Wednesday, November 11, 2009

குறையுள்ள மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போனால்
கல்லும் வைரமாக
கையிலேயே இருந்தால்
வைரமும் கல்லாக

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

கையை விட்டுப் போகுமென்று
முன்பே அறிந்திருந்தால்
உயிரைக் கரைத்து ஊற்றி
ஒட்டுப்பசை நெய்திருப்பேன்

கையை விட்டுப் போகாதென்ற
கர்வத்தில்தானே நான்
கயிறிழுத்துப் பார்த்தேன்

வைரக் கல்லும் போனது
வைராக்கியக் கயிறும் போனது
கனவின் இழையும் பிரிந்தது
உயிரின் உயிரும் மரித்தது

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா

வந்ததில் தவறில்லை
சென்றதும் தவறில்லை
வருவதும் போவதும்
வாய்ப்பதும் கழிவதும்
வாழ்க்கையின் நிகழ்வுகள்

வந்தது கல்லாக
சென்றது வைரமாக
கருத்துப் பிழை
வருவதென்ன நியாயம்

குறையுள்ள
மனம் தந்தாய் இறைவா
Thanks to : http://anbudanbuhari.blogspot.com
நன்றி உங்களுக்கு;"அன்புடன் புகாரி

No comments: