Monday, August 3, 2020

தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_10 / Abu Haashima







#மிடில்_ஈஸ்டின்_பிரம்மாண்டம்

அந்த அதிகாலை வேளையில்
நாங்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம்.
நாங்கள் தங்கி இருந்த பில்டிங்கிலிருந்து
நாலைந்து கம்பெனி பஸ்கள் புறப்பட்டன. சாப்பாட்டு பொட்டலங்களோடு தொழிலாளர்கள்
பஸ்களில் ஏறி அமர்ந்து கொள்ள
நாங்களும் ஒரு பஸ்ஸில் கசாப்புக்கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆடுகளைப்போல ஏறி உட்கார்ந்து கொண்டோம்.
அந்த அதிகாலை நேரம் ஆறு மணிக்கே
சூடு ஆரம்பமாகி இருந்தது.
இனி இந்த சூட்டோடத்தானே
வாழப் பழகிக் கொள்ள வேண்டும்
என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டோம்.

கொஞ்ச நேரத்தில் தமிழ்நாட்டு டிரைவர்
#சாமி பஸ்ஸைக் கிளப்ப அது தொழிற்சாலையை நோக்கி விரைந்தோடியது.
சாமி ராணுவத்தில் சில வருடங்கள் பணியாற்றி விட்டு சவுதி வந்தவர்.
சின்னத்தம்பி படத்தில் வரும் பாகவதரைப்போல பெரிய மீசை .
எல்லோரிடமும் ரொம்ப பாசமாக பழகக் கூடியவர் என்பதை முதல் நாளே தெரிந்து கொண்டோம்.

போகும் பாதையை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டே சென்றோம்.
வழியில் வானுயர்ந்த சில அரசு கட்டிடங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அவை அத்தனையும்
புத்தம் புது கட்டிடங்கள்.
அதன் பக்கத்திலேயே தமாமின் பிரபலமான அப்துல்லா போர்டு ஆஸ்பத்திரி.
அதற்கு கொஞ்ச தூரத்தில் தமாம் இன்டஸ்ட்ரியல் ஏரியா .

நாங்கள் வேலைக்கு சேர்ந்த கம்பெனி
#நேப்கோ
#நேஷனல்_பேப்பர்_புராடக்ட்_கம்பெனி.
மிகப் பிரம்மாண்டமான தொழிற்சாலை என்று அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சொன்னார்கள்.
பேக்டரிக்குள் நுழைந்த பிறகு அது உண்மைதான் என்பதை புரிந்து கொண்டோம்.

பஸ்ஸில் வந்த தொழிலாளர்கள் அவரவர் செக்‌ஷனுக்கு வேலைக்குச் சென்றுவிட எங்களை ஒரு மலையாளி
உள்ளே அழைத்துச் சென்றார்.
பிளாஸ்டிக்
பேப்பர்
டிஷ்யு தயாரிப்பு என பன்முகத்தன்மை
கொண்ட பேக்டரி அது.
ஒவ்வொரு செக்‌ஷனாக எங்களை அழைத்துச் சென்று காண்பித்தார்.
வாழ்க்கையில் முதன் முறையாக அப்படி ஒரு தொழிற்சாலையை அப்போதுதான்
பார்க்கிறோம்.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கே
பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
இலங்கையர்களும் உண்டு.
எங்களைப் பார்த்து சிலர் சினேகமாக
புன்னகைத்தார்கள்.
மகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் எங்களை ஒரு திறந்த வெளிக்கு
அழைத்துச் சென்று வரிசையாக நிற்கவைத்தார்.
நேரம் காலை எட்டுமணி.
பேக்டரி மானேஜர் மிகச் சரியாக
அந்தநேரத்திற்கு அங்கே வந்து சேர்ந்தார்.
#மிலாட் என்பது அவர் பெயர் .
ஐந்தடி உயரம் .குறுந்தாடி .
பார்வையில் கம்பீரம். லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
அந்த கம்பெனியின் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் ஆள் அவர்.
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர்
எங்கள் பெயர்களை சத்தமாக சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
நாங்களும் ... பே ... ம்பே .. அம்பே ....
இம்பே ... என்று ஆடுகளைப்போல
பயந்து கொண்டே பெயர்களைச் சொன்னோம். எங்கள் நடுக்கத.தைப் பார்த்து அவருக்கு சிரிப்பு வந்தது.

எங்களில் சிலரை பேப்பர் பேக்டரிக்கும்
சிலரை டிஷ்யு பேக்டரிக்கும்
மீதிப்பேரை பிளாஸ்டிக் பேக்டரிக்கும்
பங்கு வைத்தார்.
அதன்பிறகு எங்களை பங்கு வைக்கப்பட்ட இடங்களில் கொண்டு போய் அங்கேயுள்ள சூப்பர்வைசர்களிடம்
ஒப்படைத்தார் அந்த உதவியாளர்.

நான் ஒதுங்கியது பிளாஸ்டிக் கடலில்.
ஆமாம் .. அது கடல்தான்.
பிளாஸ்டிக் பேக்டரி என்றாலும்
அது நான்கு பிரிவுகளைக் கொண்டது.

பிளாஸ்டிக் எக்ஸ்ட்ரூடர் extruder
பிளாஸ்டிக் பிரின்டிங்
பிளாஸ்டிக் கட்டிங்
பிளாஸ்டிக் ரீ சைக்கிளிங்.
என்னை பிளாஸ்டிக் கட்டிங் செக்‌ஷனில்
கொண்டுபோய் தள்ளினார்கள்.

தொடரைத் தொடர்வதற்கு முன்னால் பேக்டரியை பத்தி கொஞ்சம் சுருக்கமாக சொல்லியாகணும்.

* நேப்கோவின் இந்த பிளாஸ்டிக் எக்ஸ்ட்ரூடர் செக்‌ஷன்
மகா பிரம்மாண்டம்.
ஏழெட்டு மெஷின்கள் வரிசையாக
நிறுவப்பட்டிருக்கும்.

அரிசி ஆலைகளில் நெல்லை ஒரு மெஷின் வாயில் தட்டினால் இன்னொரு
வாய் வழியாக அரிசி வருவதைப்போலத்தான் இந்த மெஷின்கள்.

இங்கேயுள்ள மெஷினில் பிளாஸ்டிக்
கிரானுவல்ஸ் இருக்கும் மூட்டைகளை கத்தியால் கீறி கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இந்த எக்ஸ்ட்ரூடர் மெஷினுக்கு ஓய்வே கிடையாது.
24 மணிநேரமும் ஓடிக் கொண்டே இருக்கும்.
இந்த பிளாஸ்டிக் மூலப்பொருள்
முத்துக்களைப்போல பார்க்க வெண்மையாக அழகாக இருக்கும்.
அதிபயங்கரமான சூட்டில் அது உருகி
பிரம்மாண்டமான பலூனைப்போல
உயரேச் சென்று மடிந்து கீழே வரும்.
அதை ரோல்களாக சுற்ற விட்டு குறிப்பிட்ட அளவுகளில் கட் செய்து எடுப்பது அதில் வேலை செய்பவர்களின் வேலை . மகா கஷ்டமான வேலை.
வேலையை விட அந்த சூட்டில் நிற்பது
பயங்கரம்.

* அந்த ரோல்கள் பிரின்டிங் செக்‌ஷனுக்குப் போகும்.
இது எக்ஸ்ட்ரூடருக்கு நேர் மாற்றம்.
புல் ஏ.சி. பிரின்டிங் உடனேஉலர வேண்டும் என்பதற்காக குளிரூடரடும் வசதி செய்யப்பட்டிருக்கும்.
இங்கே கம்பெனிகளுக்கான தேவையுள்ள டிசைன்கள் அதில் பிரின்டாகி
கட்டிங் செக்‌ஷனுக்கு வரும்.

* அவற்றை வகைவகையான மெஷின்களில் பொருத்தி
வண்ண வண்ண பிளாஸ்டிக் பேக்குகளாக மாற்றுவார்கள்.
நம்முடைய நகைக்கடை , ஜவுளிக்கடை
பேக்குகள் அப்படித்தான் உற்பத்தியாகி
வருகின்றன.

* அதில் வேஸ்டாகி வரும் பிளாஸ்டிக்கை
ரீ சைக்ளிங் செய்து மீண்டும்
பிளாஷ்டிக் ஷீட் ஆக்குவார்கள்.

இப்படி பிளாஸ்டிக் ரோல்களை
பேக்குகளாக மாற்றும் கட்டிங் செக்‌ஷனில்தான் எனக்கு வேலை.
மெஷின் ஹெல்ப்பர் .

ஒரு கட்டிங் மெஷினில் ஐந்து வருடமாக
வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஜார்ஜ் என்ற மலையாளி ஆப்பரேட்டரின்
ஹெல்ப்பராக
1980 ம் ஆண்டு மார்ச் மாதம் 12 ம்நாள்
நான் பதவி ஏற்றுக் கொண்டேன்.

இன்ஷா அல்லாஹ்
தொடரும் ...


No comments: