கணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில் பயிற்றுவிக்கப் படும் பாமினி, ஆகியவற்றோடு தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப் பட்டு தமிழக அரசால் தரப் படுத்தப் பட்ட விசைப்பலகையாக அங்கீகரிக்கப் பட்டு இலங்கை, சிங்கப்பூர், அரசுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட தமிழ்99 விசைப்பலகை முறை போன்றவை அதிகம் புழக்கத்தில் உள்ளவை. இவற்றை எழுத கணினிக்கு பலவிதமான தட்டச்சு செயலிகளும் கிடைக்கின்றன.
அவற்றில் முரசு அஞ்சல், அழகி, குறள் தமிழ்ச்செயலி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்தச் செயலிகளில் மேற்கண்ட எல்லா முறைகளும் இணைந்தே இருக்கின்றன. தேவையான தட்டச்சு முறையில் தட்டச்சு செய்ய இயலும். தமிழா குழுவினரால் உருவாக்கப் பட்ட எகலப்பை என்னும் திறமூல விசைப்பலகை இயக்கி தமிழ்99, அஞ்சல், பாமினி தட்டச்சு முறைகளுக்கு தனித்தனியாக கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தில் அனைத்துச் செயலிகளிலும் தமிழில் உள்ளீடு செய்ய இயலும்.
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
அஞ்சல் முறையில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர்நெடில்களை எழுத இருவிசைகள், கா,கீ,கூ,கே,கை,கோ,கௌ போன்ற உயிர்மெய் நெடில்களை எழுத 3 அல்லது 4 விசைகள் அவசியம். ங,ஞ, த, ண,ள போன்ற குறில் எழுத்துக்களைக்கூட 3 விசைகள் பயன்படுத்தியே எழுத வேண்டியுள்ளது.
பாமினியில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் நெடில் எழுத்துக்களை எழுத shift உடன் 2 எழுத்து அவசியம். கீ,ஙீ,சீ….வரிசை, கே,ஙே,சே,ஞே…வரிசை போன்ற எழுத்துக்களை எழுத 3 விசைகள் அழுத்த வேண்டும். கோ,ஙோ,சோ,ஞோ….வரிசை எழுத்துக்களுக்கு 4 விசைககள் அழுத்த வேண்டியதாக உள்ளது.
தமிழ் தட்டெழுத்து முறையிலும் பாமினியைப் போலவே அதே விசைகள் அவசியம். கூடவே ழ வரிசை எழுத்துக்களை எழுத ழ=2, ழொ,ழோ,ழௌ=4, பிற ழ வரிசை எழுத்துக்கள்=3 என அதிகமான விசைகளைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
தமிழ்99 அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.
விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…
இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது. விளக்கமான ஒப்பீடு மற்றும் பயிற்சி முறைகளை கணிச்சுவடி மின்னூலில் காணலாம்.
No comments:
Post a Comment