுகளிலும் இருக்காது. பொருளாதாரத்தில் பின் தங்கிய இஸ்லாமிய குடும்பங்களில் ஒற்றை அறையும், கழிப்பறையும்தான் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் வசதிக்காக இறந்தவர்களைக் குளிப்பாட்டி அடக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம்.

எங்களுடைய ஊருக்குப் பக்கத்திலேயே சொர்ணம்மாள் என்பவரின் வீடு மோசமான நிலையில் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு 75 ஆயிரம் ரூபாயில் அந்த வீட்டைப் புதுப்பித்துக் கொடுத்தேன். நான் உகாண்டாவுக்குப் போகும் முன்பாக, பத்து வருடம் கேரளாவில் பிஸ்மி பேனா கம்பெனியில் வேலை செஞ்சேன். அதனுடைய உரிமையாளர் பாம்பே, டெல்லின்னு சுத்துவாரு. ஆனா, திடீர்னு போன் செஞ்சு ஏதாவது ஆசிரமத்தோட பேரைச் சொல்லி ‘அவங்களுக்கு முப்பது மூட்டை அரிசி வாங்கிக் கொடுங்க’ன்னு சொல்லுவாரு. வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடுக்கும் குணத்தில் அவருதான் என்னோட ரோல்மாடல்.

குமரி மாவட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்கள் ஏழெட்டு இருக்கு. அங்கெல்லாம் மாதம் ஒரு தடவை நானும், என்னோட நண்பர்களுமாகப் போய் எங்களால முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு வருவோம். இதேபோல் எங்க ஊரில் என்னோட சொந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைச்சுக் கொடுத்திருக்கிறேன். நாகர்கோவிலில் ஒரு மெடிக்கல் ஸ்டோரின் சேல்ஸ்மேனாக வாழ்க்கையைத் தொடங்கி, கேரளத்தில் பேனா கம்பெனியில் வேலை செஞ்சுட்டுத்தான் உகாண்டாவுக்குப் போனேன்.

அங்கேயும் அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடையில் வேலைக்குத்தான் போனேன். பத்து வருசம் தீவிரமா உழைச்சு முதலாளிக்கு நல்ல லாபத்தை சம்பாதிச்சுக் கொடுத்தேன். ஒரு கட்டத்தில் நீங்களே கடையை நடத்துங்கன்னு என்னை முதலாளியாக்கி அழகு பார்த்தாரு என்னோட முதலாளி. பொருளாதாரரீதியாக நல்ல இடத்துக்கு வந்துட்டு, பழசைத் திரும்பிப் பார்க்கும்போதுதான் நமக்கும் கீழே இருக்கிற மனிதர்களுக்கு உதவணும்னு வைராக்கியம் வருது.

எங்க அம்மா அடிக்கடி ஒருவார்த்தை சொல்லுவாங்க. ‘ஒருத்தருக்கு உதவி செய்யணும்னு நினைச்சா அதை ராத்திரியானாலும் அப்பவே செஞ்சுரு. ஏன்னா, விடியுறதுக்குள்ள சைத்தான் உன்னை வந்து குழப்பிடுவான்’னு சொல்லுவாங்க. அதைத்தான் மனசுல ஏத்திக்கிட்டு உதவிட்டு இருக்கேன்” என்றார்.
நன்றி :https://www.hindutamil.in/news/tamilnadu


No comments: