Monday, August 3, 2020

தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_9 / Abu Haashima




#டெஹ்ரான்_ஏர்போர்ட்

1975 ல் சவுதி அரேபியாவிலுள்ள தமாமுக்கு வேலைக்குச் செல்பவர்கள்
டெஹ்ரான் விமான நிலையத்தில்தான்
போய் இறங்குவார்கள்.
தமாமுக்கு மட்டுமல்ல ...
அந்த மாகாணத்திலுள்ள பல பகுதிகளுக்கும் டெஹ்ரான்தான்
முக்கிய விமான நிலையம்.
1980 ல் நாங்களும் அங்கேதான் போய் இறங்கினோம்.
பம்பாய் விமான நிலையத்தில்
அதிகாரிகளின் ஏகப்பட்ட கேள்விகளுக்கு
பதில் சொல்லி விட்டு செக்யூரிட்டி பகுதிக்கு வரும்போது அங்கேயுள்ள
செக்யூரிட்டிகள் நம்மை நன்றாகத் தடவி
ஒளித்து வைத்திருக்கின்ற பத்து இருபது
ரியால்களையும் பறித்துக் கொள்வார்கள்.
எங்கே ஒளித்து வைத்தாலும் கண்டு பிடிப்பதில் இவர்கள் சாத்தான்குளம்
போலீசாரைப்போல திறமை மிக்கவர்கள்.
பாம்பேயிலிருந்து விமானம் ஏறுவதால்
வீட்டில் தரும் பண்டம் பலகாரம் எதுவும்
நம்மிடம் இருக்காது.
நாலு பழைய சாரங்களும் சட்டைகளும்
புதுசா எடுத்த பன்னத்தனமான இரண்டு பேன்டுகளும் இருக்கும்.
பாம்பேயில் யூஸ் பண்ணின பேஷ்டில்
பாதி , ஒரு டூத் பிரஷ் , போனா போகுதுன்னு ஒரு லக்ஸ் சோப் , ஒரு துவர்த்து , இரண்டு உள்ளாடைகள் ,
ஒரு ஜோடி செருப்பு இவைகளோடுதான்
டெஹ்ரான்ல போய் இறங்கணும்.

அப்போதெல்லாம் அங்கேயும் கடுமையான கஸ்டம்ஸ் கெடுபிடிகள் உண்டு. சில அரபிகள் கட்டாயமாக அந்த
ஐம்பது ரூபாய் ஏர்பேக்கை திறந்து காட்டு என்பார்கள்.
நமக்கு அதை திறக்க லஜ்ஜையாக இருக்கும். அரபி அடம் பிடிக்கும்போது
மறுக்கவா முடியும் ?
திறந்து காட்டியவுடன் தலையோடு போட்டிருக்கும் துண்டை எடுத்து மூக்கை
மூடிக்கொண்டு போய்த்தொலை
( யா அல்லாஹ் ரோ ...) என்பான்.
ஏர்போர்ட்லயே முதல் அவமானத்தை சுமந்துகொண்டு வெளியே வந்தால்
நம்மை அழைத்துப்போக கம்பெனி டிரைவர்கள் வேன்களோடு வந்து காத்திருப்பார்கள்.
எங்களை அழைத்துப்போக அலீ என்ற
கறுப்பு அரபி ஒருவர் வந்திருந்தார்.
ஏழடி உயரம் . பிரபல மல்யுத்த வீரர் போன்ற தோற்றம்.
அவரைப் பார்த்த உடனேயே ஒருபயம்
வயிற்றில் உருள ஆரம்பித்தது.
இவர்தான் முதலாளியாக இருப்பார் என்று நான் நினைத்தேன்.
அவ்வளவு வெவரம்.

நாங்கள் ஒரு பதினேழு பேரோ என்னவோ எங்கள் பேட்சில் போயிருந்தோம்.
என்னோடு வந்தவர்கள்
கும்பகோணம் ஃபாரூக்
கம்பர்மேடு ஹாஹி
திருப்பந்துருத்தி அப்துல்லாசா
திருச்சி ஜமால்
கொடிப்கால்பாளையம் மஜீத்
மயிலாடுதுறை இப்ராஹீம்
நாகூர் அப்துல் ஹை
கோட்டாறில் இருந்து என் நண்பரகள் இருவர்
கடையநல்லூர் அபுல் பரக்காத்
இன்னும் சில மலையாளிகள் .

எங்களை ஒரு பெரிய வேனில ஏற்றி
தமாமுக்கு அழைத்துச் சென்றார்கள்.
சவுதி நேரம் மதியம் மூன்று மணி இருக்கும்.
டெஹ்ரானிலிருந்து தமாம் போகும் வழியெங்கும் பாலைவனமாக காட்சியளித்தது. அனல் காற்று வேறு வீசியது.
" பேக்டரில வேலைன்னு சொல்லி கூட்டிப்போய் பேக்டரி கட்டுற வேலையில
கொண்டு விட்டுருவானுவோ " என்று சொல்லி ஏற்கனவே பலபேர் பயம்காட்டி இருந்தார்கள்.
மனசுக்குள் அதுதான் உணமையோ என்ற சந்தேகம் எட்டிப் பாரத்தது.
அப்படியெல்லம் நடக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.
ஒருவழியாக தம்மாமில் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்த இடத்தின் பெயர் தெரியவில்லை.
தமாம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள இடம்.

சும்மா சொல்லக்கூடாது ....
எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த
அக்காமடேசன் புத்தம்புது பில்டிங்.
நம்மைப்போன்ற சகோதரர்கள் யாரெல்லாமோ ரத்தம் சிந்தி வேலை செய்து கட்டிய ஆறு மாடி பில்டிங்.
அதில் ஐந்து மாடிகள் எங்கள் கம்பெனி லேபர்கள் தங்குவதற்கும் கீழ்தளம் கடைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
நாங்கள் நாலாவது மாடி.
லிப்ட் கிடையாது .
ஏணிப்படிகளில் ஏறி நாலாவது மாடிக்குப் போனோம்.
அழகான அறை.
ஏசி வசதி
கட்டில்
புது மெத்தை
தலையணைகள்
புது கம்பளிப் போர்வை
சமையல் செய்து சாப்பிடுவதற்குத் தேவையான புத்தம் புதிய பாத்திரங்கள்.
கூடவே ...
200 சவுதி ரியால்கள் .
புத்தம் புதிய நோட்டுகளை டிரைவர் அலீ
அட்வான்ஸ் என்று சொல்லி எங்கள் கைகளில் தந்த அந்த கணத்தில்
ஒரு தாய் கஷ்டப்பட்டு பிள்ளையை பெறும்போது எவ்வளவு சந்தோஷப்படுவாளோ
அதைப்போன்றதொரு சந்தோஷத்தை
நாங்கள் எல்லோரும் உணர்ந்தோம்.

பாம்பேயில் பட்ட கஷ்டங்கள் மறைந்து போக தாய் தகப்பன் முகமும்
கட்டிய மனைவியின் முகமும்
கைக்குழந்தையாக இருந்த என் மகனின் முகமும் நினைவுகளில் வந்து மோத
தன்னையறியாமல் கண்களில் சிலதுளி கண்ணீர் .
அல்ஹம்துலில்லாஹ் .. !
பாம்பேயின் பாத்ரூம் வாசலில் படுத்முறங்கிய நான்
ஏசிக்கு நேரே கட்டிலின் மேலேறி
கம்பளிப் போர்வையை போர்த்திக் கொண்டு இதமான குளிரில் படுத்தாலும்
உறக்கம் வரவில்லை.
சவுதி வந்து சேர்ந்த செய்தியை வீட்டுக்குச் சொல்ல எந்த வசதியும் இல்லை.
மனசுக்குள் நினைவுகளை புதைத்தபடி
உறக்கம் வந்த அந்த அதிகாலைப் பொழுதில் டிரைவர் அலீ வந்து ...
" யா அல்லாஹ் ... யா அல்லாஹ் .. "
தட்டி எழுப்பினார்.
கம்பெனிக்குப் போக வேண்டும் ரெடியாகுங்கள் என்று துரிதப்படுத்த
நாங்கள் முதல நாள் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைப் போல
கலங்கிப் போனோம்.

இன்ஷா அல்லாஹ்
தொடரும்.


* படங்கள்


பழைய டெஹ்ரான் ஏர்போர்ட்
தமாம் போகும் வழியிலுள்ள பாலைவனம்
தம்மாம்




No comments: