போன ஞாயிறு கொஞ்சம் ஓய்வாக இருந்தேன். வீட்டு லைப்ரரியில் சேகரிப்பில் இருந்த பழைய புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். பழைய ‘குமுதம்’ இதழ் ஒன்று கிடைத்தது. எந்த புத்தகம் வாங்கினாலும் உடனே அட்டையிலோ, முதல் பக்கத்திலோ தன்னுடைய கையெழுத்தை போட்டு வைத்துக் கொள்வது அப்பாவின் வழக்கம். அதுபோலவே புத்தகத்தில் அவரை கவர்ந்த வாசகங்கள் ஏதேனும் இருந்தால் அடிக்கோடிட்டு வைத்திருப்பார். கட்டுரைகள் அருகே அப்பிரச்சினை குறித்த அவரது கருத்தை சுருக்கமாக (வாசகர் கடிதம் மாதிரி) எழுதிவைப்பார். இதழைப் புரட்டும்போது உள்ளே ‘பிரார்த்தனை கிளப்’ பகுதியில் prayed என்று எழுதி கீழே கையெழுத்திட்டிருந்தார். நீண்டநாள் கழித்து அவரது அழகான கையெழுத்தை கண்டது மகிழ்ச்சியை தந்ததோடு, வேறு சில சிந்தனைகளையும் கிளறியது.
குமுதம் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற பகுதியை இந்த தலைமுறை குமுதம் வாசகர்கள் எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர் எஸ்.ஏ.பி-க்கு கூட்டுப் பிரார்த்தனையில் நம்பிக்கை அதிகம். பிரார்த்தனை மூலமாக இறைவனிடம் எதையும் சாதித்துவிடலாம் என்கிற கருத்தை கொண்டிருந்தவர். எனவேதான் தன்னுடைய இதழில் ‘பிரார்த்தனை கிளப்’ என்கிற வாசகர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார். நோய் நொடியில் இருப்பவர்கள், அறுவைச்சிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் என்று இன்னலில் இருப்பவர்கள் குமுதத்துக்கு கடிதம் எழுதிப் போடுவார்கள். பிரார்த்தனை கிளப் பகுதியில் அக்கடிதம் பிரசுரிக்கப்படும். கீழே ஆசிரியர் ‘இவருக்காக இன்ன நேரத்தில் அனைவரும் அவரவர் வழிபடும் இடத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்’ என்று வாசகர்களை கோருவார்.
சிறுவயதில் அப்பகுதியை வாசிக்கும்போது ‘டைம் வேஸ்ட்’ என்று நினைப்பேன். எங்கோ இருக்கும் யாருக்கோ எதற்காகவோ யார் மெனக்கெட்டு பிரார்த்திப்பார்கள் என்றெல்லாம் கருதியிருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பாவே அதை தொடர்ச்சியாக பின்பற்றி வந்திருக்கிறார் என்பது எனக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது. பிற்பாடு நானெடுத்த குட்டி கணக்கெடுப்பு ஒன்றில் அப்போதிருந்த குமுதம் வாசகர்கள் (பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டவர்கள்) பெரும்பாலான பேர் நேரமெடுத்து, மெனக்கெட்டு இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் வழக்கம் கொண்டவர்கள் என்பதை அறிந்துகொண்டேன். உள்ளகரம் ஆயில்மில் அருகே ஒரு யாக்கோபு சர்ச் உண்டு. ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்துக்கு சென்றபோது, குமுதம் புத்தகத்தை வைத்துக்கொண்டு ஒரு அன்பர் மனமுருக ‘யாருக்கோ’ பிரார்த்திருத்துக் கொண்டிருந்ததை கூட கண்டிருக்கிறேன்.
இப்போது குமுதத்தில் ‘பிரார்த்தனை கிளப்’ வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை ஒன்பது முதல் ஒன்பது மணிக்குள்ளாக வாசகர்கள் ஒட்டுமொத்தமாக முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவார்களா என்பதற்கு நிச்சயமுமில்லை.
கடந்த இருபது ஆண்டுகளில் மனிதநேயம் நிறைய வளர்ந்திருக்கிறது. மனித உரிமை அமைப்புகள் நிறைய உருவாகியிருக்கின்றன. சாதி, சமய, இன, தேச வேறுபாடுகள் குறித்த பிரக்ஞை குறைந்திருக்கிறது. அடுத்தவர் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. அதேநேரம் ஆன்மீகமும் பல்வேறு வடிவங்களில் முன்பிலும் அதிகமாக மக்களை ஈர்க்கிறது. இப்படியெல்லாம் ஒரு தோற்றம் எனக்குள் இருக்கிறது. சமகால தலைமுறை குறித்து சமகாலத்தில் வாழும் யாருக்கும் இருக்கும் பெருமிதம்தான் இது. ஆனால், போன தலைமுறையிடம் இருந்த ஏதோ ஒன்று, இன்றைய தலைமுறையிடம் ‘மிஸ்’ ஆகிறது என தோன்றுகிறது. முந்தையத் தலைமுறை அதற்கு முந்தையத் தலைமுறையோடு ஒப்பிட்டு இவ்வாறாக ‘ஃபீல்’ செய்ததாக தெரியவில்லை.
என் அப்பாவை விட நான் அறிவாளி. என் அப்பாவுக்கு கிடைத்த வாய்ப்புகளைவிட எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கிறது. அவரைவிட வசதியாக வாழ்கிறேன். அவர் நினைத்தே பார்க்க முடியாத உயரங்களை நான் அனாயசமாக அடைகிறேன். ஆனால் அவரளவுக்கு நான் உன்னதமானவனாக, உண்மையானவனாக இல்லை. சமூகம் குறித்த அப்பாவின் மதிப்பீடும், அக்கறையும் அவரளவுக்கு எனக்கில்லையோ என்கிற குற்றவுணர்வு தோன்றுகிறது.
கடந்த தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான மரபுத்தொடர்ச்சியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது. எதை, எங்கே தொலைத்திருக்கிறோம் என்பதைக் குறித்து கொஞ்சம் துல்லியமாகவே ஆராய வேண்டும்.
எழுதியவர் யுவகிருஷ்ணா .
Source : http://www.luckylookonline.com
3 comments:
கடந்த தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான மரபுத்தொடர்ச்சியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இப்போதையத் தலைமுறைக்கும் தொடர்ச்சியே இல்லாத விரிசலுக்கும் வாய்ப்பிருக்கிறது. எதை, எங்கே தொலைத்திருக்கிறோம் என்பதைக் குறித்து கொஞ்சம் துல்லியமாகவே ஆராய வேண்டும்.//மிக உண்மை,இனி வரும் தலை முறையைப்பார்த்து இப்போதுள்ள இளைய தலைமுரையும் இதே வார்த்தைகளை கூறும் என்பதிலும் ஐயமில்லை.
சென்ற ஆண்டிலும் கொஞ்ச வாரங்கள் குமுதம் பிரார்த்தனை கிளப் பகுதி பிரசுரமாகியது.
யுவ கிருஷ்ணா ..தங்களின் அப்பாவின் தவம்
தங்களின் செல்வம் ..பிரார்த்தனை தனக்காக
செய்வதை விட பிறருக்காக செய்வதே ஈடேறும்
என கேள்வி பட்டிருக்கிறேன் ..பிரார்தனை கிளப் ..
SAP யின் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு ..
ஒரு விஷயம் தெரியுமா ..பிரார்த்தனை கிளப் மெம்பெர்
என ஒரு போலி ஆசாமி பணம் சம்பாதிக்க முயற்சித்து
பிடிபட்டார் ...
Post a Comment