Thursday, July 30, 2020

Abu Haashima #தொட்டால்_தொடரும் ... #குறுந்தொடர்_5



இந்த ஐந்தாம் அத்தியாயத்தை நான் எழுதவில்லை.
தொட்டால் தொடரும் என்ற இந்த தொடர்
தொடர்ந்து வரும் வேளையில்
என் மனதை வருந்த வைத்த இந்த
சம்பவத்தை இன்றைய அத்தியாயமாக
பதிவு செய்து கோயா அண்ணனுக்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்.

#எம்_சிராஜுதீன்_அஹ்ஸனி அவர்கள்
எழுதிய இந்தப் பதிவை
காஜா முகைதீன்
என்பவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதை செம்மைப்படுத்தி பதிவிட்டிருப்பவர் அண்ணன்
#இக்வான்_அமீர் அவர்கள்.
நன்றி அண்ணன் !

#கோயா_அண்ணனின்_பெட்டி

இன்று நாங்கள் மூவரும் சிகிக்சை முடிந்து எங்கள் அறைக்கு திரும்பினோம். ஆனால் எங்களுடன் சிகிச்சைக்கு வந்த கோயா அண்ணன் திரும்பி வரவில்லை. இனி அவர் வரவும் மாட்டார்.

அவரது நினைவுகளால் சூழப்பட்ட அந்த அறையில் எங்களுடன் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக வாங்கிய சில பொருட்கள் அடங்கிய பெட்டியும் இருந்தது.

அந்த பெட்டியை கண்ணீர் மல்கிய கண்களுடன் நீண்ட நேரம் தடவிக் கொண்டிருந்தோம். எங்கள் ஸ்பரிசத்தை அந்த பெட்டி நிச்சம் உணர்ந்திருக்கும்.

நாங்கள் நால்வரும் அந்த அறையில் ஏழு வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம். எங்கள் மூவரையும் விட கோயா அண்ணன் வயதில் மூத்தவர். அவர் எங்கள் அறையின் மூத்த உறுப்பினர் எனலாம்.

கொரோனா ஆரம்பம் முதலே அறையில் பெரும்பகுதி நேரமும் கோயா அண்ணனின் உடல் நலம் சம்பந்தமான வகுப்புகள் நடைபெற்று வந்தன. “கவனமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்!” – என்று அவர் அறிவுறுத்தியவாறு இருப்பார்.

கோயா அண்ணன் தமது வாழ்வின் பெரும்பகுதியை - சுமார் கால்நூற்றாண்டு காலம் அதாவது 24 ஆண்டுகள் அரேபிய மண்ணில் செலவழித்திருந்தார். கூடிய சீக்கிரத்தில், அரேபிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தாயகம் திரும்பி கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க சிந்திக்கத் தொடங்கி அதற்காகத் தயாராகி கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில்தான் கொரோனாவின் அச்சுறுத்தல் துவங்கி அவரது பயணத்தை தடைப்போட்டு அங்கேயே தங்க வைத்தது.

“அனைத்து பொறுப்புகளையும் முடித்து விட்டேன். இனி நான் என் குடும்பத்திற்கு ஒரு சுமையாகாமல் இருந்தாலே போதும்!" - என்று அவர் வேடிக்கையாகச் சில நேரங்களில் சொல்வது எங்கள் காதுகளில் ஒலித்தவாறே உள்ளது.

அரேபிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் நினைத்திருந்த லட்சியங்களை எல்லாம் நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், “லட்சியத்தை அடைவதற்காக சொந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன்!” - என்ற துக்கம் சில நேர பேச்சுகளில் அவரை அறியாமல் வெளிப்படுவதுண்டு.

மூன்று சகோதரிகளின் திருமணம்.
ஒரு சிறிய வீடு. தனது திருமணம். இவைதான் அவருடைய லட்சியம். இதற்காக 24 ஆண்டுகள் ஒரு பாலைவன பூமியில் ஏராளமான வியர்வை துளிகளை சிந்த நேரிட்டது. இதன் விளைவாய் சம்பாதித்தது வித விதமான நோய்களை மட்டுமே!

சொந்தமாகத் தனக்காக தான் சம்பாதித்த நோய்களுடன் ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் பாவம் கோயா அண்ணனின் எண்ணம். பல நேரங்களில் இதை அவர் வாய்த்திறந்து சொல்லவும் செய்திருக்கிறார்.

எல்லாம் சகித்து ஒரு வழியாக ஊர் செல்வதற்காக 1300 திர்ஹம் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்த ஒரு வார இடைவேளையில்தான் கொரோனா அவரை பாதித்தது.

ஊர் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த நாள் முதல் ஒரு தேனீ போலவே அவர் மாறிவிட்டார். வேலை முடிந்து வரும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வந்து ஊருக்கு கொண்டு செல்வதற்காக தயாராக்கி வைத்திருக்கும் பெட்டியில் வைப்பார். ஊர் செல்ல தயாராகும் புலம்பெயர்ந்து வாழும் எல்லா அரேபிய வாழ் மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கும்!

கோயா அண்ணனின் இந்த செயலை பார்த்து கொண்டிருக்கும் நாங்கள், “அண்ணே, போறப் போக்கைப் பார்த்தால், இந்த பெட்டியை ஒரு கிரேன் வைத்துதான் தூக்க வேண்டியிருக்கும்!” – என்று சிரித்தபடியே சொல்வோம்.

இதைக் கேட்டு வாய்விட்டு சிரிக்கும் அவர், “உயிர் இருந்தால், இந்தப்பெட்டியுடன் செல்வேன். இல்லாவிட்டால் மற்றொரு பெட்டியில் போவேன். இனி நான் எடுத்து போகாவிட்டாலும் நீங்கள் இதை என் வீட்டில் கொண்டு சென்று ஒப்படைப்பீர்கள் என்று எனக்கு தெரியும்!” – என்பார்.

ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த நாளில் இருந்து எல்லாருக்குமான உணவை, கோயா அண்ணன் தான் சமைப்பார். “நான் ஒரு வாரம் மட்டும் தானே இருப்பேன். என் தம்பிமார்களுக்கு என் கையாலேயே சமைத்து பறிமாறுகிறேன்!” – என்பார்.

ஒரு வெள்ளிக்கிழமை.

கோயா அண்ணன் சமைத்த சுவையான பிரியாணியை சாப்பிட்டவாறு, “அண்ணே, ஊருக்கு சென்று என்ன செய்வதாக உத்தேசம்?” – என்று கேட்டோம்.

அதற்கு கோயா அண்ணன் சொன்னார்: “ஊருக்கு சென்று ஒரு சின்ன மளிகை கடை வைத்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று நினைத்துள்ளேன்!” பிறரின் நலன்நாடும் அவரது எண்ணம் சிறக்க நாங்களும் பிரார்த்தித்தோம்.

“தம்பிங்களா, பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது! உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை என் கடையிலிருந்துதான் வாங்க வேண்டும்!” – என்று சொல்ல, நாங்கள் அனைவரும் வாங்விட்டு சிரித்தோம்.

அன்று இரவு கோயா அண்ணனுக்கு லேசான காய்ச்சல். அதுதான் ஆரம்பம். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தோம். கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு கோயா அண்ணனை மருத்துவமனையில் சேர்த்து கொண்டு, எங்களை தனிமைப் படுத்தினார்கள்.

இரு நாட்களுக்குப் பிறகு எங்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது

அப்போதும், கோயா அண்ணன், “உங்களுக்கும் கொரோனாதான் தம்பிங்களா! மகிழ்ச்சியடைய வேண்டாம்!” – என்று கிண்டலடித்து சிரித்தார்.

கோயா அண்ணனின் அந்த சிரிப்பு இன்றும் நினைவில் இருக்கிறது.

அதன்பிறகு, “டிக்கெட் பணம் என்னவாகும்? அதைபற்றி விசாரிச்சு சொல்லுங்கள். நீங்கள் அந்த பணத்தை திரும்ப வாங்கி வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்!” - என்று சொல்லிவிட்டு, “எல்லாம் சரியாகிவிடும். பார்ப்போம்!” - என்று சொல்லி போனை துண்டித்தார்.

அடுத்தடுத்த நாட்களில் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை.

அதன்பின்னர்தான் கோயா அண்ணன் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்டார்! என்ற செய்தி இடியாய் வந்து இறங்கியது.

எங்களால் அழக்கூட முடியவில்லை. ஏழு ஆண்டுகள் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றாய் வாழ்ந்த நாங்கள் கோயா அண்ணனின் நெற்றியில் முத்தமிட இயலாத நிலைக்கு ஆளானோம்.

கதறி அழவேண்டுமென்றுதான் முதலில் தோன்றியது.

அரேபிய மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு குடும்ப சூழல் காரணமாகவே அந்த பாலை வாழ்வை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் வெறும் பாலை வாழ்வியல் பொம்மைகள் மட்டுமே! குடும்பத்தாரின் இன்பங்களுக்காக, சுமைகளுக்காக தொலைதூரத்தில் யாருக்கும் தெரியாமல் சுமை சுமக்கும் சுமைதாங்கிகள்!

நாங்கள் அறைக்கு திரும்பி வந்தோம்.

கோயா அண்ணன் இல்லாமல் அவரது கட்டில் தனியே கிடக்கிறது. அதை வெறித்துப் பார்க்கிறோம். எங்களால் நம்ப முடியவில்லை. பாசம் நிறைந்த அந்த மனிதன் இன்று இந்த பூமியில் எங்களுடன் இல்லை. “இறைவா இது என்ன சோதனை!” – எங்கள் விழிகள் கண்ணீரால் நிரம்புகின்றன.

கட்டிலுக்கு கீழே கோயா அண்ணனின் பெட்டியை நாங்கள் திறந்து பார்த்த போது, எங்கள் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியதை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஊரிலுள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக கோயா அண்ணன் வாங்கி வைத்திருந்த ஸ்பிரே, அத்தர் வாசனை திரவியங்கள், சோப்பு போன்ற ஏராளமான பொருட்கள் அதில் இருந்தன. அவற்றை பத்திரமாக கோயா அண்ணனின் வீட்டில் ஒப்படைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம்.

பாவம்..! கோயா அண்ணன்தான் ஊர் சேரவில்லை! அவர் ஆசையோடு சேகரித்த பெட்டியாவது ஊர் போய் சேரட்டும்!

#இன்ஷா_அல்லாஹ் ...
#தொடரும்


No comments: