Monday, June 11, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1


தொழுகையில் ”அல்லாகு அக்பர்” என்று எப்படிக் கூறுவீர்கள்? அதைவிட இனிய இசை உண்டோ என்பதுபோல் இருக்காதா?

காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது
பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன

தாய் தன் மழலையைக் கொஞ்சும்போதுகூட தாளலயம் கூட்டித்தான் கொஞ்சுவாள். ம்ம்... ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்....... என்று இசைத்துத்தான் தாலாட்டித் தூங்க வைப்பாள். இப்படியாய் மனிதனின் எல்லா நிலைகளிலும் இசை நிறைந்து இருக்கிறது. அதை வேண்டாம் என்று இஸ்லாம் எப்படிச் சொல்லும். தகாத தப்பான கூடாத இசையைத்தான் குற்றமென்று சொல்லும்.

இஸ்லாம் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால் அது இரு நிலையில் தெளிவாக இருக்கும்.

இது ஹலால்
இது ஹராம்
நல்ல கவிதை ஹலால்
தவறான கவிதை ஹராம்
நல்ல இசை ஹலால்
தவறான இசை ஹராம்

தொழுகையின் அழைப்பான ஆதான் நபிகளின் காலத்திலேயே சகோ பிலால் அவர்களால் இசைகூட்டி இனிமையாகப் பாடப்பட்டது. புல்புல் என்று நபிகளால் அவர் அழைக்கப்பட்டார்.

எங்கள் மீதொரு பௌர்ணமி பிரகாசிக்கிறது - அது
மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது

என்று மதீனாவின் மக்கள் ஒன்றாய்க் கூடி மகிழ்ச்சியில் நபிகளை வரவேற்றுப் பாடினார்கள்.

எல்லாக் காரியங்களிலும் குலையிடுதல் இஸ்லாமிய வீடுகளில் வழக்கமான ஒன்றுதானே. அதை அதிரையில் மட்டுமல்ல, சவுதியிலும் நிறைய கேட்டிருக்கிறேன். இப்படி ஏராளமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

இசை மனிதனை அடிமைப்படுத்துகிறது என்கிறார்கள். மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான். அதற்கான சான்று குரானிலேயே உண்டு. கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன.

உங்கள் குழந்தை உங்களோடு மொழிவது இசை. அதனோடு நீங்கள் குழைவது இசை. குரான் ஓதுதல் இசை. பாங்கு சொல்லுதல் இசை.

இசை கூடும். ஆனால் இசைக்கருவிகள் கூடாது என்கிறார்கள் சிலர். முதலில் இவர்கள் இசை கூடும் என்று ஏற்றதற்குப் பாராட்டலாம்.

கருவிகள் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? உங்கள் வாய் இசைக்கான கருவிதான். காற்றும் மரங்களும் சேர்ந்தால் அது இசைக்கான கருவிதான். இப்படியே உலகில் உள்ள எல்லாப் பொருளும் இசைதரவல்லவை உலகில் உள்ள அனைத்துமே இசைக்கருவிகள்தாம்.

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும். இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். சுவாரசியமாய் இருக்கும்!
 இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 1
Source : http://anbudanbuhari.blogspot.in/

No comments: