"காதல் ஒண்யும் கடவுள் இல்லடா:
அது ஹார்மோன் செய்யும் கலகம்தானடா"
எனக் கமலஹாஸன் எளிதாகப் பாடி விட்டாலும் (படம் :- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - பாடல்: ஆழ்வார்ப்பேட்டை ஆளுதான்) உளவியலும் உடலியலும் அறிவியலும் அதை ஒப்புக்கொண்டாலும் பார்க்கும் எல்லாரிடத்தும் பழகும் அனைவரிடத்தும் இந்த "ஹார்மோன் கலகம்" ஏற்படாதது ஏன்? 'காதல்' என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒன்று, உள்ளங்கள் இடம் மாறி, உணர்வுகள் ஒன்றி,உயிர் கலந்து உருவாவது எதன் வழி?
அது ஹார்மோன் செய்யும் கலகம்தானடா"
எனக் கமலஹாஸன் எளிதாகப் பாடி விட்டாலும் (படம் :- வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - பாடல்: ஆழ்வார்ப்பேட்டை ஆளுதான்) உளவியலும் உடலியலும் அறிவியலும் அதை ஒப்புக்கொண்டாலும் பார்க்கும் எல்லாரிடத்தும் பழகும் அனைவரிடத்தும் இந்த "ஹார்மோன் கலகம்" ஏற்படாதது ஏன்? 'காதல்' என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒன்று, உள்ளங்கள் இடம் மாறி, உணர்வுகள் ஒன்றி,உயிர் கலந்து உருவாவது எதன் வழி?
காதலில் உள்ளத்தைக் களவு செய்ய வாயிலாய் அமைவன கண்களே! கருவியாய் அமைவன பார்வைகளே!
" உனக்கென்ன
ஒரு பார்வையை வீசிவிட்டுச் சென்றுவிட்டாய்;
என் உள்ளமல்லவோ
வைக்கோலாய்ப் பற்றி எரிகிறது"
(மீரா-- கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்)
எனப் புலம்புவோனையும் ஆறுதல் படுத்துவதும் பார்வைகளே!
"இருநோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு
நோய் நோக்கு; ஒன்றந்நோய் மருந்து"
(இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 1 )
என்னை உண்டுவிடுவதுபோல் பார்க்கும் இவளது கண்களில்
என்னை(க்காதல்)த்தீப்பிடிக்கச் செய்யும் பார்வையும் உள்ளது; அ(க்காதல்)ச்
சூட்டைத் தணிக்கச் செய்யும் குளுகுளு பார்வையும் உள்ளது.
ஆணின் கண் கலந்த பெண்னும் இப்படியே துடிக்கிறாள்.
" உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்"
ரத்தம் கொதி கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
(வைரமுத்து - படம் :- பம்பாய்)
கட்டிளங்காளையரும் கட்டழகுக் கன்னியரும் நாள் தோறும் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.கண்களை நோக்கித் தயக்கமின்றி உரையாடுகின்றனர்.ஆயின், எவனோ ஒரு காளையும் எவளோ ஒரு கன்னியும் ஏதோ ஒரு புள்ளியில் 'உள்ளங்கள் இடம் மாறி உணர்வுகள் ஒன்றாகி உயிர் கலந்து' உறவாடக் கண்களே பொருட்டாக அமைகின்றன.
அந்தப் புள்ளியையே கம்பர்,
"கண்ணொடு கண்ணிணை கவ்வி
ஒன்றையொன்றுண்ணவும்...." என்கிறார்.
வள்ளுவர் கூறும் "உண்கண்" இதுதான்
இயல்பாகப் பலரோடும் கண்களைளைப் பார்த்து உரையாடும்போது ஏற்படா மாற்றம் குறிப்பிட்ட இருவரின் கண்கள் இணையாகக் கவ்வும்போது ஏற்படுகின்றது. இதையே,
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவு" என்பர் கவிஞர்.
(வைரமுத்து - படம் :- அலைகள் ஓய்வதில்லை)
இவ்வுறவு ஏற்பட்டுவிட்டால், நடை நடனமாகும்; பேச்சுக் கவிதையாகும்; மூச்சு இசையாகும்; வீச்சு ஓவியமாகும். உலகம் நிறக்கலவையாகத் தென்படும்; பார்ப்பனவெல்லாம் பரவசப்படுத்தும். இந்தக் காதலை ஒளித்து வைக்கவும் முடியாமல் வெளிப்படுத்தவும் முடியாமல் காதலர்கள் துடிப்பர்.
"இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்கு அரிதே"
(குறுந்தொகை 52 -வெள்ளிவீதியார் )
என் நிலையைக் கண்டுக் குழம்பியிருக்கும் நண்பர்களே!
கதிரோன் சுட்டெரிக்கும் பகல் போதில், பாறையின் மேல்
வைக்கப்பட்டிருக்கும் வெண்ணையைக் காவல் காக்கும் கையில்லா
ஊமையின் நிலையே என் நிலை. கையிருந்தால் உருகும் வெண்ணையைக்
காக்கலாம்; வாயிருந்தால் பிறரை அழைத்துக் கூறலாம். என் காதலைக்
கூறவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் தவிக்கிறேன்.
--எனும் சங்கப் பாடல் காதலை ஓர் இனிய துன்பமாகக் காட்டுகிறது.
source : http://www.inneram.com/200907191028/mozhi-2
No comments:
Post a Comment