Wednesday, November 18, 2009

'இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்' - R.P.M. கனி (1963)




புலவர் ஆபிதீன்

'இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்' - R.P.M. கனி (1963)

புலவர் ஆபிதீன் (நாகூர்) நமது கவிஞர் வரிசையில் முக்கிய இடம்பெற்றவராவார். இவரை மக்கள் கவிஞர் என்பதுதான் பொருத்தம். ஏனெனில் இவருடைய பாடல்கள் மக்களை அந்த அளவு கவர்ந்துள்ளன. முஸ்லிம் பாடகர்கள் பலரும் நெடுங்காலமாக இவர் பாடலையே பாடி வந்துள்ளனர்-வருகின்றனர். சுத்தமான தமிழ்ப் பதங்களைக் கொண்டே எளிய இஸ்லாமியப் பாடல்களை ஆக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு

பாட்டு எழுதியவர். இவருடைய பாடல்கள் வானொலிகளிலும் இசைத்தட்டுகளிலும் ஏராளமாக முழங்குகின்றன. சுமார் நாலாயிரம் பாடல்கள் வரை பாடியிருப்பதாக இவர் சொல்கிறார். தூங்கும் நேரம் தவிர மற்ற எந்த நேரத்திலும் எந்தச் செய்யுளையும் தம்மால் புனைய முடியும் என்று பெருமையுடன் கூறுகிறார். பொருளாதார பலம் குறைவான தமது சமுதாயத்தைப் பற்றிக் குறைபட்டுக் கொள்ளாத உயரிய பண்பு உடையவர். "ஒரு பெரும் மேதைக்கு வேண்டும் எல்லா அம்சங்களும் என்னிடம் உண்டு- உடம்பும் பணமுந்தான் குறை" என்கிறார். நாற்பத்தாறு வயதை அடைந்துள்ள இவர் ஆறு சிறு நூற்களைத் தந்துள்ளார். இவருடைய ஆசை என்ன தெரியுமா? பதினைந்தாயிரம் ரூபாய் கிடைத்தால், அதில் எட்டாயிரத்தில் சிற்ப வேலைப்பாடோ, வண்ண விசித்திரமோ இல்லாத ஓர் அழகிய வெண் பள்ளி கட்ட வேண்டும்; மீதிப் பணத்தில் சிறிய அச்சகம் அமைக்க வேண்டும்; கற்பனையில் கண்டு சிந்தனையில் சந்தித்துக் கவிதையில் பாடிக் களிப்புற்ற நபி பெருமானாரின் திரு நாட்டைக் காண வேண்டும் என்பவை இவருடைய ஆசைகளில் சிலவாகும். முஸ்லிம்களுடைய தமிழ்ப் பண்பாட்டைப்பற்றிய உயரிய எண்ணமுடைய இவர் பாடுகிறார்:

பாத்திரத்தை ஏனம் என்போம்

பழையதுவை நீர்ச் சோறென்போம்,

ஆத்திரமாய் மொழி குழம்பை

அழகாக ஆணம் என்போம்,

சொத்தை யுரை பிறர் சொல்லும்

சாதத்தை சோறு என்போம்

எத்தனையோ தமிழ் முஸ்லீம்

எங்களுயிர்த் தமிழ் வழக்கே !


---

இறைமாட்சி

இல்லாதிருந்து எங்கும்
இயங்கா தியங்கி வாயால்
சொல்லா தமைந்து சொல்லிச்
செய்யா துவந்து செய்து
எல்லா முனைந்து ஆய்ந்து
எண்ணும் மனத்தை ஈந்த
வல்லா நுனை விளக்க
வன்மை எவர்க்கும் போதா!

தாங்கஓர் தூணு மின்றி
தரணிமுன் வான மைத்தாய்
ஓங்கலை கடல் படைத்தாய்
ஒருவித அணையு மில்லை
தூங்கிநற் பயனே தூவ
தந்தனை இரவை நித்தம்
பாங்கமை உனது சிறப்பு
பகருதல் எளிதே யாமோ?

நிந்தையில் நபியின் மைந்தன்
நரகினில் நுழைய வைத்தாய்
விந்தையாய் கடல்பி ளந்து
விரிவுடன் பாதை ஈந்தாய்
தந்தைதா னின்றிப் பாரில்
தனயனைப் படைத்த ளித்தாய்
சிந்தையை நோக்கு முன்றன்
சிறப்பினை என்ன சொல்வேன்?


