Wednesday, November 25, 2009

ஆசையே முன்னேற்றத்துக்கு அறிகுறி

ஆன்மீகம் சொல்கிறது “ஆசையே அழிவுக்கு காரணம்”. ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.ஆசை இல்லாத மனிதன் பிணமல்லவா?

மீண்டும் ஆன்மீகம் சொல்கிறது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா?

”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.

மேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.

ஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.

மனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா ? என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.

ஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.

விடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...
 
நன்றி :

No comments: