Truth only உண்மை மட்டும்
Only the Truth in all aspects will bring Peace to the world. உண்மை மட்டுமே அனைத்தம்சங்களிலும் சமாதானத்தை உலகில் ஏற்படுத்தும்
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இவ்வுலகில் வாழ்வது எப்படியென்று வழி காட்டுகிறது அது.
படைத்தவன் இறைவன். பரிபாலிப்பவன் அவனே! அழிப்பவனும் அவன் தான்! பின்னர் மீளெழுப்புபவனும் அவனேதான்!
எனவே, படைத்துப் பரிபாலித்து மரணிக்கச் செய்து மீண்டும் எழுப்பினால் அதன் பின் என்ன, என்ற கேள்வி எழுகிறதல்லவா?
மீண்டும் ஏன் எழுப்பப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பலரும் பல விதமாகப் பதில் எழுதியிருக்கலாம்.
இறைவன் மனிதனைப் படைத்து அவனுக்குச் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்து அறிவையும் கொடுத்தான். அந்த அறிவின் உச்சமாக பகுத்தறிவை உரிமையாக்கி தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தையும் அளித்தான்.
மனிதனாக தனது வாழ்க்கை வழிமுறையை அமைத்துக்கொள்ள இடமளித்தானா என்றால் அதுதான் இல்லை. அப்படி இடம் கொடுத்திருந்தால் உலகில் அராஜகம்தான் ஆட்சி செய்யும்.
தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரனாகி இருப்பான். பலவீனமானவன் எல்லாம் அடிமையாக்கப் பட்டிருப்பான்.
ஆகவே, மனிதனுக்கு வாழ வேண்டிய வழிமுறைகளை அவ்வப்போது அனுப்பி வைப்பதாக அவனே மனிதனுக்கு அறிவித்தான். அதன் வெளிப்பாடுதான் காலத்துக்குக் காலம் அவனது தூதர்கள் மூலம் அவன் அனுப்பிய வேதங்கள்.
மனித வாழ்வில் ஒரு மனிதன் சந்திக்கக் கூடிய ஒவ்வொரு விடயத்திலும் அவனுடைய அறிவுறுத்தல், வழிகாட்டல் இல்லாமலில்லை!
அதில் ஒரு முக்கியமான அம்சம்தான் இரகசியம் பேணுதல். அது பற்றி இறைவன் என்ன கூறுகிறான் என்பதைச் சிறிது பார்ப்போம்.
அல்-முஜாதலா – தர்க்கம் செய்தல் என்ற 58 வது அத்தியாயத்திலே அவன் கூறுவதை கவனமாகப் படித்துச் சிந்தனைக்குட்படுத்துவது சாலச் சிறந்தது.
5வது வசனம்:
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோர் இவர்களுக்கு முன் சென்றோர் இழிவு படுத்தப்பட்டது போல இழிவு படுத்தப்படுவார்கள். தெளிவான சான்றுகளை அருளியுள்ளோம். (நம்மை) மறுப்போருக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறது.
அல்லாஹ்வை மறுப்போரைப் பற்றி குறிப்பிட்டு அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய தண்டனையையும் காட்டுகிறான். அப்படித் தண்டனை ஏன் வழங்கப் படுகிறது என்பதும் இங்கே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. தெளிவான சான்றுகளை அருளியுள்ளோம் என்று குறிப்பிடுவதன் மூலம் அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவர்களே மனிதர்கள் என்பதைத் தெளிவாக்கியுள்ளான்.
தொடர்ந்து 6 வது வசனத்தைப் படியுங்கள்.
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் உயிர்ப்பிக்கும் நாளில் அவர்கள் செய்ததை அப்போது அவர்களுக்கு அறிவிப்பான். அதை அல்லாஹ் கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அதை மறந்து விட்டனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.
மனிதன் குறைபாடுகளுடன் கூடிய ஒர் படைப்பேயன்றி வேறல்ல என்பதை இவ்வசனம் தெளிவாகவே சொல்கிறது. இதை மறந்துவிட்ட மனிதன் தன் மனோ இச்சையின் படி வாழ்ந்து அவனே அனைத்தையும் ஆளுமைக்குட்படுத்தியவன் என்ற மெத்தனப் போக்கில் தனக்குத் தானே நஷ்டமிழைத்துக் கொண்டிருப்பதை அறிய முற்படுகிறானில்லை. அதிகமான மனிதர்கள் இறைவன நம்புகிறார்கள் தான்! ஆனால், அவர்கள் அந்த இறைவனுக்கே பொருந்தக் கூடிய பண்புகளோடு நம்புகிறார்களா என்றால் அதுதான் இல்லை!
கல்லையும், மண்ணையும், சந்திர சூரியனையும், பன்றியையும், யானையையும், எலியையும், எருமையையும், பெரியார்களையும், ஷைகுகளையும், இறைவனின் தூதர்களையும் வணங்குகிறார்கள்.
அனைத்தும் அவன் கணக்கிலிருந்து தப்பா!
இனி 7 வது வசனம் என்ன சொல்கிறது?
வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் நான்காமவனாக இல்லாமல் இல்லை. ஐவரில் அவன் ஆறாமவனாக இல்லாமல் இல்லை. இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அவன் இல்லாமல் இருப்பதில்லை. பின்னர் கியாம நாளில் அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.
இரகசியம் பேசும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் தனக்கும் தான் எவனோடு பேசுகிறானோ அவனுக்கும் மட்டுமே பேசப் படும் விடயம் தெரியும் என்று! அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதை எத்தனை படிப்பினைகளைக் கண்டாலும் அறிந்தாலும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். இன்று நாடு நாடுகளின் தலைவர்களுக்கிடையே நடக்கும் இரகசியங்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இறைவன் நேரடியாக வந்து அவற்றை அம்பலப்படுத்துகிறானா என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருக்காது. உள்ளங்களை ஆட்சி செய்பவன் அவனே! அவற்றைப் புரட்டிப் புரட்டி எடுப்பவன் அவனே! இரகசியங்கள் இரகசியங்களாகவே இருக்காமைக்கு இறைவனின் பங்களிப்புத்தான் காரணமேயன்றி வேறொன்றல்ல. ஏனோ இந்த மனிதன் இதை மறந்து விட்டான்.
8 வது வசனத்தை உன்னிப்பாகக் கவனிக்கவும்!
இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப் பட்டார்களொ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.
பாவம் செய்வதிலும் வரம்பு மீறுவதிலும் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்வதிலும் இவர்கள் இரகசியமாகக் கூடிக் கூடி திட்டங்களை வகுத்து செயல் படுகின்றவர்கள், இவ்வசனத்தின் தாற்பரியத்தைச் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள். அவ்வாறு சிந்திப்பார்களேயானால் அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றி இறைவனின் ஏகத்துவத்தின் பால் திரும்ப வாய்ப்பிருக்கும்.
ஆனால், அவர்களெல்லாம் உள்ளத்தால் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றாமல் புகழ்வதில் மட்டும் தம்மை ஆக்கிக் கொண்டு அதன் மூலம் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர். அதனால்தான், மௌலீதுகளும், மீலாத் விழாக்களும் அரங்கேற்றப்படுகின்றன.
இப்படி அல்லாஹ்வின் விடயத்தில் அவனுடைய வேதத்தின் வழிகாட்டலுக்கு மாற்றமாக இரகசியம் பேசி மக்களை வழி நடத்தும் பேர்வழிகளின் நிலை என்னவென்பதை தெளிவாகவே பிரகடனம் செய்திருக்கிறான். திருந்த வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு இந்த வசனம் போதுமானது.
9 வது வசனம் எச்சரிக்கை கலந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மை மற்றும் இறையச்சத்தை இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
இரகசியம் பேசுதலில் ஒரு தெளிவான தடையை அல்லாஹ் விதிக்கிறான். பாவத்தின் பாற்பட்ட விடயங்கள், தனக்கு இன்னொருவர் மூலம் ஏற்பட்ட ஒரு விடயத்தில் அதற்கு ஒன்றுக்கொன்று செய்யும் போது வரம்பு மீறுதல், அல்லாஹ்வுடைய தூதருக்கு மாறு செய்தல் – அல்லாஹ்வின் தூதர் மீது இட்டுக்கட்டுதல், அவர் சொன்னதாக ஒரு விடயத்தை முன்வைத்தல், அவர் செய்யாத ஒரு செயலைச் செய்ததாக கூறுதல், அவர் அங்கீகரிக்காத ஒரு காரியத்தை அவர் அங்கீகரித்ததாக மக்கள் மத்தியிலே பரப்புதல், வணக்க வழிபாடுகளிலே புதியனவற்றைப் புகுத்துதல் – இப்படி பூர்த்தியாக்கப் பட்ட வேதத்திலே தமது மனோ இச்சைப் பிரகாரம் சட்டங்களை உருவாக்குதல். இவற்றை முழுமையாகத் தடை செய்து இந்த வசனம் தெளிவு படுத்துகிறது.
இரகசியம் பேசுவதற்குத் தகுதியான விடயங்களையும் அல்லாஹ் இந்த வசனத்திலே தெளிவு படுத்துகிறான். நல்ல விடயங்கள் எதுவாக இருந்தாலும் பேசலாம். இறையச்சம் பற்றிய விடயங்கள் சம்பந்தமாகப் பேசலாம்.
எனவே, இரகசியம் பேசும் போது மீண்டும் எழுப்பப்படக் கூடிய நாளை எண்ணிப்பார்த்து அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுமாறு அவன் முத்தாய்ப்பாய்க் கட்டளையிடுகிறான்.
10 வது வசனம் கூறுவதைச் சிந்தியுங்கள்.
இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. அல்லாஹ்வின் விருப்பமின்றி அவர்களுக்குச் சிறிதளவும் அவனால் தீங்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
பாவம், வரம்பு மீறுதல், அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தல் ஆகிய விடயங்கள் சம்பந்தமாக இரகசியம் பேசுதல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தீர்களா? இது அல்லாஹ்வுடைய வார்த்தை. வேறு விளக்கம் தேவையில்லை.
தொடர்ந்து அவன் அளிக்கும் உத்தரவாதம் ஷைத்தானால் எந்த ஒரு தீங்கையும் நம்பிக்கை கொண்டோருக்கு இழைக்க முடியாது. நம்பிக்கை கொண்டோர் எவ்வாறிருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையும் இங்கே இருக்கிறது. அது இறைவன் விதித்த நிபந்தனை. அதுதான்:
நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.
ஆகவே, இரகசியம் பேசுதல் சம்பந்தமாக இஸ்லாம் கூறும் விதிமுறைகளில் வரம்பு மீறாமல் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணி நடப்போமாக.
குறிப்பு: அல்-குர்ஆன் மொழியாக்கம் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தர்ஜுமாவிலிருந்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. அவருக்கும் பிரசுரிப்பாளர்களான மூன் பப்ளிஷர்ஸ்களுக்கும் நன்றி.
Thanks : http://truthonly-peace.blogspot.com
No comments:
Post a Comment