புகழ் முகட்டில் புலவர் ஆபிதீன்

சொல்லரசு. மு. ஜாபர் முஹ்யித்தீன்

'ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்'


காற்றினிலே வரும் கீதமாகவோ ஏட்டினில் இடம்பெற்ற பாடலாகவோ நம்மை கவரும் கவிதைகள் உள்ளத்தை ஊடுருவனவாகவும், உணர்வலைகளை எழுப்பக் கூடியனவாகவும் செவிக்குளிர செய்வனவாகவும் சிந்தைக்கு இன்பம் தருவனவாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு ஆன பாடல் அர்த்தம் பொதிந்ததாக, அறிவு செறிவின் அடையாளமாக ஆழ்ந்த புலமையின் வெளிப்பாடாக அங்கீகாரம் பெறும். காலமெல்லாம் ஆளுமை செலுத்தும்.

உணர்வின் வெளிப்பாடாக வார்த்தை வரிவடிவங்களில் உருவெடுத்த கவிதைகள் அழுத்தமிக்கதாக ஆளுமைத்திறன் கொண்டதாக அமைந்துவிட்டால் பாடிய புலவன் புகழ்முகட்டில் நின்று பாடம் நடத்துவான். அத்தகு நிலை எய்தியவன் இறந்தும் இறவாத ஏற்றம் பெற்றவன் ஆவான். அப்படி அமரகவி ஆன அறிவு சான்றோர் ஆயிரம் ஆயிரம் பேர் அன்றும் வாழ்ந்தார்கள்; இன்றும் வாழ்கிறார்கள்; இனியும் வாழ்வார்கள். வாழும் வரம் பெற்றவர்கள் அவர்கள்.

புலமையின் காரணத்தால் பாடிக் குவித்து புகழ்மேவியவர்களுள் (நாகூர்) புலவர்கோட்டை தந்த நற்றமிழ்ப் புலவர் ஆபிதீனும் ஒருவர். கன்னல்சுவை மிகுந்த கவிதைகளால் கனல் தெறிக்கும் சொல் வன்மையால் கருத்தாழம் மிக்க படைப்பிலக்கியங்களால் அவர் அறிமுகமானார். அவர் மொழிப்புலமை மிக்க கவிஞர். சொல்லாற்றல் உடைய எழுத்தாளர். எழுத்து வன்மை கொண்ட இதழாசிரியர். மதிக்கப்பெற்ற மேடை நாடக ஆசிரியர். நற்றமிழ் இசைப்பாடல்கள் இயற்றிய நாடறிந்த இசைவாணர். ஆக அவர் முத்தமிழ் வித்தகர்.

தமிழை தாய்மொழியாக கொண்ட அவருக்குத் தெரிந்த மொழிகள் ஆங்கிலம், உருது, மலாய், பர்மா ஆகியவனவாகும். ஓவியங்கள் தீட்டவும் அச்சுக் கோர்க்கவும் திறன் பெற்றிருந்த அவர் அவ்வப்போது சிறு வணிகம் புரிந்தாலும் பாட்டு எழுதுவதையே வாழ்நாள் நெடுகிலும் தொழிலாகக் கொண்டிருந்தார். தேவைக்குரிய வருவாய் இன்றி வருவாய்க்கேற்ற வறிய வாழ்வினை நடத்தினார்.

எண்ணிக்கையில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்தார். யாப்பிலக்கணம் கூறும் எல்லா வகை பாடல்களையும் எழுதியுள்ளார். சித்திர கவியும் அவருக்குத் தெரியும். பாடல்கள் புனைவதற்கு ஏற்ற ஒரு சூழலுக்காக ஒதுங்கி நின்றதில்லை. தேவை என்று சொன்னால் போதும். 'திடீர்' கவிதைகள்
தீந்தமிழில் தருவார். எந்த நேரத்திலும் எவ்வித நிலையிலும் எழுதிடும் அவர் தூங்கும்போது மட்டும் எழுதியது இல்லை. அவர் எழுதிய கவிதைகளுக்கு பண்சாராக் கவிதைகள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. பாட்டு எழுதுவதையே தொழிலாகக் கொண்டிருந்த அவர் எழுதிய பாட்டிற்காக பெருந்தொகை எதுவும் பெற்றதாக - பிழைப்பிற்கு வழி செய்து கொண்டதாக - இல்லை. ஒரு கோப்பைத் தேத்தண்ணீருக்காவும் பாடல் எழுதியிருக்கிறார். ஒரு பாடலுக்கு அவர் பெற்ற கூடுதல் தொகை ரூபாய் 80 (எண்பது) என்றும் கூறி வைத்துள்ளார்.

