Thursday, November 26, 2009

இனி தூயதமிழில் தமிழ் பாடத்தை நடத்தவேண்டும்! பள்ளி கல்வித்துறை

சென்னை:    தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகளில் தமிழ் பாடத்தை தூய தமிழில் பிற மொழி கலப்பு இல்லாமல் நடத்த வேண்டும்' என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

  மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) பணிபுரியும் ஆசிரியர்கள் இதைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள், வார்த்தைகள் மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது என்றும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கூறி வந்தனர்.
  இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது.  அதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் மற்றும் பிற மொழி கலப்பு இல்லாமல் தூய தமிழில் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  இதை தமிழ் ஆசிரியர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மாணவர்கள் தூய தமிழ் சொற்களை கற்பதற்கு வழி செய்ய வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் புதிய தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி உத்தரவின்பேரில், இந்தச் சுற்றறிக்கை வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Source : http://www.inneram.com

No comments: