காஷ்மீரின் ஆப்பிள் தோட்டங்களைப்போல
கம்பம் பள்ளத்தாக்கின்
திராட்சை தோட்டங்களைப்போல
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையின் மலர் தோட்டங்களைப்போல ...
தாதாக்கள் செழித்து வாழ்ந்த தோட்டம் பாம்பே .
தாதாக்களுக்கு பெயர் பெற்று விளங்கிய
மாநிலம் மஹாராஷ்டிரா !
ஹாஜி மஸ்தான்
வரதராஜ முதலியார்
தாவூத் இப்ராஹிம்
போன்ற தாதாக்கள் அங்கே கொடிகட்டிப் பறந்தார்கள்.
இவர்களின் கீழ் வேலை செய்ய ஏராளமான குட்டி தாதாக்களும்
இருந்தார்கள்.
இவர்கள் ஏரியா வாரியாக தங்கள் சாம்ராஜ்யத்தை திறம்பட நடத்தி வந்தார்கள்.
மஸ்தானும் முதலியாரும் தமிழர்கள் என்பதால் அவர்களிடம் பல தமிழர்கள்
செல்வாக்கோடு இருந்தார்கள்.
தாராவி, மாதுங்கா , செம்பூர் போன்ற
பல பகுதிகளில் கணிசமான அளவுக்கு
தமிழர்கள் வாழ்ந்தார்கள்.
தாராவி பாம்பேயின் இதயம் போன்ற பகுதி. அந்த இடத்திலிருந்து தமிழர்களை
விரட்டியடிக்க எத்தனையோ முயற்சிகள்
நடந்து கொண்டிருந்தன.
அப்போதெல்லாம் தமிழர்களுக்கு பக்கபலமாக இருந்து அந்த முயற்சிகளை
முறியடித்தவர்கள் மஸ்தானும் வரதராஜ முதலியாரும்தான்.
அங்கேயுள்ள தமிழர்கள் இவர்களை
கடவுள் அளவுக்கு மதித்தார்கள்.
அந்தோணியும் ஒரு தமிழன்தான்.
சொந்த ஊர் திருநெல்வேலி.
குடும்பமே பாம்பேயில்தான் வசித்து வந்தது. அந்தோணியும் சின்ன வயசிலேயே பாம்பேவாசியாகத்தான் வளர்ந்தான்.
அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.
அவனை மற்றொரு கோஷ்டி கொலை செய்து விட்டது.
அதுவரை மைனராக சுற்றிக் கொண்டிருந்த அந்தோணி அண்ணன்
கொலைக்கு பழி வாங்குவதற்காக அருவாளை கையிலெடுத்தான் .
கார் ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் அண்ணனைக் கொன்ற எதிரிகளில் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.
புயலென எதிரே வந்த அந்தோணி அவனை அப்படியே அலாக்காக தூக்கி தண்டவாளத்தில் போட
வேகமாக வந்த மின்சார ரெயில் அவனை அரைத்துத் தள்ளிவிட்டு போய் விட்டது.
இப்படியாக அண்ணனைக் கொன்ற ஏழு பேரை போட்டுத் தள்ளிய பிறகு
ஒரு முக்கியமான தாதாவாக உருவெடுத்தான் அந்தோணி.
பாம்பே போலீசார் அந்தோணியைப் பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும்
அவனை பிடிக்க முடியவில்லை.
ஒருமுறை இரண்டாவது மாடியில் தங்கியிருந்த அவனை யாரோ காட்டிக் கொடுக்க போலீஸ் பட்டாளம் அந்தப் பகுதியை சூழ்ந்து கொண்டது.
கொஞ்சமும் யோசிக்காமல்
இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தப்பிச் சென்ற வீரவரலாறும்
அந்தோணிக்கு உண்டு .
ஒரு மாலை நேரத்தில் கார் ரோட்டின் சாலை ஓர ரெயில்வே காலனி திண்ணை ஒன்றிலிருந்து
அந்தோணியின் வீர தீர பராக்கிரமங்களை பற்றி நண்பர்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
எங்களுக்கு முன்னரே பாம்பே வந்தவர்கள் அந்தோனியைப் பற்றி
கதை கதையாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வேலை முடிந்து எங்களோடு கதைப்பேச வந்த சுவிஸ் ஏர்லைன்ஸ் ராமச்சந்திரன்
எங்களையே கொஞ்ச நேரம் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு மெதுவாக .....
இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்களே அந்தோணி .
நீங்கள் யாராவது அவனை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
நாங்கள் இல்லை என்றோம் .
அதுவரை எங்களுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து போவதை சுட்டிக் காட்டி அதோ போகிறானே அவன்தான் அந்தோணி என்றார்.
எங்களுக்கு திக்கென்றது.
அவனை பாம்பேவாலா என்று நினைத்துக்கொண்டு நாங்கள்
பேசிக் கொண்டிருந்தோம்.
அத்தனை நேரமும் நாங்கள் பேசியதை கேட்டுக் கொண்டு அவன் அமைதியாக
எழுந்து சென்று விட்டான்.
அச்சு அசல் நடிகர் ரகுவரன்தான்.
ரகுவரனை விட கொஞ்சம் கூடுதல் உயரம்.
ஆனால் திடம் கொண்ட உடம்பு .
எவனையும் எதிர் கொள்ளக்கூடிய அபார துணிச்சல் கொண்ட பார்வை .
அந்த மங்கிய வெளிச்சத்திலும் ஒரு ஹீரோவைப்போல் அந்தோணி நடந்து செல்வதை பார்க்க முடிந்தது.
அந்தோணி மிகவும் நல்லவன் .
அவனை கொலைகாரனாக்கியது அவன் அண்ணனைக் கொலை செய்த
அவனது எதிரிகள்தான்.
மற்றபடி அவன் யாரையும் துன்புறுத்துவதில்லை.
தமிழர்கள் மீது யாராவது கை வைத்தால் அவன் தட்டிக் கேட்க தயங்க மாட்டான்.
இங்கே உள்ள தமிழர்களுக்கு அந்தோணி நல்ல பாதுகாப்பு என்று சொன்னார் ராமச்சந்திரன்.
அதன் பிறகு அந்தோணி மீது எங்களுக்கு தனி மரியாதையே ஏற்பட்டது.
பகல் நேரங்களில் அவனைக் காணவே முடியாது.
விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் நாட்களில் கையில் நீள நீளமான வாள்களையும் பட்டாக் கத்திகளையும் வைத்துக் கொண்டு அவனது
அடியாட்கள் ஒவ்வொரு கடையிலும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
பணம் கொடுக்காவிட்டால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை.
விநாயகர் சதுர்த்தி நடத்துவதே
அந்தோணிதான்.
கார் ரோட்டின் கொஞ்சம் தூரத்தில் ஒரு பள்ளிவாசல் இருந்தது.
அங்கே அடிக்கடி தொழுகைக்காக செல்வது வழக்கம்.
ஒருநாள் அதிகாலை சுபுஹு தொழுகைக்காக அந்த பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுப் போனேன்.
போகும் வழியில் ஒரு போலீஸ் சவுக்கி இருக்கும். அதை கடந்துதான் பள்ளிக்குப் போக வேண்டும்.
நான் போகும்போது போலீஸ் சவுக்கின் வாசலில் ஒரு மனிதத் தலை
வெட்டி வைக்கப்பட்டிருந்தது.
தரையெல்லாம் ரத்தம் கொட்டிக் கிடந்தது. சிலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அன்று முழுவதும் கார் ஏரியாவை
துப்பாக்கி ஏந்திய போலீசார் சல்லடைபோட்டு கொலைகாரர்களை
தேடிக் கொண்டிருந்தார்கள்.
யாரும் சிக்கவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு
ஒரு மதிய நேரத்தில் எங்கள் குடியிருப்பின் பின் பக்கம் இருந்த வயல்வெளியில் பயங்கர சத்தம் கேட்டு
நாங்கள் மாடியில் நின்றபடியே கவனித்தோம்.
அங்கே ஒருவன் ஓடிக் கொண்டிருந்தான். அவனை ஓட ஓட துரத்திச் சென்ற போலீசார் அங்கேயே அவனை சுட்டுக் கொன்றார்கள்.
நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம்.
அப்போதும் அந்தோணி சிக்கவில்லை.
நான் 1980 ல் அரேபியா போய் விட்டேன்.
அந்தோனி என்ன ஆனான் என்பது கடைசிவரை தெரியாமலே போய்விட்டது.
1980 க்குப்பிறகு மஸ்தானும்
செல்வாக்கிழந்து விட்டார்.
ஒரு அரசியல் கட்சிகூட ஆரம்பித்தார்
ஒன்றும் எடுபடவில்லை.
1994 ல் இறந்து விட்டார்.
வரதராஜ முதலியாரும்
தமிழ் நாட்டுக்கு வந்து சில வருடங்களில்
இறந்து போனார்.
இப்போது மும்பையில்
தமிழ் தாதாக்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
இப்படி பல திகில் அனுபவங்களோடுதான் பாம்பேயில்
வாழ முடிந்தது . விசா அடித்து
விமானத்தில் ஏறும் நிமிஷம்வரை
அந்த பரபரப்பு அடங்கவே இல்லை.
அபடிப்பட்ட ஒரு பாம்பே வாழ்க்கையை
இனி யாராலும் வாழ முடியாது.
இன்ஷா அல்லாஹ்
நாளை
தொடரும் ...
#அபு_ஹாஷிமா
* படத்தில்
ஹாஜி மஸ்தான்
வரதராஜ முதலியார்
No comments:
Post a Comment