இந்தியத் துணைக்கண்டத்தில் வடபுலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். கடல் கடந்து இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலாயா என்றெல்லாம் சுற்றி வந்துள்ளார். சென்ற இடங்களில் எங்கும் அவர் சோம்பித் திரியவில்லை. சுறுசுறுப்பாக இயங்கியுள்ளார். சமுதாய சேவையிலும் ஈடுபட்டுள்ளார். அவருக்குப் புகழ் சேர்த்த அளவு பொருள் சேரவில்லை. அருள் தேடி அலைந்த அவர் அதுபற்றி கவலைப்பட்டு கலங்கி நிற்கவில்லை. அதே நேரத்தில் அவர் சஞ்சலங்களுக்கும் சபலங்களுக்கும் ஆளாகி தடம் புரளவும் இல்லை; திசை மாறவும் இல்லை. தீனுக்கு - வாய்த் தீனுக்கு அல்ல - உழைத்த தீரர் அவர்.

இளமைப் பருவத்தில் அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் இறைமாட்சியையும் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்-ம்) அவர்கள் வாழ்வியல் வழிகளை விளக்குவதாகவும். இறை நேசச் செல்வகளின் ஏற்றமிகு வழிமுறைகளை விவரிப்பனவாகவும் சமுதாய உணர்வூட்டும் செய்திகளாகவும் அமைந்து இருந்தன. அருமையான பாடல்கள் அவருக்கும் அவர் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பவைகளாகவே இருந்தன. நாகூரின் பண்டைய பெருமை மிக்க அமைப்புகளில் ஒன்றான கௌதிய்யா சங்கம் சார்பிலான பைத்து சபாவின் ஆஸ்தான புலவர் ஆனார் 'ஆபிதீன் காக்கா'. அண்ணனை 'காகா' என்றும் 'நானா' என்றும் அழைப்பது நாகூர் முஸ்லீம் வழக்கு.

கௌதிய்யா பைத்து சபாவின் ஆஸ்தான புலவர் ஆபிதீன் இயற்றிய உணர்ச்சிக் கொப்பளிக்கும் உயர் தமிழ்ப் பாடல்களை விழாக்களிலும் ஊர்வலங்களின் பொது வீதிகளிலும் பாடியவர்கள் பலர். அவர்களும் குறிப்பிடத்தக்கவர் இன்று புகழ் மணக்கும் இசைப்பாடகராக வாழும் இசைமுரசு அல்ஹாஜ் இ.எம். ஹனீபா ஆவார். அன்றக்கும் அதன் பின்னர் பல ஆண்டுகளிலும் வட்டார பைத்து சபாவினர்களும் பாடகர்களும் புலவர் ஆபிதீன் பாட்டுக்களையே விரும்பி பாடி வந்தனர்.

சமுதாய அமைப்பான முஸ்லீம் லீக்கிற்கு , நீதிக்கட்சிக்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கொள்கை விளக்க பாடல்களை எழுதியவர் அவர்.
தமிழக அரசியலில் அவருடைய பாடல்களின் முழக்கம் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது. அர்த்தம் தொனிக்கும் அழகிய பாடல்களால் பாடுவோரும் பாடல் ஒலிக்கும் நிகழ்ச்சிகள் மாநாடுகளும் களை கட்டும். அவ்வப்போது கூடி நிற்கும் மக்கள் எழுப்பும் கரவோசை கடல் அலையையும் மிஞ்சும்.


புலவர் ஆபிதீன் பெற்றிருந்த பன்முகத்திறன் அன்று பரவலாக பேசப்பட்டது என்னவோ உண்மை. அவரது வாழ்க்கை வரலாறு அவருடைய வாய்மொழிகளில் வெளிச்சப் பகுதிக்கு வந்தது 1958ஆம் ஆண்டு டிசம்பர் மாத மணி விளக்கு இதழிலும் 1962ஆம் ஆண்டு ஜூலை மாத பிறை இதழிலும்தான். அவ்விரு இதழ்களிளும் இடம்பெற்ற நேர்காணலில் நெஞ்சம் திறந்து பேசியுள்ளார். நினைப்பையும் நிலையையும் உரைத்துள்ளார். அன்றைய நிலையில் அவரது எழுத்துக்கள் ஒன்பது நூல்களாக வடிவம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மூன்று நூல்கள் அச்சேறாமல் பெட்டியில் தூங்குவதாகவும் கூறியுள்ளார். அவை பற்றிய விபரம் இன்று வரை தெரியாத ஒன்று. 'நானிலங் கண்ட நபிமார்கள்' என்ற தலைப்பிலான நூல் ஒன்று அச்சில் இருப்பதாக விளம்பரம் வந்தது. அப்படி ஒரு நூல் பார்வைக்கு வரவில்லை.

தேடலின் பயனாக இப்போது கிடைத்துள்ள அவருடைய ஆக்கங்கள் : (1) நவநீத கீதம். 1934ஆம் ஆண்டு நாகப்பட்டினம் லெட்சுமி விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. இந்நூலில் நபிகள் பெருமானார் (ஸல்-ம்) அவர்கள் திருப்பெயரிலும் சாஹ¥ல் ஹமீது ஆண்டகை அவர்கள் பெயரிலும் பாடப்பெற்ற பத்துப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. (2) திருநபி வாழ்த்துப்பா. 1935ஆம் ஆண்டு இரங்கூனில் நடைபெற்ற புனித மீலாது விழாவில் வெளியிடப்பட்டது. இரங்கூன் ஸ்ரீ ராமர் பிரஸில் அச்சிடப்பட்டது. இவை இரண்டும் காலத்தால் முந்தியவை. அவர் குறிப்பிட்டு கூறிய ஒன்பது நூல்களுள் இவை இரண்டும் சேர்ந்தவை என்று
நம்பலாம். நூலாசிரியர் பெயர் ஒன்றில் மு. ஜெய்னுல் ஆபிதீன் என்றும் மற்றொன்றில் மு.ஜெ. ஆபிதீன் என்றும் அச்சிடப்பட்டுள்ளன. இரண்டு நூல்களையும் இயற்றியவர் புலவர் ஆபிதீன்தான் என்று அவர் காலத்தில் வாழ்ந்த அவருடைய நண்பர்கள் கூறினார்கள். அப்போதெல்லாம் புலவர் ஆபிதீன் என்று தெரியப்படவில்லை. ஆரம்ப காலம் அது.

அதன்பின்னர் 1949ஆம் ஆண்டு இலங்கை கொழும்பிலிருந்து புலவர் ஆபிதீன் கவிதைத் தொகுப்பு 'தேன்கூடு' என்ற பெயவில் வெளிவந்தது. அந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் சில சொட்டும் தேன் துளிகள். சில கொட்டும் தேனீக்கள். மொத்தத்தில் அந்நூல் பல்சுவை விருந்து.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புலவர் ஆபிதீன் படைப்பு இலக்கியங்களாக - பாடல்களின் தொகுப்புகளாக - அச்சில் வந்தவை மூன்று நூல்கள். அவை முறையே , 1960-ல் 'அழகின் முன் அறிவு' என்ற நூல். யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் வெளியீடு. அதனை அடுத்து 1961ஆம் ஆண்டில் பாவலர் பதிப்பக வெளியீடாக முஸ்லீம் லீக் பாடல்கள் நூல் வந்தது. தொடர்ந்து இஸ்லாமியப் பாடல்கள் புலவர் ஆபிதீன் முகவரி இட்டு வந்தது. இவை மூன்றும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றவை எனலாம். இவற்றைத் தவிர வேறு நூல்கள் எதுவும் தேடியும் கிடைக்கவில்லை.

பாகுசுவை தரும் புலவர் ஆபிதீன் பாடல்கள் இன்றும்கூட இசைமுரசு இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்யூசுப் ஆகியோர் குரல்களில் வானொலி, தொலைக்காட்சி , ஒலிநாடாக்கள் ஆகியவைகளில் தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் ஒலிக்கின்றன. நாகூர் தர்கா ஆஸ்தான இசைவாணர், வித்துவான் எஸ்.எம். ஏ. காதிர், இசைமுரசு அல்ஹாஜ் இ.எம்.ஹனிபா, இசைமணி எம்.எம்.யூசுப், இசைத்தென்றல் ஹெச்.எம்.ஹனிபா, காரைக்கால் எம்.எம்.தாவூது, திருச்சி கலிபுல்லாஹ், மதுரை எஸ். ஹ¥ஸைன்தீன் , இலங்கை மெய்தீன் பேக் ஆகியோரும் பிறரும் பாடிய புலவர் ஆபிதீன் பாடல்கள் புகழ் குவித்தவைகளாகும்.

1947ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சென்றிருந்த அவர் அங்கு விளம்பரப் பலகைகள் எழுதிடும் ஓவியராகத் தொழில் புரிந்தார். சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்களின் சிறப்பிற்கு சிறப்பு சேர்த்த நாளிதழ் / வார இதழ் 'மலாயா நண்பன்' ஆகும். அதன் ஆசிரியர்களாக பல நல்லறிஞர்கள், நாடும் போற்றும் நல்லவர்கள் பொறுப்பேற்று பணியாற்றிய வரலாறு அதற்கு உண்டு. அறிஞர் மு.கரீம் கனி அவர்கள் ஆசிரியராக வீற்றிருந்த காலம் அதன் பொற்காலம். அந்தக் காலகட்டத்தில் புலவர் ஆபிதீன் மலாயா நண்பனின் ஆசிரியராக பணிபுரிந்தார். அறிஞர் கரீம்கனி, மணிமொழி மௌலானா கலிலூர் ரஹ்மான் ஆகியோர் நட்புறவின் பயணாக அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் வெளிப்பாடான கருத்துக்களுக்கு தமிழ் கவிதை வடிவம் கொடுக்கும் அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்களின் வாழ்வு அசைவுகளை அன்று பிரதிபலித்த மலாயா நண்பன் நாளிதழ், மற்றும் வார இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய நாகூ ரைச் சேர்ந்த மூவருள் புலவர் ஆபிதீன் முதலாமவர் ஆவார். குறுகிய காலம் பணியாற்றினார் என்றாலும் அதன் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உழைத்தார். மலாயா நண்பன் நாளிதழ் மற்றும் வார இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்பேற்ற நாகூரைச் சேர்ந்த இரண்டாமவர் எஸ்.எஸ். முஹ்யித்தீன். இவர் நீண்ட
காலம் பணிபுரிந்தார். அவரை அடுத்து வார இதழின் துணை ஆசிரியர் பொறுப்பேற்று பணிபுரிந்தது நான் (மு. ஜாபர் முஹ்யித்தீன்). 1962ல் மலாயா நண்பன்
நிறுத்தப்பட்டு விட்டது.

எந்த நிலையிலும் நேரத்திலும் எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்து இனிய கவிதைகளாக வழங்கிடும் வல்லமை பெற்றிருந்த அவர் குறிக்கோளும்
கொள்கை பிடிப்பும் கொண்டவர். சமுதாய உணர்வுடன் சலியாது சேவை புரிந்தவர். அவர் பாடல்களில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று மிகுதியாக காண முடிகிறது. உள்ளத்தில் ஊற்றெடுத்து வெள்ளம் போல பொங்கி வந்தவை. அவற்றில் தமிழ் துள்ளும். தரங்கெட்டவர்களையும், தீயவர்களையும் எள்ளும் எனில் சரியான
மதிப்பீடு ஆகும்.

தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், கேரள சிங்கம் முஹம்மது கோயா, பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வ., அரசியல் ஞானி வடகரை பக்கர்,சொல்லின் செல்வர் ஆக்கூர் எம்.ஐ.அப்துல் அஜீஸ், கலைக்களஞ்சியம் எம்.ஆர்.எம். அப்துற்றஹீம், சிராஜூல் மில்லத் அப்துஸ்ஸமத் ஆகியோரும் பிறரும் பெரிதும்
பாராட்டியுள்ளார்கள். வறுமையில் வாடி வருந்தியபோதெல்லாம் உள்ளன்புடன் உதவிக்கரம் தீட்டியவர்களில் சங்கு வாப்பா முகம்மது அபூபக்கர் குறிப்பிடத்தக்கவர். 'மெய்யை விட்டு மறையும் வரையில் கையை மேலாய்க் காத்துக் கொண்டவர்' சங்குவாப்பா என்று பாடிச் சென்றுள்ளார் புலவர் ஆபிதீன்.


***


'எல்லாம் வல்ல ஏகனுக்கல்லால்
எவருக்கும் அஞ்ச மாட்டோம்'



முஸ்லிம் என்பவர் யார், அவர் எப்படி இருப்பார் எத்தகைய வாழ்வினர் என்று யாரும் கேட்டு அறிவதில்லை. அப்படிப்பட்ட தேவை எதுவும் இல்லை. எல்லோரும் தெரிந்து வைத்துள்ளனர்; அறிந்து வைத்துள்ளனர். இது உலகு எங்கனும் நிலவும் உண்மை நிலை. இன்றைய நிலையில், நேற்று பெய்த மழையில் முளைத்து
நிற்கும் காளான்கள் (நாய்க்குடை என்பது நாகரீகம் அல்ல) நல்ல ஒழுக்கமும் நெறிமுறை தவறாத வாழ்வும் சொந்தமாகக் கொண்ட முஸ்லீம்களைப் பார்த்து
'நீங்கள் முஸ்லீம்களா?' என்று வினா எழுப்பும் வேதனை நிலை. நாம் அந்த நிலைகெட்ட மனிதர்களைப் பார்த்து நெஞ்சு பொறுக்க முடியாமல் நொறுங்கி
கிடக்கிறோம் என்பது வேறு விஷயம்.

புலவர் ஆபிதீன் , முஸ்லிமாக , அதுவும் முழு முஸ்லீமாக வாழ்ந்தவர். மற்றவர்களுக்கு முன்மாதிரி முஸ்லீமாக வாழவேண்டும் என்று உளமார விரும்பியவர். அவர் எழுதிய பாடல்களில் அதன் வெளிப்பாடுகள் வெளிச்சப் புள்ளிகளாக ஒளிர்வது உணரப்பட்டவை; ஒப்புக்கொள்ளப்பட்டவை. அந்த பாடல்களில் ஒன்றில் சில வரிகள் முஸ்லிம்களை பிறருக்கு அறிமுகம் செய்து வைத்து, அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கும் அடையாளம் காட்டுகிறார்; அறிவுறுத்துகிறார்.

'இறைவன் மேலாணை, இறைமறை மேலாணை' என்று சத்திய வாக்கை முன்வைத்து தொடரும் பாடலின் பக்கம் பார்வையை செலுத்துவோம். அந்தப் பாடல் வரிகள்:


'ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மைக்
கனவிலும் விடமாட்டோம்!
எல்லாம் இயன்ற ஏகனுக் கல்லால்
எவருக்கும் அஞ்சமாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓட மாட்டோம்.'


கூனர்களை நிமிரச் செய்யும் கெடுமதியாளர்களை நாணச் செய்யும் கூர்மையான வார்த்தைகள் வேறு வேண்டுமா? அத்துடன் அவர் நின்றார் இல்லை; நிலை
கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விடவில்லை. நம்மைச் சுற்றி பார்வையை செலுத்துகிறார். நம்மை பற்றி நம்மிடையே நாடகம் ஆடும் அரிதாரம் பூசாத
நடிகர்களைப் பற்றி பாடுகிறார். பார்வையை கூராக்கிக் கொள்ளுங்கள்.


ஊருக்கு உபதேசம் உள்ளத்துப் படுமோசம்
பேருக்கு தாடியும் பெருமையாந் தொப்பியும்
பாருக்கு தேவையா பாசாங்கு பண்ணுதல்
யாருக்கும் நலமாய் ஆகாது அறிவீர்.

ஈனம் இவையற இனியேனும் விடுமின்
ஞானம் இல்லாதவை நமதல்ல நீக்கு
மானம் வளர்ந்திட மதியை செலுத்து
தானம் புரிந்துயர் தைரியம் கொள்க



இவ்வரிகள் இன்றைய நமது எதிரிகளாக வலம் வருவோர்க்காக எழுதப்பட்டவைகளாக தோன்றுகிறது. உள்ளம் குழம்பி, ஊரையும் குழப்பத்தில் ஆழ்த்திடுவோர் உலவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஆள்காட்டி விரல் நீட்டி அடையாளம் காட்டுவதாக உணரப்படுகிறோம், இல்லையா? அவ்வாறு ஆயின் அவருடைய தூர நோக்கு தெரிய வருகிறது. தூய வழிமுறை தெளிவாகிறது.

முன்பெல்லாம் புலமை மிக்க பாடலாசிரியர்கள் எழுதும் பாடல்களின் இறுதியில் தனது பெயரை இலாவகமாக பொறிப்பார்கள். இதற்கு புலவர் ஆபிதீன் விதிவிலக்காக இல்லை. கொஞ்சம் வேறுபட்டு வித்தியாசமாக பாடியுள்ளார். தியாக செம்மேறுகளான இம்மாம் ஹஸன் (ரலி), இமாம் ஹ¥சைன் (ரலி) ஆகியோர் வரலாற்றை விளக்க முனைந்தவர் புனைந்த பாடல் ஒன்று 'இருக்கண்கள் ஹஸன் ஹ¥ஸைன் வாழ்வே..' என்று தொடங்கும். பாட்டின் நிறைவுப் பகுதியின் ஈற்றடியில் 'ஜெய்னுல் ஆபிதீனைத் தவிர யாருமில்லை தீனோரே' என்று வருகிறது. வரலாறு காட்டும் கர்பலா களம் கண் முன் வருகிறது (இமாம் ஹ¥ஸைனாரின் இளவயது மகன் ஜெய்னுல் ஆபிதீனைத் தவிர மற்றனைவரும் கொல்லப்பட்டனர்).

எடுத்த காரியங்களை முடித்த வகையில் அவர் சாதனையாளராகவே உருவெடுத்து இருந்தார். வீர உணர்வு மிக்க வரி வடிவங்கள், கேட்பவர்களையும் படிப்பவர்களையும் விழித்தெழ வைக்கும், வீறு கொள்ளச் செய்யும். அதில் அவருடைய தனித்துவம் உருவம் காட்டும். இறை இல்லங்களான மஸ்ஜித்கள் - பள்ளிவாசல்கள் - இஸ்லாத்தின் பார்வையில் மிகுந்த சிறப்பிற்குரியவைகளாகும். அவற்றில் வணக்க வழிபாடுகள் நடைபெறும் என்பதை எல்லோரும் அறிவார்கள். எடுத்ததெற்கெல்லாம் பயன்படுவது இல்லை. பயன்படுத்துவதும் இல்லை. இதற்காக மட்டும் பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகள் உண்டு.

சில ஊர்களில் சில முஸ்லிகளின் செயல்பாடுகள் சிறப்பிற்குரியவைகளாக இருப்பதில்லை. இந்நிலை விபரம் தெரிந்தவர்களை வேதனைக்குளாகிட செய்கிறது. இது என்னவோ உண்மை. எங்கோ எப்போதோ சஞ்சலத்திற்குள்ளாகி சங்கடப்பட்டுள்ள புலவர் ஆபிதீன் அவர் பார்த்த பள்ளிவாசலை படம் பிடித்து காட்டுகிறார் இப்படி :

கஞ்சியின் கலயம் நூறு
கவலையாய் பாதுகாத்து
கட்டியே வைத்திருந்தார்
கடமையாய் நோன்புக்காக
பஞ்சுதான் சிதைந்து போன
பழையபல் தலைய ணைகள்
பத்திர மாகப் பாயில்
பதுக்கிய பண்பு பார்த்தேன்!

வஞ்சகர் செருப்புத் திருட
வந்திரு ந்தார்க ளங்கே
வயதிலார் தொழுது நின்றார்
வாலிபர் யாரு மில்லை
துஞ்சினோர் செல்லும் பெட்டி
தூர ஓர் மூலை ஓரம்
தூக்கியே சார்த்தி வைத்த
துயர்தரும் காட்சி கண்டேன்.


முன்பொரு காலத்தில் புகழ் மிக்க மீ£ர் முஹம்மது ஜவ்வாது புலவர் , வழிநிலையில் கண்ட பள்ளிவாசல் பற்றி பாடிய பாடல்கள் இன்றும் கூட பலரது நினைவில் நிற்பதை நாம் அறிவோம். 'வாங்கு சொல்ல மோதீன் இல்லை..' என்று தொடங்கும் அந்தப் பாடல் பெற்ற பள்ளிவாசல் போல் இது இல்லை என்பது ஆறுதல் தருகிறது. ஆனால் பாடலின் ஒரு வரியில் 'வாலிபர் யாருமில்லை' என்று வருகிறது. அவர் வாழ்ந்த காலத்து பள்ளிவாசல் அப்படி. இப்போது நிலைமை மாறிவிட்டது. வாலிபர்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள்.

ஆனால் வணக்க வழிபாடு, வழிமுறைகள் இவற்றில் ஏனோ இணக்கம் இல்லை. வேறுபட்டு நிற்பதுவும், விரிசல் ஏற்படுத்துவதும் சமுதாய ஒற்றுமைக்கு ஊறு
விளைவித்து வருகிறது. வேதனைக்குரிய செய்தி.

நாடு, மக்கள், மொழி ஆகியவற்றை அழகிய பாட்டுகளாக ஆக்கி தந்தவர் புலவர் ஆபிதீன். அவர் சார்ந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் சிறப்பை பல்வேறு நிலைகளில் புகழ்ந்து புகன்றுள்ளார். முஸ்லிம்களின் நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் மற்ற யாருக்கும் இளைத்தது அல்ல; சளைத்ததும் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வது எனில் முஸ்லிம்கள் சிறப்பில் மற்றவர்களை மிஞ்சி நிற்கிறார்கள்; விஞ்சி நிற்கிறார்கள். மறுக்கவொண்ணா உண்மையை சுருக்கமாக அதே நேரத்தில் சுவை குன்றாமல் சொல்லி செல்கிறார்.

பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோ றென்போம்
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தையுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!

கொஞ்சமும் ஐயத்திற்கு இடமின்றி சொல்லி வைத்த உண்மை. செம்மொழி தமிழுக்குச் சிறப்பு சேர்த்தவர்கள் நம் முன்னோர்கள். நமக்கு நல்ல வரலாறும் நனி
சிறந்த வழிவாரும் உண்டு.

அறிவு செறிவும் ஆழ்ந்த புலமையும், பாட்டுத் திறனும் மிக்க புலவர் ஆபிதீன் கேலியும் கிண்டலுமாக நையாண்டிப் பாடல்களையும் எழுதியுள்ளார். மணமக்களை வாழ்த்தும் வகையிலான சோபனங்களையும் இயற்றியுள்ளார்.

தமிழ் திரைப்படைதுறையில் முத்திரை பதித்த ரவீந்தர் (நாகூரைச் சேர்ந்த இவருடைய இயற்பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா மொய்தீன். கடந்த 4-11-2004ல் இறப்பெய்தினார்). திரைக்கதை, வசனம் எழுதி புகழ் குவித்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர். அவர் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படம் ஒன்றிற்கு புலவர்
ஆபிதீன் பாடல்கள் எழுதினார். ரவீந்தர் எடுத்த முயற்சி ஏனோ கைவிடப்பட்டது. படத்துக்காக எழுதப்பட்ட பாட்டுகளும் காற்றோடு போயிற்று. காணக்
கிடைக்கவில்லை!

புலவர் ஆபிதீன் நாகூரில் பிறந்தவர். அவருடைய தந்தையார் பெயர் முஹம்மது ஹ¥சைன் சாஹிப் மரைக்காயர். தாயார் பெயர் சுல்தான் கனி அம்மாள். உடன்பிறப்புகள் மூவர். சகோதரர் ஒருவர் , சகோதரிகள் இருவர். முதற்மனைவி நாகூர் ஜெய்னம்பு நாச்சியார். மூன்று பிள்ளைகளுக்குத் தாய். இரண்டாவது மனைவி சென்னை ஆமினா அம்மாள். ஆமினா பெற்றெடுத்த பிள்ளைகள் நால்வர். புலவர் ஆபிதீன் குடும்பத்தினர் நாகூரிலும் சென்னையிலும் வாழ்கிறார்கள். நீண்டகாலம் சென்னையில் வாழ்ந்திருந்த புலவர் ஆபிதீன் நலமே ஊர் திரும்பினார். ஊருக்குத் திரும்பிய சில நாள்களில் , 23-9-1966 அன்று , மறுமைப் பேறு அடைந்தார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் ஈடு செய்ய முடியாத இழப்பிற்குள்ளாகியது. அவரது இறப்புச் செய்தியை , மு. ஜாபர் முஹ்யித்தீன் எழுதியவாறு 15-10-1996 நாளிட்ட முரசொலி நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மகாவித்துவான் வா. குலாம் காதிரு அவர்களின் ஒரே மகனான தறுகாஹ் வித்துவான் வா.கு.மு, ஆரிபு நாவலர் உள்ளிட்ட பல புலவர்கள் கையறு நிலையில் இரங்கற்பா கவிதைகள் பாடினர். நாகூர் தெற்குத்தெரு , செய்யது பள்ளித் தெரு, பீரோடும் தெரு சந்திப்பில் புலவர் ஆபிதீன் நினைவில் ஒரு அரங்கம் கட்டப்பட்டு 'ஆபிதீன் அரங்கம்' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அடித்தளம் இட்டு நினைவைப் பசுமையாக்கியவர் மு. ஜாபர் முஹ்யித்தீன் என்பது
பதியப்பட்ட வரலாறு.

***

'நமது முற்றம்' இதழில் மார்ச் - ஆகஸ்ட் (2005)-ல் வெளியான கட்டுரை


***

பி.கு : 'மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே மாநிலத்தை தாங்கிடவோ எங்கள் பெருமானே' போன்ற அருமையான பாடல்களை இயற்றிய புலவர்
ஆபிதீன் பற்றிய இன்னொரு கட்டுரை , சமநிலைச் சமுதாயம் (ஜூன் 2006) இதழில் வெளிவந்துள்ளது. எழுதியவர் ஜே.எம். சாலி அவர்கள். 'ஒரு பெரும் மேதைக்கு வேண்டும் எல்லா அம்சங்களும் என்னிடம் உண்டு- உடம்பும் பணமும்தான் குறை' என்று புலவர் ஆபிதீன் சொன்னதாக அறிஞர் R.P.M கனி
அவர்கள் தனது 'இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்' நூலில் (1963) குறிப்பிட்டுள்ளார். 


http://www.blogger.com

No comments: