நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்
புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன
கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன
உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது
வெளிச்சம் உங்களைப்
பொய்யுடன் பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்
என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்
வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்
வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்
வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்
வெளிச்சம் துயரம்
இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன்
இருட்டே உங்கள் தாய்
நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும் வெளிச்சம்
உங்களுக்குத் தந்த விசங்கள்
அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது
கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே
வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட கதைகள்தாம்
இருட்டை பயமென்று பிதற்றுகிறது
கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை
புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து
உருவங்களாலா உள்ளங்களாலா
யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்
வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
தினம் தினம் வெளிச்சம்
உங்களை ஏமாற்றுகிறது
தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்
பூமி இருட்டு
நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு
பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்
source:buhari.google pages .com
நன்றி:அன்புடன் புகாரி |
No comments:
Post a Comment